திங்கள், 7 ஜனவரி, 2013

கணவரை எப்படி அழைக்க வேண்டும்? (நகைச்சுவை நிகழ்வு)






நட்புறவுகளுக்கு வணக்கம்.
    என் விட்டில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி இது. உங்களுக்குப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

    என் வீட்டிற்கு புதிதாய்த் திருமணம் செய்த அவர்களை விருந்திற்கு அழைத்திருந்தோம். அந்த மணமகனை நட்பு என்ற வகையில் தான் பழக்கம்.
   அந்த இளம் ஜோடியுடன் அந்த மணமகனின் தாயும் வந்திருந்தார். அவர்களுடன் என் கணவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அடுப்பறையில் வேலையாக இருந்தேன்.
    அப்பொழுது அந்த பெண் வந்தாள். வந்தவள் “உங்களிடம் ஒன்று கெட்கவேண்டும்“ என்றாள் சற்றுத் தயங்கி.
    புதியதாக நம் வீட்டிற்கு வருகிறாள் இல்லையா...? மிகவும் தயக்கமாகப் பேசியதால்... “என்னம்மா வேண்டும்? பயப்படாமல் கேள்“ என்றேன்.
    அவளும் உடனே “நீங்கள் உங்கள் கணவரை எப்படி கூப்பிடுவீர்கள்...?“ என்று கெட்டாள்.
    இது என்னடா.. புது மாதிரியான கேள்வியாக இருக்கிறதே என்று நான் சற்றுத் தயங்கி...  “ஏனம்மா...? என்ன விசயம்?“ என்றேன்.
    அவளும், “உங்களுக்கே தெரியும தானே... நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவள். என் அம்மா அப்பாவைப் பெயர் விட்டு தான் கூப்பிடுவார். நானும் அவரை அப்படித்தான் அவரின் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன். ஆனால் என் மாமியார் அதைத் தப்பு என்றும் இந்த மாதிரி என் பிள்ளையை பெயர் சொல்லிக் கூப்பிடாதே... என்றும் கோபமாகத் திட்டினார்கள். பிறகு அவரை எப்படி அவங்க எதிரில் கூப்பிடுவது என்று தெரியாமல் அவர் எதிரில் எதுவுமே பேசாமல் கையசைத்துப் பேசுகிறேன்...“ என்றாள்.
   எனக்கு சிரிப்பாக வந்தது. நான் சிரித்தைக்கண்டு அவள் கோபமுற்று... “சரிக்காதீங்க ஆண்டி. எப்படி கூப்பிடனும்ன்னு சொல்லுங்க“ என்றாள் உரிமையாக.
    நான் என்னவென்று சொல்வது... நாம “மூடு“க்குத் தகுந்தவாறு ஏதேதோ சொல்லிக் கூப்பிடுவோம். அதைப்போய் இவளிடம் எப்படி சொல்வதென்று யோசிக்கும் பொழுதே... “ஆண்டி... அங்கிள் ஹாலில் இருக்கிறார். இப்போ நீங்கள் அவரை எப்படி கூப்பிடுவீர்கள்?“ என்று கேட்டாள்.
   அப்பாடா... நல்ல வழி கிடைத்த்து என்று நானும் உடனே.. (நம் முன்னோர்கள் சொன்னபடி) “ஏங்க.... இங்க கொஞ்சம் வாங்க...“ என்று கூப்பிடுவேன் என்றேன். அவளும் சரியென்று தலையாட்டினாள்.
    அதன் பிறகு நான் அவரிடம்... “ஏங்க... இதைக் கொண்டு போங்கள்... ஏங்க.... இதைச் செய்யுங்கள் ...“ என்று நிறைய “ஏங்க போட்டதும் அவளும் புரிந்து கொண்டிருப்பாள் என்று தான் நினைத்தேன்...

    இது நடந்து இரண்டு நாள் கழித்து அவளின் மாமியாரிடமிருந்து ஒரு போன் வந்தது. “ஏம்மா அருணா.... நீ தான் என் மருமகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தியா...?“ என்றார்கள்.
    நான் தமிழ் கற்றுக் கொடுத்தேனா....? என்ன இது வம்பாப் போச்சேன்னு நினைத்து “ஏன் மாமி... என்ன ஆச்சி?“ என்றேன்.
    அவர்களும் “நடந்ததைக் கேள் அருணா“ என்றார்கள் சிரித்த படி.

