திங்கள், 28 அக்டோபர், 2013

காத்திருந்தால் அன்பு கூடுமா?


 அலைகள் உரசும் கடலருகில்
   அமைதி யற்று அமர்ந்திருந்தேன்!
கலைகள் பேசும் கண்ணழகி!
   கவிதை பாடும் சொல்லழகி!
சிலைகள் தோற்கும் உடல்அழகி!
   சிந்தை முழுதும் பண்பழகி!
நிலையாய் மனத்தில் நின்றவளோ
   நேரம் கடந்தும் வரவில்லை!

பொன்னை நிகர்த்த சூரியனோ
   புதைந்து போனான் கடல்நடுவில்!
முன்னே தெரிந்த கடல்வானம்
   முகத்தில் கருமை பூசியது!
அன்பாய்க் காக்கச் சொன்னவளை
   அன்றோ இன்னும் காணவில்லை!
என்னே அவளின் அலட்சியமோ
   என்னை என்ன நினைத்துவிட்டாள்!?

தனியா கோபம் மூண்டுவிட
   தாபம் நெஞ்சைத் தாக்கிவிட
இனியும் எனக்கு பொறுமையின்றி
   எழுந்து போக கிளம்பிவிட்டேன்!
பனிபோல் எதிரில் ஓர்உருவம்!
   பார்வை குறுக்கி பார்த்தாலோ 
தனிமை கோடுமை போக்கிவிட
   தனியே அவள்தான் வருகின்றாள்!

அவளைப் பார்த்த மறுநொடியே
   அடங்கா கோபம் ஓடியதேன்?!
கவலை போக்கும் மருந்தாக
   காய்ந்த மனத்தில் நீராக
குவளைக் கண்ணைக் கண்டவுடன்
   கோடி இன்பம் கூடியதேன்?
இவளை நினைத்துக் காத்தெல்லாம்
   இன்னும் அன்பைக் கூட்டியதோ!!

அருணா செல்வம்.
28.10.2013

(இந்தக் கவிதை,
“மா – மா - காய்
  மா – மா – காய்“

என்ற இலக்கணத்தில் அமைந்த அறுசீர் விருத்தம்)

31 கருத்துகள்:

  1. அவளைப் பார்த்த மறுநொடியே
    அடங்கா கோபம் ஓடியதேன்?!
    >>
    அங்கயும் அப்படித்தானா!? என்னவர் மேல செம கோவத்துல இருப்பேன், வந்ததும் ஒரு பிடி பிடிக்கனும்ன்னு மனசுல உருப்போட்டுக்கிட்டு இருப்பேன். அவர் குரல் கேட்டதும் கோவம்லாம் பறந்து போய்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபம் பறந்து போகாமல் இருக்க என்ன பண்ணலாம் தோழி?

      சில நேரங்களில் ரொம்ம்ம்மப ஷேமாக இருக்கிறது.

      நன்றி தோழி.

      நீக்கு
  2. ரசித்தேன்...

    காத்திருத்தல் என்றும் சுகமே...

    + கூடுவது, - குறைவது - அது அன்பு அல்ல...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காத்திருத்தல் என்றும் சுகமே...

      அப்படியா...?
      நீங்கள் யாருக்காவது காத்திரக்கும் பொழுது இந்த வார்த்தையைச் சொல்வீர்களா தனபாலன் அண்ணா?

      நன்றி.

      நீக்கு
  3. அழகு தமிழை அள்ளி தெளித்து
    பாங்காய் கவிதை படைத்த கவிஞருக்கு என் பாராட்டுக்கள்

    காத்திருத்தல் இன்பம் தான் அது ஏனோ காதலிக்கும்போது ஆணுக்கும், கல்யாணத்திற்க்குப்பின் பெண்ணிற்க்கு மட்டுமே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேற வழியில்லாமல் அனுபவிக்கும் சோக இன்பம் தான் காத்திருத்தல் என்று நினைக்கிறேன் ஐயா.

      நன்றி.

      நீக்கு
  4. காத்திருந்தால் அன்பு கூடுமா... என்ன கேள்வி இது..பெருகும்..:)

    மா மா காயில் மலர்ந்த அழகு அறுசீர் விருத்தம்!
    நல்ல இலகு சீராக அருமையாக இருக்கின்றது!

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காத்திருந்தால் அன்பு பெருகுமா....?
      எனக்கென்னமோ வெறுப்புத் தான் பெருகும் என்று நினைக்கிறேன்.
      நன்றி தோழி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஐயோ சௌந்தர்.... தலைப்பைப் பார்த்ததும் ஆசையாக ஓடி வந்தீர்களா?
      ஏமாற்றம் அந்த “ஓ வில் தெரிகிறது.

      மிக்க நன்றி கவிதை வீதி.

      நீக்கு
  6. அருமை... ரசித்தேன்.
    வாழ்த்துக்கள் சகோதரி..

    பதிலளிநீக்கு
  7. உங்களின் இந்த கவிதையில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது... பாராட்டுக்கள் tha.ma 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்னித் தமிழ் இல்லையா....? அப்படித்தான் கொஞ்சி விளையாடும்.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு

  9. வணக்கம்!

    தமிழ்மணக்கும் பாட்டுக்குத் தந்தேன் இனிக்கும்
    தமிழ்மணம்! எண்ணம் தழைத்து!

    காத்தி ருக்கும் கவிபடித்துக்
    களிப்பில் துள்ளும் என்னுள்ளம்!
    பூத்தி ருக்கும் புன்னகையுள்
    பொதிந்தி ருக்கும் கவியழகு!
    கோர்த் திருக்கும் மணிச்சரமாய்க்
    கொலுவி ருக்கும் கலையழகு!
    பார்த்தி ருக்கும்! பசித்திருக்கும்!
    பறந்து வக்கும் நற்காதல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  10. காத்திருந்தால் அன்பு கூடுமா?
    கூடும்! அளவான காத்திருந்தால்...!

    நாட்கள், மாதங்கள் அதிகாமகினால்...தடம் மாறும் அபாயம் உண்டு! இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்/

    காத்திருப்பதற்கும் ஒரு எல்லை--கால வரை உண்டு!

    தமிழ்மணம் +10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவ்வ்வ்வ்வ்வளவு நேர காத்திருப்பைச் சொல்லவில்லைங்க.
      இது சும்மா கொஞ்ச நேர காத்திருப்பு நம்பள்கி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  12. குவளைக் கண்ணைக் கண்டவுடன்
    கோடி இன்பம் கூடியதேன்?

    அதானே...... ரசித்தேன்....

    த.ம. 11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  13. "அவளைப் பார்த்த மறுநொடியே
    அடங்கா கோபம் ஓடியதேன்?!" என்றால்
    அவளின் அன்பின் பெறுதிக்கு முன்னே
    அடங்கா கோபம் தணிந்து தான் ஆகணுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  14. காத்திருந்தால் அன்பு கூடுதோ இல்லையோ... எனக்கு 31- ம் தேதிக்கு மேல் காத்திருக்க முடியாதுங்க... என் வலைப்பக்கத்தில் சமையல் போட்டி கலந்து கொள்ளவும்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் போட்டியா...?
      ஏதாவது சாப்பிடும் போட்டி என்றால் சொல்லுங்கள். உடனே ஓடி வந்துவிடுகிறேன்.

      நன்றி உஷா.

      நீக்கு
  15. அறுசீர் விருத்தப்பாவில் அமுதுண்டு மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு