புதன், 5 மார்ச், 2014

கம்பனிடம் ஒரு கேள்வி!! (முடிவு)




இலக்கணத்தைப் பிழையின்றி எழுதி வைத்தும்
   எதுகையையும் மோனையையும் அழகாய்த் தந்தும்
இலக்கியத்தின் தன்மைகேற்ப இயற்கைக் காட்சி
   இன்பத்தின் அணியுடனே அழகாய் ஈந்தும்
நிலவுலகின் மானிடரின் உயர்ந்த பண்பை
   நேர்மையுடன் தந்தாலம், உன்னைக் கேட்க
பலநாளாய் என்மனத்தில் கேள்வி உண்டு
   பாவலனே கேட்டிடவே வந்தேன் இன்று!

எத்தனையோ கதையுண்டாம் உலகில் என்றும்!
   எடுத்தெழுத தமிழுண்டு மகிழ்வு பொங்க!
அத்தனையும் இத்தரையில் நிலைத்து நின்றே
   அழியாத புகழ்படைக்கும்! அதனைக் கண்டு
சித்தத்தில் யாரையுமே தழுவி டாமல்
   சீர்சிறக்கத் தமிழிலேயே படைத்தி ருந்தால்
மொத்தத்தில் தமிழ்நூலின் மூலம் என்றே
   முழுமூச்சாய் உன்புகழே நிலைத்தி ருக்கும்!

சொற்பூவில் தேன்சொட்டத் தொடுத்த மாலை!
   சுவைத்தமிழின் சூத்திரத்தைப் பொதித்த கோவை!
கற்பூர ஆராத்தி காட்டி வீட்டில்
   கடவுளுக்கு நிகராக நோக்கும் பார்வை!
தற்கால மனிதர்க்கும் காட்டும் நேர்மை!
   தமிழுக்கு அணியாக நின்ற தன்மை!
கற்காலக் கற்பனையில் யாரோ செய்த
   காவியத்தைக் கதையாக ஏனோ செய்தாய்?


அருணா செல்வம்.

22 கருத்துகள்:

  1. /// மொத்தத்தில் தமிழ்நூலின் மூலம் என்றே
    முழுமூச்சாய் உன்புகழே நிலைத்தி ருக்கும்! ///

    அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. அப்பாடி....முடிஞ்சுடுச்சா? தெய்வமே என்னை காப்பத்திட்டப்பா? இப்பதான் எனக்கு தெய்வம் மேல் நம்ப்பிக்கையே வந்தது... என்னமோ தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு மாதிரி வரும் என்று நினைத்து கதி கலங்கி நின்றிருந்தேன் tha.ma 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை இந்த அளவுக்குச் சந்தோஷப்பட விட்டுடுவேனா...?

      வரும். வரும். கவிதை மழையாக வரும்.
      இருந்தாலும்.... போனால் போகிறது என்று உங்களுக்காக ஒரு நகைச்சுவை நிகழ்வை எழுதி வெளியிடுகிறேன்.

      தொடர்ந்து வந்து மூளையைத் தீட்டி திட்டிக் கருத்திட்டு ஊக்கப்படுத்துங்கள்.
      நன்றி.

      நீக்கு

    2. ///தொடர்ந்து வந்து மூளையைத் தீட்டி திட்டிக் கருத்திட்டு ஊக்கப்படுத்துங்கள்.///

      தீட்டி திட்டி தேய்ஞ்சே போயிடுச்சு உங்ககிட்ட இருந்தா எனக்கு கொஞ்சம் தாருங்கள். ஆனா எனக்கு தெரியும் நிச்சயம் நீங்கள் தரமாட்டீர்கள் என்று....காரணம் இருந்தாதானே தருவதற்கு ஹீ.ஹீ

      நீக்கு
    3. தண்ணீரை அள்ளி எடுத்தால் வரும்
      கிள்ளி எடுத்தால் வராது.


      நீக்கு
  3. "இலக்கணத்தைப் பிழையின்றி எழுதி வைத்தும்
    எதுகையையும் மோனையையும் அழகாய்த் தந்தும்
    இலக்கியத்தின் தன்மைகேற்ப இயற்கைக் காட்சி" என
    அத்தனையும் கம்பனின் ஆளுமையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. "சொற்பூவில் தேன்சொட்டத் தொடுத்த மாலை!
    சுவைத்தமிழின் சூத்திரத்தைப் பொதித்த கோவை" அத்தனையும் அருமை வரிகள் எனினும் நான் சுவைத்த வரிகள். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  5. அருமையா கேள்வி!... சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தொழி.

      நீக்கு
  6. கேட்டீர்களே ஒரு கேள்வி. கம்பன் பதில் சொல்வதாயிருந்தால் என்ன சொல்வான். வடமொழி காவியத்தை நம் தமிழர் படிக்க தீந்தமிழில்யாத்தேன் இதை என்று சொல்லி இருப்பாரோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தான் “கம்பர்“ ஐயா.

      ஆனால்
      உங்களின் பதிலிலும் சரியான நியாயம் இருந்தாலும் அந்தச் சபையிலேயே கவிஞர் பாரதி தாசன் அவர்கள் அளித்த பதில் இது.
      “கம்பன் காலத்தில் வைணவ சமயம் குறைக்கப்பட்டு சைவ சமயம் மேலோங்கி இருந்தது. அதைச் சமன் படுத்த கம்பன் வால்மீகியைத் தழுவி இராமயணம் பாடினான்“ என்றார்.