   அதாவது... அந்த பெண்ணின் கணவன் வேலை முடித்து வரும் போது இரெயிலைத் தவற விட்டுவிட்டான். அதனால் தன் மனைவிக்குப் போன் செய்து “நான் டிரெயினைத் தவற விட்டுவிட்டேன். அடுத்த டிரெயின் ரொம்ப லேட்டாகக் கிளம்பும். அதனால் நான் வர லேட்டாகும். அம்மாவிடம் சொல்லி அவங்களை எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டு படுக்கச் சொல்“ என்று சொல்லி இருக்கிறான்.
    அந்தப் பெண்ணும் தன் மாமியாரிடம் வந்து “ஏங்க டிரெயினை தவறவிட்டாராம். அதனால் ஏங்க வர லேட்டாகுமாம். நீங்கள் ஏங்கக்காக காத்திருக்க வேண்டாமாம். உங்களைச் சாப்பிட்டு ஏங்க  தூங்கச் சொல்ல சொன்னார்“ என்று சொல்லியிருக்கிறாள்.
   அவர்களுக்கு முதலில் ஒன்றும் விளங்காமல் திரும்பவும் கேட்டதற்கு திரும்பவும் அவள் நிறைய “ஏங்க“ போட்டு பதில் சொல்லியிருக்கிறாள். அவர்களுக்குப் புரிந்தவுடன் இந்த நகைச்சுவையை “நீயும் கேட்டு சிரி“ என்று எனக்குப் போன் செய்து சொன்னார்கள்.
   பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தேன்.

ஆமாம்... நண்பர்களே... “ஏங்க“ என்றால் உண்மையில் என்ன அர்த்தம்...? தெரிந்தவர்கள் எழுதுங்களேன். நானும் தெரிந்துக் கொள்கிறேன்.

நட்புடன்
அருணா செல்வம்.

58 கருத்துகள்:

  1. சாப்பிட்டுவிட்டு தூக்கம் வரவில்லையே என்று “ஏங்க" சொல்லிவிட்டார்!!

    பதிலளிநீக்கு
  2. நண்பரே, ஏங்க என்றால் என்னங்க என்று அர்த்தம்.

    அந்த காலத்தில் மனைவி என்பவள் கணவனுக்கு கீழே அல்லது ஏவலாள் அல்லது அடிமை என்ற கோணத்திலேயே சமுதாயத்தில் பார்க்கப் பட்டது. அதன் விளைவாகவே கணவன் மனைவியை 'டி' போட்டு அழைத்தாலும், மனைவி "சுவாமி" என்று சாமிக்கு இணையாக வைத்து கணவனை அழைக்க ஆரம்பித்து, போன தலைமுறையில் 'என்னங்க' என்று 'இங்க்' வைத்து முடிந்திருக்கிறது இன்றைய தலைமுறை தான் மிக சரியாக டா போட்டு பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்
    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “மிக சரியாக டா போட்டு பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்“

      ஏங்க... கரிகாலன் ஐயா.... அப்போ “டா“ போடுவது தான் சிறந்தது என்கிறீர்களா...?
      உங்கள் மனைவி கொடுத்து வைத்தவள்.
      நன்றி நண்பரே.

      நீக்கு
    2. மன்னிக்கனும்...
      உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் .. என்று மாற்றி வாசியுங்கள்.
      நன்றி.

      நீக்கு
  3. "என்னங்க" என்பது "ஏனுங்க" என்றாகி பின்பு "ஏங்க" என்றாகிவிட்டது. பிள்ளைத்தாச்சிகள் மாங்காய்க்கு ஏங்குவது வேறு. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ...“என்னங்க“ என்றால்...????

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பழனி.கந்தசாமி ஐயா.

      நீக்கு
    2. //அப்போ...“என்னங்க“ என்றால்...????//
      எப்போதும் (மனதில்) உங்களை பற்றிய "எண்ண(ம்)ங்க வாக இருக்கும்.

      நீக்கு
  4. கதையைக் கேட்டதும் நானும் மனம்விட்டுச் சிரித்தேன்...
    ஏங்க என்றும் ஏனுங்க என்றும் ஏம்பா என்றும்
    மனைவிமார்கள் அழைப்பது சாதாரணம்....

    உண்மையிலேயே எனக்கும் இதற்கான பொருள் விளங்கவில்லை....
    யாராவது சொன்னால் நானும் கேட்டுக்குறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவிமார்கள் “ஏங்க“ என்று கணவரை மட்டும் அழைக்கவில்லை. மற்ற ஆண்களான பக்கத்து வீட்டுக்காரர், பால்காரன்... இப்படி அனைவரையும் தான் “ஏங்க “ என்று அழைக்கிறார்கள்.

