“டேய்... நீ செஞ்ச காரியத்துக்கு
எனக்கு மட்டும் சிவன் மாதிரி நெற்றிக்கண் இருந்தா... அப்படியே உன்னை எரிச்சிடுவேன்“
உருவத்திலும் குரலமைப்பிலும் வீ.கே ராமசாமி மாதிரி இருந்த முதலாளி இப்படி கத்தவும்
நாகேஷ் உடலமைப்பில் இருந்த வேலைக்காரன் அலட்சியமாகப் பார்த்து லேசாக சிரித்தான்..
“டேய்... நா கோவத்துல திட்டுறது
ஒனக்கு அலட்சியமா போச்சா....“ கோபத்துடன் அவனைப் பார்த்துக் பற்களைக் கடித்தார்
முதலாளி.
“நா ஒன்னும் உங்கள அலட்சியப்படுத்தலங்க.
நீங்க எப்போதும் சொல்லுற இந்த வார்த்தையை நினச்சிதாங்க சிரிச்சேன்.“ என்றான்.
“ஏண்டா... எனக்கு சிவன் மாதிரி
நெற்றிக்கண் இல்லை என்பது ஒனக்கு சிரிப்பா வருதா...? தோபாருடா.... எனக்கு மட்டும் அந்த
மூணாவது கண் இருந்திருந்தா நிச்சயம் உன்னை எரிச்சிருப்பேன்.“ கோபத்தில் மூச்சு
வாங்கியது.
“அதாங்க முடியாது. ஏன்னா...
சிவனுக்கு மூணு கண் இல்லையாம்.“
“அட அசடே.... படிக்காத முண்டம்.
நான் வணங்கும் சிவனை நீ அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஐயோ... முக்கண் முதல்வா....
இவனுக்கு நல்ல புத்தியக் கொடுப்பா....“ வானத்தைப் பார்த்து வேண்டினார்.
“ஐயா.... சிவனுக்கு மூணு கண்
இல்லையாம். அரைக்கண் தானாம். இதை நான் சொல்லலை. நீங்க எப்பப்பாரு என்னை இப்படித்
திட்டுறீங்களேன்னு உங்க நண்பர் கிட்ட கவலையா சொன்னேன். அதற்கு அவரு தான் இப்படி
சொன்னார்“. என்று சொல்லவும் அந்த நண்பர் அங்கே வரவும் நேரம் சரியாக இருந்தது.
“ஏன்னப்பா முனைவா.... நீயா
இவன்கிட்ட சிவனுக்கு அரைக்கண்ணு தான்னு சொன்ன?“ வந்தவரைக் கேட்டார் முதலாளி.
“சிவனுக்கு அரைக்கண் தான் என்று
நான் சொல்லலை. ஆனால் சிவனுக்கு அரைக்கண் தான் உள்ளது என்பதைப் பழங்கால புலவர்
காளமேகம் என்பவர் இப்படி பாடி இருக்கிறார்.“ என்றார்.
“காளமேகப் புலவரா...? சரி. அவர் சிவனுக்கு
அரைக்கண்ணு தான் உள்ளதுன்னு எதை வைத்துச் சொன்னார்? சொல்லு“ என்றார் ஆர்வமாக
முதலியார்.
“அவர் பாடியதைச் சொல்கிறேன் கேள்.
முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே – மிக்க
உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்
றமையுமித னாலென் றறி.
இந்த வெண்பாவின் பொருளைச் சொல்கிறேன் கேள்.
அதாவது
முன்னோர்கள் சிவபெருமானை மூன்று கண்கள் உடையவன் என்று சொல்வார்கள். ஆனால்
அவனுக்கு உள்ளது அரைக்கண் தான். எப்படியென்றால் உமையாளின் கண் ஒன்றரை ஆகும்
(ஆதாவது சிவனின் சமபாதி உமையாள். அதனால் அவளின் கண்கள் ஒன்றரை) மற்று ஊன் கண் வேடனுடையது (அதாவது கண்ணப்பனார்
தன் கண்களில் ஒன்றை சிவபெருமானுக்குப் பொருத்தினார் என்பதைச் சிவபுராணத்தில்
சொல்லி இருக்கிறார்கள்) அதனால் மீதி இருக்கும் அரைக்கண் தான் சிவபெருமானுக்கு
உரியது” என்று பாடி இருக்கிறார்.
அதனால் தான் உன் வேலைக்காரனிடம் அப்படி சொன்னேன்.“ என்றார்.
முதலாளி,
“பாருடா.... அந்தக் காலத்துல எப்படியெல்லாம் பாடி இருக்கிறாங்க....“ என்று வாயில்
கை வைத்தபடி வியந்தார்.
“இது மட்டும் இல்லப்பா.... இன்னும்
குறிப்புக்காக சிலேடையாக வித்தாரச் செய்யுளாக நிறைய பாடல்கள் காளமேகப் புலவர்
பாடியிருக்கிறார். நான் நேரம் கிடைக்கும் பொழுது ஒவ்வொன்றாக சொல்கிறேன். இப்போ
கிளம்புகிறேன்“ என்று சொல்லியபடி கிளம்பினார்.
