புதன், 7 ஜனவரி, 2015

மாரடைப்பின் அறிகுறிகள்! (Heart Attack)



நட்புறவுகளுக்கு வணக்கம்.
   ஹார்ட் அட்டாக் என்னும் இந்த உயிரைக் குடிக்கும் நோயைப் பற்றி நான் கேள்விப்பட்டதை உங்களுடன் பகிர விரும்பி இந்தப் பதிவை இடுகிறேன்.
   அதற்கு முன்.... நான் ஏன் இதை எழுத நினைத்தேன் என்பதைக் கூறிவிடுகிறேன்.

    இங்கே கடந்த இரண்டு வாரமாக குளிர்கால விடுமுறை. இந்த இரண்டு வாரம் கழித்து திங்கள் மாலை குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றிருந்தேன். அங்கே ஒரு குழந்தை தன் தாத்தாவுடன் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று அடம்பிடித்து அழுதுக்கொண்டு இருந்தது. அதன் ஆசிரியர் அந்தக் குழந்தையைச் சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
   பொதுவாக இப்படி சிறு குழந்தைகளின் பள்ளியில் நடப்பது தானே என்று நானும் வந்துவிட்டேன்.
   பிறகு செவ்வாய் மாலையும் அந்தக் குழந்தை அழுதான். அந்தக் குழந்தையிடம்.... “உன் அம்மா இனி வரமாட்டாடா.... இனிமே நான் தான் வந்து உன்னை அழைச்சிக்கினு போவேன்....“ என்று அவனின் தாத்தா கெஞ்சி அழைத்தார். அவர் குரலும் உடைந்து இருந்தது.
   நான் அப்போது தான் அந்தக் குழந்தையை உற்றுக் கவனித்தேன். தெரிந்த முகம் தான். அந்தக் குழந்தையை அதன் அம்மா தான் எப்போதும் அழைத்து வந்து விடுவாள். துருக்கி நாட்டு இஸ்லாமியப் பெண். என்ன ஒரு முப்பது வயது தான் இருக்கும். ஒல்லியாக இருப்பாள். முகம் மட்டுமே தெரிந்தாலும் அது வட்ட நிலைவைப் போல அழகாக இருக்கும். சாதாரணமாக நேருக்கு நேர் பார்த்தால் ஒரு சினேகிதப் புன்னகை உதிப்பாள். அவ்வளவு தான் எனக்குப் பழக்கம்.
   அந்தப் பெண் இனி வரமாட்டாள்... என்றதும்.... நான் இன்றைய தலைமுறையினரை நினைத்து.... (அதாவது.... டைவர்ஸ்.... போன்ற பிரிவாக இருக்குமோ என்று) பேசாமல் வந்து விட்டேன்.
   இருந்தாலும் என் மனம் உறுத்தியது. அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் மிகவும் அன்பாக இருப்பவள். இரண்டும் சின்ன குழந்தைகள்... இந்தக் குழந்தைகளைத் தவிக்க விடுவாளா... என்ற யோசனை.
   அதனால் அவளுடன் மிகவும் சேர்ந்து பழகும் என் மற்றொரு தோழிக்குப் போன் செய்து விசாரித்தேன்.
   அவள் சொன்னது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

   நன்றாகத் தான் இருந்தாளாம். இரண்டு நாட்களுக்கு முன், தன் கணவனிடம் உடம்பெல்லாம் வலிக்கிறது என்று சொல்லி இருக்கிறாள். அதற்காக வீட்டிலிருந்த வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டும் இருக்கிறாள்.
   மிகவும் சோர்வாக இருந்தாளாம். சரியாக சாப்பிடவில்லையாம். ஆனால் வீட்டு வேலை எல்லாவற்றையும் எப்போதும் போலவே செய்திருக்கிறாள்.
   இரண்டு நாள் கழித்து இரவு நேரத்தில் தனக்கு மார்பில் அதிக வலி இருப்பதாகவும், மூச்சு விட சிரம்மாக இருப்பதாகவும் சொல்லவும் அவள் கணவன் அவளை அன்றிரவு மருத்துவமனை அர்ஜண்ட் வார்டுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கிருந்த டாக்டரிடம் அவளே தன் வலிகளைப் பற்றிச் சொல்லி இருக்கிறாள்.
   டாக்டர் பரிசோதித்து விட்டு அவளை, “இன்றிரவு மருத்துவமனையில் தங்கட்டும். நாளை ஸ்பெசலிஸ்ட் வந்து பார்ப்பார்“ என்று சொல்லி எழுதிக் கொடுத்திருக்கிறார். இரவு நேரம் என்றதால் மருத்துவ மனையில் எந்த அறை என்று முடிவாவதற்குள், “குழந்தைகள் தனியாக துர்ங்குகிறார்கள். என் அம்மாவை அழைத்துக்கொண்டு போய் குழந்தைகளிடம் விட்டுவிட்டு நீங்கள் திரும்ப வாங்கள்“ என்று தன் கணவனை அனுப்பி விட்டாள்.
   கணவரும் தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வசிக்கும் தன் மாமியாருக்குப் போன் செய்து மனைவி சொன்னது போலவே செய்து விட்டு அரை மணி நேரத்தில் மருத்துவ மனை வந்திருக்கிறார். ஆனால் அதற்குள் அவர் மனைவி இறந்து விட்டாள்.
   அவர் வெளியில் சென்றவுடன் அவளுக்கு வலி அதிகமாகி இருக்கிறது. டாக்டர்கள் முதல் உதவி செய்தும் அவளைப் பிழைக்க வைக்க முடியவில்லை. மாரடைப்பாம்.
   என்ன கொடுமை இது!