      ஒன்றும் புரியவில்லை நண்பரே... என் அம்மா என் அப்பாவை “ஏங்க“ என்று அழைப்பார்கள். நானும் அழைக்கிறேன். அவ்வளவு தான் நாமறிந்தது.
      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  5. சரியாக புரிந்துகொள்ளாமல் இந்தபெண்ணின் விருப்பம் போட்ற தக்கதே. நல்ல காமெடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக புரிந்து கொள்ளாமல்...
      புரியவில்லை என்று தான் கேட்டேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  6. எங்களை மிகவும் ஏங்க வைத்த பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களயின் வரவிற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. சந்தேகம் வந்துடுச்சிங்க.
      அதைத்தான் தீர்த்துக்கக் கேட்டேன்.

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஹா ஹா ஹா....

    //ஏங்க“ என்றால் உண்மையில் என்ன அர்த்தம்...?//

    ஏங்க உண்மையிலே தெரியாதா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தரசு... நான் உண்மையை உங்களிடம் மட்டும் சொல்கிறேன். ஆனால் நீங்கள் யாரிடமும் சொல்லிடக் கூடாது. இது நானே கண்டுபிடித்தது. காதைக் கொடுங்கள்.... அதாவது இந்த ஆடு மாடெல்லாத்தையும் ஏ..ஏ.. என்று ஓட்டுவார்கள் இல்லையா...? இந்த “ஏ” கூட மரியாதைக்கு “ங்க“ சேர்த்து “ஏங்க“ என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

      இதை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். நீங்களே அர்த்தம் கேட்டதால் சொன்னேன்.
      வருகைக்கு மிக்க நன்றி மனசாட்சி.

      நீக்கு
  9. திருமணமாகி 20 வருடங்களாயிற்று இன்னம் தெரியாதுங்க இந்த ஏங்கக்கு என்ன அர்த்தம்னு. ஆனா இப்ப இருக்க பொண்ணுங்க பேர் சொல்லி அழைக்கறாங்க மாமியார்களும் ஒண்ணும் சொல்ல முடியாமல் ஒத்துக்கறாங்க... இப்படித்தான் மாற்றங்கள் தோன்றும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் சொல்லி கூப்பிட்டால் அவருக்கு ஆயுசு குறைந்திடும் என்று என் மாமியார் திருமணம் அன்றே பயமுறுத்தி விட்டார்கள் தோழி.

      வருங்காலமாவது மாறட்டும்.
      நன்றி தோழி.

      நீக்கு
  10. அவரை நினைத்து ‘ஏங்க’ வேண்டும் என்பதால் ஏங்க என்று சொல்லியிருப்பார்களோ... ஆனால் நீங்க சொன்ன இந்த ஏங்க சம்பவம் ரசித்துச் சிரிக்க வைத்தது அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது தான் உண்மையாக இருக்குமோ...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

      நீக்கு

  11. ஏங்க வைப்பவர் என்று பொருளோ.? எப்படிக் கூப்பிட்டாலும் கணவர்கள் பதில் கொடுப்பார்கள். எனக்குத் தெரிந்த பெண்மணி hello என்றுதான் கணவனைக் கூப்பிடுவாள். கணவனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம், கூப்பிட்ட குரலுக்கு அவர் ஆஜராகும்வரை.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான உண்மையான கருத்து.

      தங்களின் அனுபவத்துடன் கொடுத்தக் கருத்திற்கு
      மிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.

      நீக்கு
  12. //“ஏங்க“ என்றால் உண்மையில் என்ன அர்த்தம்//
    அடிக்கடி அவரை நினைத்து "ஏங்க" வைப்பதால் இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் சேக்காளி ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு

  13. உங்க பதிவை பார்த்து என் மனைவி எப்படி கூப்பிடுவாங்க என்று யோசித்து பார்த்தேன்....கடைசியில அவங்க என்னை கூப்பிடுவதேயில்லையே என்று புரிந்தது. நான் தான் அவங்களை கூப்பிடுவேன்.. உங்க ஏங்க பதிவை பார்த்து என் மனைவி என்னை ஏங்கன்னு கூப்பிடுவாளா என்று ஏங்கி கொண்டிருக்கிறேன்... சும்மா இருந்த என்னை இப்படி ஏங்க வைத்ததற்கு கண்டணங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன உண்மைகள்...?
      நீங்கள் அவங்களை “ஏங்க... ஏங்க...“ ன்னு கூப்பிடுங்கள்.

