திங்கள், 31 மார்ச், 2014

வேலி இல்லாப் பயிர்!!





   தான் ஊரில் இல்லாத இந்த மூன்று வருடத்தில் ஊரில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் அம்மா சொல்ல கௌதம் கேட்டபடியே சாப்பிட்டான்.
   அவன் துபாய் போய் இந்த மூன்று வருடத்தில் எதுவும் பெரியதாக மாறிடவில்லை. என்றாலும், மூன்றாவது தெருவில் பசு கன்று போட்டதிலிருந்து இன்று காலையில் பால்காரனுக்குப் பணம் கொடுத்தது வரையில் அம்மா சொன்னதைக் கேட்க சுவையாகத் தான் இருந்தது.
   இவ்வளவும் சொன்ன அம்மா, விபத்திற்குள்ளாகி இறந்து போன லாரி டிரைவர் நீலவண்ணனைப் பற்றி எதுவும் சொல்லாதது அதிசயமாக இருந்தது.
   அவனே கேட்டான். “அம்மா நம்ம லாரிக்கார அண்ணன் செத்துட்டாரே... இப்ப அந்த அக்கா புள்ளைங்க எல்லாம் எப்படிம்மா இருக்கிறாங்க...?“
   “ம்ம்ம்... இருக்கிறாங்க. அவன் செத்து தோ மூனு வருஷமாச்சி. இன்னும் கட்டுக்குலையாத மேனியாத்தான் திரியிறா.“ சொல்லும் போதே ஓர் எகத்தாளம்.
   “ஏம்மா.. என்னாச்சி...?“ அவன் கேட்க... அவனை முறைத்துவிட்டு, “அதெல்லாம் ஒனக்கெதுக்கு...? நீ அந்த பக்கமெல்லாம் போவாத.“ மறுபேச்சி பேசவிடாமல் நகர்ந்து விட்டாள் அம்மா.
   கௌதம் நண்பர்களுடன் இருந்த பொழுது ஒரு நாள் அந்த அக்காளைப் பற்றிக் கேட்டான். “ஆமாண்ட... ஊருல அவங்களைப் பத்தி ஒரு மாதிரியாத் தான் பேசுறாங்க. ராத்திரியில யாரோ ஒரு ஆம்பளயோட செருப்பு வாசல்ல இருக்குதாம். நைட்டுல யாரோ ஆம்பள வந்துட்டு போறானாம்....“ என்றான் ஒரு நண்பன்.
   கௌதமனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. லாரிக்கார அண்ணன் இருக்கும் பொழுது அந்த வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். துறுதுறுவென்று இரண்டு பிள்ளைகள். அந்த அக்கா நல்ல அழகி. கலகலப்பான பேர்வழி. அவங்களா இப்படி....? மனம் கனத்தது.