   இதைக் கேட்டதிலிருந்து மிகவும் கவலையாக இருந்தாலும்.... இது போலவே போன வருடம் என் கணவரின் மாமா ஒருத்தர். அவருக்கு வயது அறுபதுக்கு மேல். அவரிடம் இரவு எட்டு மணி இருக்கும். போனில் பேசினேன். “சற்று உடல் நிலை சரியில்லை அருணா“ என்றார்.
   நான் “என்ன செய்கிறது அண்ணா?“ என்று கேட்டேன்.
   “என்னவென்று தெரியவில்லை. உடம்பெல்லாம் வலிக்கிறது. சாப்பிடப் பிடிக்க வில்லை. தொண்டையில் ஏதோ சளி அடைத்துக் கொண்டு இருப்பது போல இருக்கிறது. ஒரே சோர்வாக இருக்கிறது“ என்றார்.
   நானும், “நாளை வந்து பார்க்கிறேன்“ என்று சொல்லி போனை வைத்தேன். ஆனால் மறுநாள் அதிகாலை நான்கு மணியளவில் இறந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது.

அடுத்து
   எங்கள் “கம்பன் கழக“ முன்னாள் செயளாலர் திரு. சிமோன் ஐயா அவர்கள்.... இரண்டு நாட்கள் சரியாக சாப்பிட வில்லை. சோர்வாக இருந்தார் என்று அவரின் துணைவியார் சொல்லி அழுத்தும் நினைவில் வந்தது.


   இந்த மூன்று நிகழ்ச்சியையும் நினைவில் கொண்டு நான் என் அண்ணனுக்குப் போன் செய்தேன். என் அண்ணனுக்கும் ஹார்ட் அட்டாக் வந்து உடனடியாக அறுவை சிகிட்சை செய்து இப்போது நன்றாக இருக்கிறார்.
   அவருக்குப் போன் செய்து, “உனக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன் எப்படி இருந்தது?“ என்று கேட்டேன். அவரும் “இரண்டு நாளாக சோர்வாக இருந்தது. சாப்பிடப் பிடிக்க வில்லை. தொண்டையில் ஏதோ அடைப்பு போல இருந்தது“ என்றார். ஆனால் “கடைசி நேரத்தில் தான் மூச்சு விட மிகவும் சிரமமாக இருந்தது. அதிகமாக வேர்த்தது. சொல்ல முடியாத வலி மார்பில். அந்த வேதனை யாருக்கும் வரக்கூடாது...“ என்று சொன்னார்.

நட்புறவுகளே....
   மாரடைப்பு என்றால்.... சினிமாவில் காட்டுவது போல் சட்டென்று வந்துவிடுவதல்ல. அதன் அறிகுறி இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிகிறது. அதை அலட்சியப் படுத்திவிட்டால் கடைசியில் அனைவரையும் அவதிப்படுத்த வைத்து விடுகிறது.
   அதனால்.... சாதாரணமாக இருக்கும் போது உடம்பு அதிகமாக வலித்தாலோ, காரணமின்றி அதிக சோர்வு இருந்தாலோ, தொண்டையில் சளி போன்றோ அல்லது கற்று போன்றோ (ஏப்பம் வருவது போல்...) இருந்தாலும், மூச்சு விட சிரம்மாக இருந்தாலும், அதிகமாக வேர்த்தாலும்.... அதை அலட்சியமாக விடாமல் உடனடியாக தகுந்த மருத்தவரை கலந்து ஆலோசித்து நலம் பெறுங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.
08.01.2015

30 கருத்துகள்:

  1. பல பேர்கள் சொல்வதே இல்லை.... அதனால் இழந்த சொந்தங்கள் எத்தனையோ...? நீங்கள் சொன்ன அறிகுறிகளுடன் இடது கை ஒருவித வலியுடன் இருக்கும் என்றும் மீண்டவர்கள் சொல்லி உள்ளார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அண்ணா.
      நான் இதை சொல்ல மறந்து விட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய தகவல் இது இதை வெளியிட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  3. மாரடைப்பில் இரண்டு வகை உண்டு.