இனி நம்மை
பழையபடி திட்டமாட்டார் என்ற நம்பிக்கையுடன் வேலையாள் முதலாளியைப் பார்த்தான்.
(படித்ததைக் கற்பனைக் கதையுடன் சேர்த்துப் பதித்தேன்.
நன்றி)
அருணா செல்வம்.
விளக்கம் அருமை சகோதரி...
பதிலளிநீக்குநேரம் கிடைக்கும் பொழுது ஒவ்வொன்றாக சொல்லுங்க...
வாழ்த்துக்கள்...
நிச்சயம் சொல்கிறேன் தனபாலன் அண்ணா.
நீக்குஉண்மையில் மிக மிக அருமையான கற்பனைக் களஞ்சியம் அது.
காளமேகப் புலவர் சொன்னது எழுதியது எல்லாம் உண்மைதானா? அல்லது அவர் எழுதிய மொக்கைகளை நாம் இப்படி பல அர்த்தம் கொண்டு படித்து செல்கிறோமா என்ன?
பதிலளிநீக்குஅப்படி இருக்காது.
நீக்குஏன் என்றால்... அவரிடம் தலைப்புகளையோ அல்லது இந்த பொருளில் பாடுங்கள் என்று ரசிகர்கள் கேட்டதால் பாடப்பட்டதாக அவரின் தொகுப்பு புத்தகத்தில் உள்ளது.
தவிர மொக்கைகளைக் கூட உங்களைப் போன்ற ஆட்கள் சொன்னால் ரசிக்கும் படியாகத்தானே இருக்கிறது.
வருங்காலத்தில் உங்கள் கவிதைகளை படிக்கும் புதிய தலைமுறையினர் இந்த அருணா செல்வ புலவர் இப்படி எழுதி இருக்கிறார் சொல்லி இருக்கிறார் என்று ஆராய்ச்சி செய்தாலும் செய்வாங்க... அந்த காலப் புலவர்கள் "ஏட்டில்" எழுதி சென்றனர் நீங்களோ "நெட்டில்" எழுதி செல்கிறீங்க.. என்ன மாற்றம்...
பதிலளிநீக்குஇங்கே
நீக்குஅவர் ஏட்டில் எழுதியதை
நான் நெட்டில் எழுதினேன்.
மாற்றங்கள் எப்பொழுதுமே மாறுவது தானே “உண்மைகள்“
கவிதையும் அதுபற்றிய கருத்தும் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அதை நீங்கள் கதைபோலச் சொன்ன விதம் மிகவும் அழகு. இப்பகுதியைத் தொடருங்கள் நன்றியும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குநிச்சயம் தொடருகிறேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி ஐயா.
நிஜம்தானே! சிவனுக்கு அரைக்கண்தான்! ஒத்துக் கொள்கிறோம் அருணா!
பதிலளிநீக்குஇந்தப் பாடலைப்படித்ததும் நானும் ஒத்துக்கொண்டேன் தோழி.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.
அருமையான படைப்புத் தோழி !வெண்பா விருத்தம் ஒன்றினை உணர்ந்து
பதிலளிநீக்குபொருள் குறித்து இதுவரை நாம் அறிய முற்படாத புதிய தகவல் ஒன்றினை
சிறந்த முறையில் மனதோடு ஒட்டிக் கொள்ளும் வகையில் கதை கலந்து தந்த விதம் பாராட்டிற்குரியது ! வாழ்த்துக்கள் தோழி தொடர்ந்தும் இது போன்ற நற் செய்திகளை இவ்வாறு தொகுத்து அளியுங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
நான் காளமேகத்தைப் படிக்கும் பொழுது வியந்தேன்.
நீக்குநான் பெற்ற இன்பத்தை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன் தோழி. நன்றி.
///நான் காளமேகத்தைப் படிக்கும் பொழுது வியந்தேன்///
நீக்குஇந்த புக்கையெல்லாம் இன்னுமா படித்து கொண்டிருக்கிறீர்கள் அதுவும் இந்த காலத்தில்.. கொடுத்து வச்ச மகராசியம்மா நீ உனக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கிறது என்றால் நீ அதிர்ஷடசாலியம்மா
சிறந்த பகிர்வு.
பதிலளிநீக்குதங்கள் பதிவை வரவேற்கிறேன்.
நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
நீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குகாள மேகப் புலவரின் கவிதை ஒன்று படிக்கக் கிடைத்தது. நன்றி
பதிலளிநீக்குநானும் காளமேகப் புலவரின் புத்தகத்தை ரொம்ப நாட்களாகத் தேடினேன். இப்பொழுது தான் கிடைத்தது. இனி அதில் இருக்கும் நல்ல சுவையான பாடல்களைப் பகிர்கிறேன்.
நீக்குநன்றி ஐயா.
விளக்கம் அருமை...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குமார்.
விளக்கம் அருமையாக இருக்கிறது !
பதிலளிநீக்குஅருமையான பாடல்..... காளமேகப் புலவரின் பல பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கும். ஒவ்வொன்றாய் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பதிலளிநீக்கு