   ஒரு மாலைப்பொழுது. நண்பர்களிடம் பேசிவிட்டு வரும் பொழுது நேர் எதிரில் அந்த அக்கா. அதே கட்டழகு குறையாத உடல். அதே புன்சிரிப்பான முகம். பார்த்தான். பார்த்த்தும் பார்க்காதது போல் தலையைக் குனிந்துக்கொண்டான். “என்னப்பா கௌதம்... எப்படி இருக்கிற?“ அவளாகவே கேட்டாள். இதற்கு மேல் பதில் சொல்லாமல் நகர முடியாது.
   “நல்லா இருக்கிறேன்க்கா.... நானே ஊருலேர்ந்து வந்ததும் உங்களை வந்து பாக்கனும்ன்னு நெனச்சேன். ஆனால் முடியலை.“ என்றான் பொய்யாக.
   “பரவாயில்லப்பா. உன்னை மாதிரி ஆம்பளைப் புள்ளைங்க என் வீட்டுக்கு வராமல் இருக்கிறது தான் எனக்கும் நல்லது.“ சோகமாக ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு... “ஆமா... அம்மா எப்படி இருக்கிறாங்க?“ கேட்டாள்.
   “ம்... நல்லா இருக்கிறாங்கக்கா.“
   “நல்லதுப்பா. நீயும் வெளி நாடு போய் சம்பாதிக்கிறே. அம்மாவ நல்லா பாத்துக்கோ. பாவம் அவங்களும் சின்ன வயசுலே தாலி இழந்தவங்க. இந்த வயசுல கணவனை இழந்திட்டா சமுதாயத்துல எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கனும் தெரியுமா? அதனால கிடைக்கிற வலி... இப்போ தான் எனக்குத் தெரியுது. அவங்களும் இந்த கஷ்டத்தை எல்லாம் தாண்டிதான் வந்திருப்பாங்க. நல்லா பாத்துக்கோப்பா.“ புன்சிரிப்புடன் நகர்ந்தாள்.
   இவ்வளவு தெளிவாகப் பேசுகிறார்கள். இவர்கள் போய் அப்படியா....? கௌதம் யோசனையுடன் நடந்தான்.
   விறுவிறுவென்று நடந்தவள் என்ன நினைத்தாளோ... திரும்பி அவன் அருகில் வந்து நின்று, “கௌதம்... ஊருல எல்லாரும் நினைக்கிற படி நீயும் என்னை தப்பா நினைச்சிடாதே. ஊருல எல்லாருமே அவர் இருந்தப்போ நல்லாதான் பழகினாங்க. ஆனால் இப்போ காவலில்லாத பயிர்தானே என்ற எண்ணத்துடன் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதனால அவரோட செருப்ப நான் ராத்திரியில வாசல்ல வச்சிட்டு படுக்கிறேன். எனக்கு அவரோட செருப்பும் பாது காவலாக இருக்கிறது. இதுவும் கொஞ்ச நாளைக்கு வெளியில விசயம் தெரியிற வரைக்கும் தான். அப்புறம்.... வேற வழி இல்லாமா போயிடும். கௌதம்... நீயா இந்த விசயத்தை யார்கிட்டேயும் சொல்லிடாதே. நீ என் சொந்த தம்பி மாதிரி என்றதாலத்தான் சொன்னேன். வர்ரேன்ப்பா....“ அவள் போய்விட்டாள்.
   அவள் வார்த்தைகள்... தன்னையும் அவளைத் தப்பாகப் பேசிய எல்லோரையும் அதே செருப்பால் அடித்தது போல் உணர்ந்தான் கௌதம்.

அருணா செல்வம்.
31.03.2014

13 கருத்துகள்:

  1. நல்ல எண்ணத்தை கெடுக்க, தெரியாத வெளிஆட்கள் தேவையில்லை என்பதையும் கௌதம் உணர்ந்தால் சரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது? சுற்றி இருக்கிறவர்களை நாம் நம்பித்தானே ஆக வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. கண்ணால் காண்பதும் பொய்யென்பார்கள்...
    உண்மைதான் தீர விசாரிக்காமல் நாமாகவே தவறாக முடிவடுப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சிட்டு.

      நீக்கு
  3. மனதை நெகிழ வைத்த துயரம் நிறைந்த பகிர்வு !
    பாராட்டுக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வெறும் கதை தாங்க. சின்ன சின்ன விசயங்களை இப்படி கதையாக்கி விடுவேன்.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  4. மனதை நெகிழ வைத்தது....

    பலர் பெண்களின் வாழ்க்கை இப்படி அநியாயமான புரளிகளால் சீரழிந்து விடுகிறது.... உண்மை தெரியாது பொய்யும் புரட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  5. வாழ்வின் துயர கட்டம்.. மனித பலவீனங்களை வெல்ல புத்திசாலிப்பெண் எடுக்கும் முடிவு. அருமை.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான கதை! கண்ணும் காதும் மூக்கும் வைத்து பேசும் ஊர் மட்டுமல்ல உற்றார்களும்தான்! நாம் தான் விழிகளை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  7. என்ன ஒரு உத்தி!
    சின்ன ஆனால் சிறப்பான கதை அருணா!

    பதிலளிநீக்கு
  8. சிக்கனமான வார்த்தைகளுடன் அருமையான கதை. கணவரின் செருப்பும் தைரியம் தரும்....

    பதிலளிநீக்கு