    ஒன்று Mild அட்டாக். மற்றொன்று கடுமையானது.

    மாரடைப்பின் அறிகுறிகள் திடீரென்றும் தோன்றலாம்.
    1.உடம்பு வேர்த்தல்.2. மார்பின் மையப் பகுதியில்[நெஞ்சுக்குழி] உள்ளிருந்து இடிப்பது போன்ற வலி.3.அந்த வலி தோள்களுக்கும்[குறிப்பாக, இடது தோள் மற்றும் கை] தொண்டைக்கும் பரவுதல். 4. மூச்சித் திணறல். 5. மயக்கம்

    அறிகுறிகள் நோயின் தன்மையைப் பொருத்து மாறுபடலாம்.

    Mild அட்டாக்கில் இந்த அறிகுறிகள் இல்லாமால், நெஞ்சின் மையப் பகுதியில் லேசான வலி மட்டுமே இருக்கும். பிறகு அது மறைந்துவிடக்கூடும்.

    சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எந்தவித வலியும் தெரியாமல் போகலாம். கடுமையான வலி ஏற்பட்டால் அவர்கள் இறந்துவிடவும் கூடும்.

    இன்றைய காலக்கட்டத்தில் முப்பது வயதுள்ள இளம் வயதுக்காரர்களையும் மாரடைப்பு தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது.

    ஆக, மென்மையானதோ கடுமையானதோ திடீர் நெஞ்சுவலியை அலட்சியப் படுத்தாமல், இருதய நோய் நிபுணரை அணுகுவதே நல்லது.

    நல்ல பதிவு அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பரமசிவம் ஐயா.

      நீக்கு
  4. முதல் சம்பவத்தை படித்தபின் மனம் கனத்தது காரணம் அந்த சிறு குழந்தை உயிர் இழப்பை புரிந்து கொள்ளாமல் தவிப்பதால்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் தமிரே.... பாவம் அந்தக் குழந்தை.

      அந்தப் பெண்ணுக்கு முப்பது வயதுக்கள் தான் இருக்கும்.
      இரண்டு வாராத்திற்கு முன்பு பார்த்தேன்.
      இன்று அவள் இல்லை.....(

      நீக்கு
  5. பெண்கள் என்றதும் தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் நான் சொல்ல வருவது என்னவென்றால் எல்லாப் பெண்களுமே அழகு அதிலும் சேலை கட்டி பூ வைத்து வரும் போது மனசு சும்மா பட பட வென்று அடிக்கடி அடிப்பததால் மாரடைப்பு அதிகமாக வருகிறது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும் கொஞ்சம் அலங்க்கோலமாக வந்தால் நல்லது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் சேலை “கட்டியிருந்தால்“ மாரடைப்பு வருகிறதா....?

      ஆஆஆஆஆஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் அமேரிக்காவில் இருப்பதால் இப்படி தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

      நம் நாட்டில் பெண்கள் சேலை “கட்டியதால்“ யாருக்கும் மாரடைப்பு வராது.

      நீக்கு
  6. இதயம் உள்ளவரா நீங்கள் அப்ப இதை கண்டிப்பாக படிங்க http://avargal-unmaigal.blogspot.com/2015/01/heart-attack.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்துவிட்டேன்.
      இணைத்துள்ள பதிவுகளையும் படங்களையும் பார்த்தேன்.

      உங்களின் மனைவி உங்களை இதயம் இல்லாதவராக ஆக்கியுள்ளார் என்பதையும் அறிந்துக் கொண்டேன்.....)

      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும்
      மிக்க நன்றி தமிழரே.

      நீக்கு
  7. கொடூரமான நோய்.. அதுதரும் முடிவு கொடியது! ஆயினும் அதன் முனெச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து வேண்டிய கவனமுடன் சிகிச்சை செய்தால் நல்லதென நானும் அறிந்திருந்தேன்!..

    அனைவருக்கும் பயன்தரக்கூடிய நல்ல தகவல் தோழி!
    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. நல்ல யோசனை.