      தங்களின் வருகைக்கும் கண்டணங்கள் தெரிவித்தமைக்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“.

      நீக்கு
  14. சென்னைத் தமிழில், "ஏய்! எருமை மாடே இங்க" என்பதின் short form ஏங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...?
      ஐயோ... இனிமேல் எந்தக் கணவரும் என்னை “ஏங்க“ன்னு கூப்பிடாதே... என்பார்களே...
      இப்போ என்ன பண்ணுவது...?
      பிறகு அவர்களை எப்படி கூப்பிடுவது...?
      நீங்களே ஒரு வழி சொல்லுங்களேன் நம்பள்கி.
      நன்றி.

      நீக்கு
    2. பெயர் எதுக்கு இருக்கு? என் மனைவி என்னை பெயர் வைத்து தான் கூப்பிடுவார்கள். என் கொள்ளுத் தாத்தா பேர் சுப்பையா! அவர் அப்பவே ஆறடி உயரம்; அவர் மாதிரி நானும் பெரிய நீளமான குழதையாகவும் அவரை மாதிரி இருந்ததால் என்னை சுப்பு (pronounced as chuppu) என்று எங்கள் வீட்டில் கூப்பிடுவார்கள்.

      என் அம்மா என் பெயர் உண்மையான் பெயரை சொல்லிக் கூப்பிடக் கூடாது என்று சொன்னதால் என் [காதல்] மனைவியும் சுப்பு என்று கூப்பிடுவார்கள். மாத்திக் கூப்பிட மிகவும் முதலில் கஷ்டப்பட்டர்கள்; பழக்க தோஷம்.

      என் மகனும் மகளும் என் மனைவியைப் பார்த்து, என்னை 'சுப்பு" என்று பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.

      என் மகனும் மகளும்...ரொம்ப ஆசையாக இருந்தால்
      சுப்பு என்றும், சுப்பப்ப்பா என்று...
      விவாதம் செய்தால், வெறுமனே 'அப்பா' என்றும் அல்லது "Dad!" என்றும்...
      சண்டை என்றால் "DADDY" என்று அதட்டலுடன் கூப்பிடுவார்கள்.

      முக்கால்வாசி என் குழநதைகள் சுப்பு என்று தான் கூப்பிடுவார்கள்; என் அப்பாவும் அம்மாவும் இப்படி கூப்பிடுவதை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்....

      அது சரி! கூப்பிடுவதில் என்னங்க இருக்கு?

      நீக்கு
  15. அருணா நல்ல பதிவு, இன்றைய காலகட்டத்தில் பெயர் சொல்லி கூப்பிடுவதே சிறந்தது, அதற்குத்தானே பெயர் வைத்திருக்கிறார்கள். பெரியவர்கள்தான் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வழிதான் கும்மாச்சி அண்ணா...

      ஆனால் என்னாளெல்லாம் இனிமேல் அப்படி கூப்பிட முடியாது என்றே நினைக்கிறேன்.
      இதில் முக்கிய பாயிண்ட் ஒன்றும் இருக்கிறது.
      என் கணவரின் பெயர் “என் செல்வம்“
      நான் அவரை பலர் முன்னிலையில் என்செல்வம்... என்செல்வம்.. என்று கூப்பிட்டால் ஏதோ நான் அசடு வழிவது போல் தெரியும்.
      அதனால் வேண்டாம். பின் வரும் தலைமுறைகள் அப்படிக் கூப்பிட்டுக் கொள்ளட்டும்.
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  16. ஏங்க உங்களுக்காவது இதுக்கு அர்த்தம் தெரியுமா? லொல்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும் சித்தாரா.
      மனசாட்சியிடம் சொல்லி இருக்கிறேன்.
      அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

      நன்றி சித்தாரா.

      நீக்கு
  17. இந்த ஏங்கவை வைத்து நானும் பதிவிட்டது நினைவுக்கு வந்தது. என் அக்கா கல்யாணம் ஆன புதிதில் தெருவில் சென்ற வெங்காய வியாபாரியை ஏங்க வெங்காயம் என்றழைக்க பாத்ரூம்ல இருந்த மாமா வாங்கிக்கோ என சொல்ல ... சரியான கிண்டலாக இருந்தது அப்போது என்ன செய்ய இப்ப நானும் ஏங்க ஏங்கனு தான் அழைச்சிட்டு இருக்கேன் . ஆமா அதற்கு என்ன அர்த்தம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தகவலும் நகைச்சுவையாக இருக்கிறது சசிகலா.