      இதில் எது சரியோ... எனக்குத் தெரியவில்லை.
      ஆனால் கம்பன் வால்மீகியைத் தழுவாமல் தானாகவே ஒரு காவியத்தைத் தமிழில் படைத்திருந்தால் இன்றைய இந்த இராயணத்தைவிட அது மேலும் புகழ் அடைந்திருக்கும் என்பது என் சிறிய மூளைக்கு எட்டிய கருத்தாக எண்ணுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் அருமையான கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  7. ஆகா... சகோதரீ, நான் இப்பத்தான் உங்களின் இந்தப் பதிவைப் பார்த்தேன். அருமையான கேள்வி. இதே தலைப்பில் வைரமுத்து எழுதிய கவிதையைப் படித்திருப்பீர்கள். நானும் ஒன்று எழுதியிருக்கிறேன். கம்பன் ஓர் அமுத சுரபிதான். நம்மையெல்லாம் வகைவகையாய்ச் சிந்திக்க வைத்திருக்கிறானே? நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பன் ஓர் அமுதசுரபி தான் - உங்களின் கருத்து உண்மை தான் ஐயா.

      வைரமுத்து கவிதையைப் படித்து இருக்கிறேன்.
      அவரின கற்பனை அருமையாக இரக்கும்.

      உங்களின் கேள்வியையும் ஆவலாகப் படிக்க உள்ளேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  8. ஏன்இந்தக் கவிதையைநான் பார்க்க வில்லை?
    ..............என்பதைநான் சிந்தித்தேன், “தொடர வில்லை
    தேன்சிந்தும் வலைப்பூவை” என்று கண்டேன்,
    .............தினம்தொடர, தொடர்பாளன் ஆனேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வான்பொழிந்தால் வளம்சேர்ந்த வனத்தைப் போல
      ...... வந்தளித்த வாழ்த்தாலே குளிர்ந்து போனேன்!
      நான்அமைத்தக் கவிவலையில் வந்து சேர்ந்த
      ....... நா.முத்து நிலவனுக்குச் சொன்னேன் நன்றி!

      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. நல்ல பகிர்வு..... கம்பன் இருந்திருந்தால் பதில் சொல்ல தயங்கி இருப்பாரோ!

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் தயங்கினாலும் மற்றவர்கள் நிறைய பதில் வைத்திருக்கிறார்கள்.

      நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  10. இந்த வலைத்தளத்தையும், கம்பனிடம் கேள்வி தொடரையும் இன்றுதான் பார்த்தேன். அதே வேளை மற்றொரு கம்பன் பற்றிய செய்தியையும் கண்டேன் - இது தற்செயலா? பார்த்ததிப்/படித்ததிப் பகிர்கிறேன் இங்கே: http://s-pasupathy.blogspot.com/2014/03/5-5.html
    “ கம்பனின் இசைச் செல்வத்தை நாளதுவரை யாரேனும் முழுவதும் கண்டுவிட்டதாகச் சொல்லமுடியுமா? இசைக்கு அடுத்தபடியாக மனோபாவந்தான் கவிஞனுக்கு மூலதனம். அந்த மூலதனம் இல்லாமல் --கவிக்கடை போடுவதெல்லாம் வீண்முயற்சியே. கம்பனது மனோபாவம் ( imagination) பல்வேறு வடிவங்களைக் கொண்டு ஒரு அற்புத சித்திரசாலையைப் படைத்திருக்கிறது. எனவேதான் இதைக் ’கம்பசித்திரம்’ என்கிறோம். இதற்கு மேலாக கம்பனிடம் நாம் காண்பது நாடகப் பண்பு. “கம்ப நாடகம்” என்று மணவாள மாமுனிகள் கூறுவது சிந்திக்கத் தக்கது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதும், ஊடுருவிப் பார்க்கும்போதும் நமக்குத் தோன்றுவதுதான் என்ன?

    இது மொழிபெயர்ப்புமன்று. சார்பு நூலுமன்று. “முதல் நூல்” என்றே முடிவு கட்டத்தக்க இலக்கிய படைப்புத்தான் கம்பராமாயணம் “
    --பி.ஸ்ரீ,ஆசாரியா, சரசுவதி ராமநாதன்,
    “ கம்பன் கலைக்கோயிலுக்கு ஒருகைவிளக்கு “ என்ற நூலில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முத்து சுப்ரமணியம் ஐயா.

      இதில் துவக்கத்தில் எழுதி இருப்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள்.
      ஆனால்...

      இது மொழிபெயர்ப்புமன்று. சார்பு நூலுமன்று. “முதல் நூல்” என்றே முடிவு கட்டத்தக்க இலக்கிய படைப்புத்தான் கம்பராமாயணம் “

      என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
      காரணம் கம்பன் தன் பாயிரத்திலேயே 5, 6, 10 செய்யுள்களிலேயே வால்மீகியைத் தழுவி எழுதியதைச் சொல்லி விட்டார்.

      தேவபாடையின் இக் கதை செய்தவர்
      மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
      நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
      பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ. பாயிரம் - 10

      ஆதலால் கம்பராமாயணம் “மூல நுால்“ என்பது சரியாகாது.

      பார்த்ததில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி முத்து சுப்ரமணியம் ஐயா.

      நீக்கு