    நடு நெஞ்சில் குத்தல் போன்ற வலியுடன் முதுகிலும், இடது கையிலும் வலி பரவலாக இருக்கும் என்பார்கள். எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன் முதுகுப் பக்கம் கையைக் கொண்டுபோய் அந்த அறிகுறியை அழகாகக் காட்டுவார் என்பார். அதற்கு அடுத்த காட்சியில் அவர் அதே தாக்குதலில் இறந்து விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடக்கத்திலேயே கவனிக்க வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  9. சில நேரங்களில் வாயுத்தொல்லையை நெஞ்சு வலி என்று நினைத்துப் பதறும் சிலரும் இருக்கிறார்கள்பல உபாதைகளுக்கு அறிகுறிகள் ஒரேபோல் இருப்பதால் தேவையில்லாமல் பதட்டப் படக் கூடாது என்பதற்காக இக்கருத்தினை பதிவிடுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஐயா.
      ஆனால் வாயு தொல்லையால் உடல் அசதி வராது. டென்ஷனாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீங்கள் சொல்வது போல் பதட்டப்படக்கூடாது தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.

      நீக்கு
  10. நல்ல பதிவுப் பகிர்வு! சகோதரி! டிடி சொல்லி இருப்பது போல் இடதுதோளில் வலி பரவி கையில் இறங்கும் அனுபவமும் சிலருக்கு உள்ளது. வயிறு சரியில்லாமல் நெஞ்சைக் கரிப்பது போன்றும் இருக்கும் அட்டாக் வரும் முன். ஆனால் சிலருக்கு உடனே வரவும் வாய்ப்புண்டு. எந்தவித அறிகுறியும் இல்லாமல் வரவும் வாய்ப்புண்டு. எதுவாக இருந்தாலும் அவ்வப்போது நல்ல டாக்டரிடம் செக்கப் செய்து கொள்வது நல்லது நீங்கள் சொல்லியிருப்பது போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தவித அறிகுறியும் இல்லாமல் வரும் என்பதில் தான் சற்று குழப்பம்....
      அதற்காகத் தான் இந்தப் பதிவை இட்டேன் ஐயா.

      அட்டாக வருவதற்கு முன்பே ஒரு சில அறிகுறிகள் தெரிகிறது என்பதைத் தான் அட்டாக வந்த பலரும் சொல்கிறார்கள்.
      அது பெரியதாக காட்டாததால்... அல்லது நாம் நினைக்காததால் இப்படி அவதிப்படுகிறோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு

  11. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு தகவல் பகிர்வு! அந்த சிறு குழந்தையை நினைக்கும் போது வருத்தம் ஏற்படவே செய்கிறது! முதுகுவலி கூட வரும் என்று கேள்விப்பட்டதாக நினைவு!

    பதிலளிநீக்கு
  13. தற்காலத்தில் இள வயதினருக்கும் மாரடைப்பு வரவது அச்சத்தை ஏற்படுத்துவது உண்மை . ஆனால் ஜி.எம்.பி.அவர்கள் சொல்வது போல டாக்டர்கள் நம்மை பயம்முறுத்தியே ஏகப் பட்ட சோதனைகளை செய்யவைத்து ரிசல்ட் ஒன்றும் இல்லை வர பீஸ் எவ்வளவு என்று சொன்னது நிஜமாவே ஹார்ட் அட்டேக் வந்துவிடும் சூழ் நிலை இருக்கிறது

    பதிலளிநீக்கு
  14. மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
    கவனமுடன் இருப்பதுதான் நல்லது
    ஆனால் பயந்து கொண்டஇன்றைய மருத்துவர்களை அணுகினால்.மேலும் பல புதியஆபத்துகள் வந்துவிடக் கூடும்.
    என்னைப் பொறுத்தவரை, சந்தேகம் வந்தால், தனியார் மருத்துவ மனைகளுக்குச் செல்லாமல், அரசு மருத்துவ மனையினை அணுகுவது நல்லது. அதாவது நான் கூறுவது தமிழ் நாட்டில்....
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  15. மனதில் பயம் இருக்கவே கூடாது.அதிர்ச்சியிலேயே மாரடைப்பு வந்து இறந்தவர்கள் பலபேர் உள்ளார்கள்

    பதிலளிநீக்கு
  16. ஆரம்பகட்ட அறிகுறிகளை உணர்ந்து முறையான சிகிச்சைகளை செய்து கொண்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்காது. கூடுமானவரை மருந்து, மாத்திரைகள் உதவி கொண்டே சமாளித்து விடலாம். ஆனால் பலரும் உடல் தரும் முன்னெச்செரிக்கை உபாதைகளை கண்டு கொள்வதுமில்லை. மனைவி, மக்களிடம் தெரிவிப்பதுமில்லை. மருத்துவரிடமும் செல்வதுமில்லை. முறையான சிகிச்சை மேற்கொள்ளாததே பல உயிர் இழப்புகளுக்கு காரணம்.

    பதிலளிநீக்கு
  17. பயன் மிகு பதிவு!வாழ்த்து!

    பதிலளிநீக்கு