புதன், 26 மார்ச், 2014

தூது சொல்ல யாரை அனுப்புவது?







  
   “என்னம்மா வாணி... கையைப் பிசைந்து கொண்டு யாரைத் தேடுற..?“ மாமா கேட்டபடியே வந்தார்.
   “என் தோழியைத் தான் மாமா“
   “என்ன இந்த நேரத்துல....? அப்படி என்ன அவசரம்?“
   “வந்து மாமா....“
   “சொல்லும்மா.... எங்கிட்ட உனக்கென்ன தயக்கம்?“
   “வந்து மாமா.... அம்மா கல்யாணத்திற்கு வரன் பார்க்கிறார்கள். இந்த விசயத்தை நான் உடனே அவரிடம் தெரிவிக்கனும். அதுக்காகத் தான் அவளைத் தேடுறேன்.“ தயக்கத்துடன் சொன்னாள் வாணி.
   “அது சரிபடாது வாணி“ யோசனையுடன் சொன்னார்.
   “ஏன் மாமா...?“
   “தாதி தூது தீது“ என்று காலமேகப் புலவர் ஒரு பாட்டாகவே சொல்லி இருக்கிறார். அதனால நீயே உன் காதலனின் பெயரைச் சொல்லிவிடு“ என்றார்.
    சற்று யோசித்த வாணி.... “அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் காளமேகப் புலவர்?“ கேட்டாள்.
   “இந்த நேரத்திலும் அதைக் கேட்க உனக்கு ஆசை வருதா...?“
   “எந்த நேரமாக இருந்தால் என்ன மாமா? நமக்கு வழி காட்டத்தானே நம் முன்னோர்கள் பாடி சென்று இருக்கிறார்கள். சொல்லுங்கள் மாமா. நான் கேட்கிறேன்.“ என்றாள் ஆவலாய்.
   மாமா சொல்லத் துவங்கினார்.
   “இது ஒரு தகர வருக்க வெண்பாவாகும்.“
   “தகர வர்க்கமா...? அப்படி என்றால்...?“
   “தகர வர்க்கம்“ என்றால் வெறும் த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ“ என்ற எழுத்துக்கள் மட்டும் தான்.“
   இந்தப் பாடல் தூது போகச் சொல்லி யாரை அனுப்புவது என்ற கேள்விக்கு பதிலாக அமைத்த காளமேகத்தின் பாடல்.

பாடலைக் கேள்.

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூத்தே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி.

   “இது தான் பாட்டு. உனக்குப் புரிஞ்சுதா...?“
   “இல்லை மாமா. எனக்குக் கொஞ்சம் கூட புரியலை. நிறைய தூது என்ற வார்த்தைகள் தான் காதுல ஒலித்தது. நீங்களே பொருள் சொல்லி விடுங்கள்“ என்றாள் வாணி.
   “இந்தப் பாடல் “வானம்பாடி“ என்ற திரைப்படத்தில் வரும். பொருளைச் சொல்கிறேன் கேள்“

சொல்லத் துவங்கினார்.

தாதி தூதோ தீது – அடிமைப் பெண்கள் சென்று சொல்லும் தூதோ பயன்படாது. (தாதி என்றால் அடிமைப்பெண்)

தத்தை தூது ஓதாது – கிளியோ சரியாகப் போய் தூது உரைக்காது. (தத்தை என்றால் கிளி)

தூதி தூது ஒத்தித்த தூததே – தோழியின் தூதானது நாளைக் கடத்திக் கொண்டே போகும் தூதாய் இருக்கும்.

தாதொத்த துத்தி தத்தாதே – பூந்தாதினைப் போன்ற தேமல்கள் என்மேல் படர்ந்து மிகாது இருக்க.. (தாது – பூக்களின் உள் இருக்கும் மகரந்தம்)

துதித்துத்தே தொத்தீது – தெய்வத்தைத் துதித்துத் தொடர்ந்தாலும் பயனற்றதாகும். –அதனால்...

தித்தித்த தோதித் திதி – எனக்கு இனிமையான என் காதலனின் பெயரை நானே ஓதுவேன்.

   அதாவது.... அடிமைப்பெண்களின் தூது பயன்படாது. கிளியை அனுப்பினால் அது சரியாக உரைக்காது. தோழியை அனுப்பினால் அவள் பிறருக்கு பயந்து நாளைக் கடத்தவாள். தெய்வத்தைத் துதித்து  வழிபட்டாலும் இந்த நேரத்தில் பயனற்றதாகும். அதனால் உன் கவலைக்கு வழி நீயே உன் காதலனின் பெயரை உரைப்பதாகும். இது தான் வாணி இதன் பொருள்.“ என்றார் மாமா.
   தன் மாமாவை நன்றியுடன் பார்த்த வாணி, “புரிஞ்சுது மாமா. நானே அவரின் பெயரைச் சொல்லிவிடுகிறேன்“ என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.