      தங்களின் வருகைக்கும் அழகிய நகைச்சுவை பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  18. Not able to type in Tamil. Sorry!

    Eengka.= Your kind attention please. Such respectful address to the husband is appropriate as, in our culture - why, universally too - the bride is always shorter than the bride groom and junior to him in age. Therefore she has to give respect to him: even if the age diff is just a few years.

    As to the qn why the word eenga for that, you have yourself answered it. I.e. your mummy used to call your daddy that way. Children imitate parents; and, think, - rightly? or wrongly? only future can tell them! – that the ways of their parents are worthy of emulation. In rare cases the husband is junior in age to the wife, (as Shakespeare’s wife to him) where she addresses him respectfully on her own volition, coz there is always an element of male vanity and ego in a husband (or he wants to be made to feel superior to her!). that a pragmatic wife panders to. The feminists may dislike it. But the loving wife gives in to that. And the loving husband accepts it; otherwise she may feel a sort of alienation w/in herself.

    In the final analysis, there is nothing proper or improper in the behaviour of the spouses as long as they are loving partners!

    Man-woman relationship as a couple is time honoured: slight adjustments are good and practical; but a complete overhaul will backfire.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவனும் மனைவியும் தங்களுக்குள் அன்புடன் எப்படி அழைத்துக்கொண்டாலும் அது நல்லது தான் என்று சொன்னது அருமையான கருத்து.

      நட்பே... தங்களின் வருகைக்கும் அழகாக விளக்கிப் பின்னோட்டம் இட்டமைக்கும் மிக்க நன்றி.


      நீக்கு
  19. படித்தேன்! நல்ல நகைச்சுவை! மிகவும் இரசித்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  20. இரவுப்படுக்கைக்கு முன் நல்லதொரு நகைச்சுவை.சிரிச்சிட்டேன் மனம் விட்டு.நானும் ’ஏங்க’பாடமாக்கப்போறேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடப்போறீங்களா....?
      பாடுங்க ஹேமா....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  21. நல்லவேளை நான் இந்த விளையாட்டில் இல்லை. என்னவரை 'ஸார்' என்று கூப்பிடுகிறேன்.
    பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
    உங்கள் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அம்மா.

      “ஸார்“ என்று கூப்பிடுவது அந்நியோன்னியமாக எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் அப்படி அழைத்தே பழகிவிட்டதும் நல்லது தான் என்றே நினைக்கிறேன்.

      சிலர் “இந்தா“ நீ, வா, போ... என்றெல்லாம் கணவரைச் சொல்லி அழைக்கிறார்கள்.

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      (எனது ஆறு புத்தகங்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டது.
      தற்போது நான் புத்தகம் எதுவும் வெளியிடவில்லை.)

      நீக்கு
  22. கணவனை மரியாதையாக, என்னவர்களே என்றழைத்து, பின் அது திரிந்து, என்னவங்க என்றாகி, ஏங்க என்றாகியிருக்கும் என்று நான் கருதுகிறேன்.
    பி.கு.:-
    எனது மனைவி, மணமானப்புதிதில் என்னை ஜெயா என்று பெயர்ச்சொல்லி அழைத்தார் (எனது பெற்றோர் அப்படித்தான் அழைப்பர்.) ஆனால், எனது தந்தையோ, "நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது எப்படி வேணா கூப்டுக்கோ, ஆனால் பொதுவுல இருக்கும் போது அப்படி கூப்பிடக்கூடாது" என்றுவிட்டார். அதிலிருந்து என்னை மாமா எனறழைக்கிறார். ஆனால், தனிமையில் எங்கு இருந்தாலும் என்னை "டா" போட்டே விளிப்பார். எனக்கும் அதுதான் மிகவும் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயசந்திரன்.

      (இதிலிருந்து உங்கள் மனைவி உங்களை மிகவும்
      நேசிக்கிறார் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள்.)

      நீக்கு
  23. அன்பின் அருணா செலவம் - அருமையான நகைச்சுவையுடன் கூடிய நிக்ழ்வினைப் பதிவாக்கியமை நன்று. வி.வி.சி. ஏங்க என்னங்க எல்லாம் சர்வ சாதாரணமாக இங்கெல்லாம் பயன் படுத்தும் சொற்கள் தான் - நல்லதொரு நகைச்சுவை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  24. "ஏங்க" "ஏங்க " என்றால் ,
    சரியாக இல்லாவிட்டால் ,
    ஏங்க வேண்டியது தான் என்று அர்த்தம் .

    ரமணியன்

    பதிலளிநீக்கு