அருணா செல்வம்.
26.03.2014

32 கருத்துகள்:

  1. 'த'கரத்தில் இவ்வளவு அர்த்தமுள்ள பாடலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்கூல் பையன்.

      நன்றாக இருக்கிறது இல்லையா....
      நன்றி.

      நீக்கு
  2. பல பிரச்சனைக்கும் (வதந்"தீ") காரணம் இந்த தயக்கம் தான்... அதை காளமேகப் புலவரின் பாடலோடு விளக்கிய விதம் அருமை சகோதரி... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. கேட்டாலும் புரியாத, படிக்க முடியாத பாடலை அழகாகப் பதம் பிரித்து சொல்லியுள்ளமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  4. ஏற்கெனவே இந்தப் பாடலை
    அறிந்திருந்தாலும் இத்தனைத் தெளிவான
    விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  5. "தகர"த்துல பாட்டு கட்டிக்கினாங்கன்ன சரி...
    "தித்தித்த தோதித் திதி"ன்னு மெட்டல் சவுண்டு சோக்கா கீது... அப்பால... இன்னா படம்ன்னு பேர்லாம் சொல்லிக்கின...
    அல்லாம் சரி.... கட்சீவரைக்கும்... அந்தப் பாட்டு இன்னான்னு சொல்லாமப் பூட்டியேம்மே...?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நைனா.... அத்க்கு தான் எத்தையு முயிசா படிக்குனும்ன்னு சொல்றது. பாதிய வுட்டுட்டு பச்சா இப்புடி தான் வௌங்காது.

      அந்த பாட்டு இன்னான்னாக்க....அட இத்தாம்பா அது!

      (நைனா.... உங்கள் தளத்தில் என் வலையை இணைக்க முடியவில்லை. டிடி அண்ணாவிடம் தான் கேட்கனும்...)

      டாங்க்ஸ் நைனா.

      நீக்கு
  6. அந்த பாடலையும் இணைத்து இருந்தால் கேட்டும் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்து இருக்கலாம் !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ.... அவ்வளவு தொழில் நுட்பம் எல்லாம் எனக்குத் தெரியாதுங்க ஜி.
      இனி முயற்சிக்கிறேன்.
      நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  7. இந்தப் பாடலை நான் வாணியம்பாடி திரைப்படத்தில் கேட்டிருக்கிறேன், அதன் முழு விளக்கம் இப்பொழுதுதான் புரிந்தது. நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  8. அப்பப்பா இந்தப் புலமைக்கோர் எல்லையே இல்லை எனலாம்
    காலமேகப் புலவரைப் போல் இக்காலத்திலும் பாடல் எழுத
    வல்லவர்களும் உண்டோ என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது
    தோழி ! சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .த .ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரைப்போல் இந்த காலத்தில் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன் தோழி.
      தவிர அப்படி நுணுக்கமாக பாடடெழுதினாலும் அதை யாரும் சிறப்பானதாக இந்தக் காலத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது என் கருத்து.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. செய்யுள கதை வடிவுல சொல்லி, நல்லா புரிய வச்சிடீங்க....
    ரெம்ப நல்ல கருத்து... மிக்க நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பிரபு சார்.

      நீக்கு
  10. 'த' என்ற தனியெழுத்தாலே எழுதிய
    காளமேகத்தார் கவிபடிக்க - அதை
    நீங்க கதை கூறி விளக்க - நாளும்
    எங்கள் தமிழறிவு வளருது இங்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. அட ரொம்ப நல்லாயிருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க தோழி. எனக்கும் பிடிச்சிருந்தது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. காளமேகப் புலவரின் பாடல் - மிகச் சிறப்பான விளக்கம் இல்லாவிடில் நிச்சயம் புரிந்திருக்காது! :))))

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு

  13. வணக்கம்!

    தமிழ்மணம் 11

    கவி.கால மேகத்தைக் கண்டு படித்தால்
    குவியும் கவிதை கொழித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  14. பழம் பாடலே பழம், பாடலே! அருமை! அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் உண்மையான கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  15. மிக அருமையான விளக்கத்துடன் காள மேகப் புலவரின் பாடலை அதுவும் ஒரு கதை போல விளக்கியதற்கு மிக்க நன்றி!!! சகோதரி! மிக மிக அருமையான ஒரு தமிழ் இடுகை!!!! வியந்தோம்!!!! பாராட்டுக்கள்!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. கவி காளமேகத்தின் இந்தப் பாடல் கேள்வி பட்டிருக்க்றேன். இன்று முழுதாக படித்தேன். கவியின் தமிழ் விளையாட்டு அருமை. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு