வெள்ளி, 7 மார்ச், 2014

நான் பூதமான கதை!! (நகைச்சுவை நிகழ்வு)



   
   ஒரு முறை ஒரு திருமணத்திற்குப் போக என் அண்ணன் அண்ணி அவர்களின் ஆறு வயது மகள் சோனியாவும் ஊரிலிருந்து என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். நாங்களும் அந்தத் திருமணத்திற்கு போவதாக ஏற்பாடு.
   திருமண தம்பதியர்க்குப் பரிசு பொருள் வாங்காததால், எங்களைக் கிளம்பி ரெடியாகி இருக்கும்படி சொல்லிவிட்டு என் கணவருடன் அவர்கள் இருவரும் கடைக்குச் சென்றுவிட்டனர்.
   நானும் மற்ற வேலைகளை முடித்துவிட்டு, சோனியாவை அழகாக உடுத்திவிட்டேன். பின்பு அவளை டீ.வி பார்க்கச் சொல்லிவிட்டு, நானும் குளித்து அலங்காரம் (மேக்கப்) பண்ணிக்கொண்டேன்.
   திருமணத்திற்குப் பட்டுப்புடைவையைக் கட்டிக்கொண்டதால் எந்த வேலையும் செய்ய விரும்பாமல் நாமும் டீ.வி பார்க்கலாம் என்று ஹாலுக்கு வந்தேன்.
   என்னைக் கண்டதும் சோனியா கண்களை ஆச்சர்யமாக விரித்து... “அத்தை... நீங்க ரொம்ப ரொம்ப....“ அதற்கு மேல் அவளுக்குச் சொல்லத் தெரியாமல் வார்த்தையைத் தேடினாள். நானும், ஆஹா... நாம்ம அண்ணன் பொண்ணு நம்மைப்பற்றி ஏதோ சொல்ல வருகிறாள் என்று நினைத்து... “என்ன சொல்லவர்றே சோனியா? சொல்லும்மா“ என்றேன் ஆவலாக.
   அவள் சில நொடிகளில் வார்த்தையைத் தேடிவிட்டு, “அத்தை.. நீங்க.... நீங்க....ரொம்ம்ம்ம்ப பூதம் அத்தை“ என்றாள். (எனக்கு ஷாக்)
   “பூதமா...?“ கேட்டேன்.
   “ஆமா. நீங்க பூதம் தான் அத்தை“ என்றாள்.
   எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
   குளித்துவிட்டு ஈரத்துடன் பவுடர் போட்டதால் பூத்துவிட்டதோ என்று நினைத்து முகத்தை உடனே அழுத்தத் துடைத்துவிட்டு, “இப்போ பரவாயில்லையா...?“ என்று கேட்டேன். அவள் சற்று யோசித்துவிட்டு “இப்பவும் நீங்க பூதம் தான் அத்தை“ என்றாள் லேசாக சிரித்தபடி.
   எனக்குக் கோபம் தலைக்கேறியது. இந்தத் திம்மாத்துண்டு வாண்டு என்னைக் கலாய்க்கிறதா...என்று நினைத்தபடி, “பரவாயில்லை சோனியா... நீயாவது உன் வாழ்க்கையில ஒரு பூதத்தைப் பார்த்திருக்கிற. ஆனால் நான் இது வரையில எந்த ஒரு பூத்தையும் பார்த்ததில்லை“ என்றேன் சற்று வாட்டமாக முகத்தை வைத்துக் கொண்டு.
   அவள் உடனே, “ஏன் அத்தை அப்படி சொல்லுறீங்க? நீங்க ஒரு பூதம். உங்க அக்கா ஒரு பூதம், உங்க தங்கச்சி ஒரு பூதம், உங்கள் அம்மா கூட பூதம் தான்“ என்றாள்.
   ஐயோ... இவளைப் பேசவிட்டால் நம் குடும்பத்தையே பூதக்குடும்பம்ன்னு சொல்லிடுவாள் என்று நினைத்து “போதும் போதும் போய் டீவிய பாரு.“ என்று சற்று கோபமாகச் சொன்னேன். அவள் என்னை ஒருமாதிரி கவலை கலந்து பரிதாபமாக பார்த்து விட்டு திரும்பிக்கொண்டாள்.
   எனக்கும் அவள் முகத்தை அப்படிக் கண்டதும் சற்று கவலையாகிவிட்டது. அவள் சின்னப்பிள்ளை. அவள் மனத்தில் பட்டதைச் சொன்னாள். இதைப்போய் பெரியதாக எடுத்துக் கொண்டோமே... என்று என்னையே நொந்துக்கொண்டேன்.
   இருந்தாலும் திரும்பத்திரும்ப கண்ணாடியைப் பார்த்து, ஏன் அப்படி சொன்னாள்? எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது. அப்படி ஒன்றும் பூதம் போல் தெரியவில்லையே என்று நினைத்தபடி சரியானதையே திரும்பத் திரும்பச் சரிசெய்தேன்.

   சற்று நேரத்தில் கடைக்குப் போனவர்கள் திரும்பி வந்தார்கள். என்னைப் பார்த்ததும் என் அண்ணி... “வாவ் சூப்பரா இருக்கிறீங்க“ என்றார்.
   எனக்கு சந்தேகம். “நான் சரியாகத் தானே உடுத்தி இருக்கிறேன்? ஏதாவது மாற்றமாகத் தெரிகிறதா?“ என்று கேட்டேன்.
   “ஏன்?“ என்று சொல்லியபடி என்னைச்சுற்றிப் பார்த்துவிட்டு, “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. நல்லா அழகாகவே இருக்கிறீர்கள்“ என்று சொன்னார்.
   நான் உடனே... “நீங்க இப்படி சொல்லுறீங்க. உங்க பொண்ணு என்னை என்ன சொன்னாள் தெரியுமா...?“ என்றேன்.
   என் அண்ணி ஆர்வமாக... “என்ன சொன்னாள்?“ என்று கேட்டார்.
   “அவள் என்னை பூதம்ன்னு சொன்னாள்“ என்றேன். அதைக் கேட்டதும் என் அண்ணிக்குச் சிரிப்பு தாங்கவில்லை. என் அண்ணனை ஏளனமாகப் பார்த்தபடி வேறு சிரித்தார். அண்ணனும் சிரித்தார்.
   நானும் அண்ணனைப் பார்த்தேன். என் பாவமான முகத்தைக் கண்ட என் அண்ணன், “அது ஒன்னும் இல்ல அருணா. நேத்து கிளம்பும் போது எனக்கும் உங்க அண்ணிக்கும் சின்ன வாக்குவாதம். அந்த நேரத்துல டீவியில மை டியர் பூதம்“ன்னு விளம்பரம் வந்திருக்கிறது. சோனியா அதைக் கேட்டுட்டு “பூதம்“ன்னா என்ன அப்பா என்று கேட்டாள். நான் கோபத்துடன் இருந்ததால “தோ... உங்க அம்மா மாதிரி இருக்கிறவங்களைத் தான் பூதம்ன்னு சொல்லுவாங்க“ என்றேன்.
   அப்படி சொன்னதும் உன் அண்ணி என்னை முறைச்சிது. நான் உடனே “உங்க அம்மா மாதிரி அழகா இருக்கிறவங்களை பூதம்“ன்னு சொல்லுவாங்ன்னு மாத்தி சொல்லிட்டேன். அதனால் தான் அவ உன்னை அப்படி சொல்லி இருக்கிறாள்“ என்றார் அண்ணன் சிரித்தபடி.
   அப்பொழுது தான் அவள் சொன்னத்தின் காரணம் புரிந்தது. திருப்தியுடன் நானும் சிரித்துவைத்தேன்.

அருணா செல்வம்.


28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அடடா.... என்னே சிரிப்பு! சத்தம் இங்கு வரைக்கேட்கிறதுங்க.

      மிக்க நன்றி ஜனா ஐயா.

      நீக்கு
  2. அண்ணனுக்கு "ஸ்பெஷல் டிரீட்" எதுவும் இல்லையா...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்.... அப்புறம் நல்லாவே கொடுத்தோம்.

      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. இதுக்குதான் விளையாட்டுக்குக்கூடபசங்களுக்கு தப்புத் தப்பா எதையும் சொல்லித் தரக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தோழி. நான் ஒருமுறை என்னைக் காப்பாத்திக்க தவறாக சொல்லிக்கொடுத்து அசடு வழிந்த கதையும் இருக்கிறது.

      கருத்துக்கு நன்றி தோழி.

      நீக்கு
  4. அழகான ராட்சசின்னு சொல்லி இருப்பார் போலிருக்கே !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த “அழகான “ என்பதை ஏனோ சேர்ப்பதில்லை.

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க் நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. என் கதை உங்களுக்குச் சிறுகதையாகத் தெரிகிறதா தோழி...?

      மிக்க நன்றி.

      நீக்கு
  6. உங்க அண்ணன் உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு அப்படி சொல்லி இருப்பாருங்க.... பாவம் நீங்க நல்ல ஏமாளியா இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  7. இதுக்குத்தான் குழந்தைங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்னு சொல்றது! ரசிக்க வைத்த பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் சரிதான் சுரேஷ்.
      கருத்துக்கு மிக்க நன்றி.

      (ஏன் உங்களின் புகைபடத்தை மாற்றினீர்கள்? இந்த படம் சுமார்தான்)

      நீக்கு
  8. நல்ல வேளை கடைசிவரைக்கும் குழந்தை சொன்ன பூதம் என்பதன்
    அர்த்தம் புரியாமல் போயிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்பாவம் என் தோழி அடிக்கடி கண்ணாடி முன்னாடி வந்து நின்று கொண்டு கேள்வி மேல கேள்வியைக் கேட்க வேண்டியது தான் :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஏன் கேட்கிறீர்கள்...? அந்த முக்கால் மணிநேரமும்,... நான் மிகவும் குண்டாகிவிட்டது போலவும், கோரப்பற்கள் முளைத்துவிட்டது போலவும், மிகவும் கறுப்பாகிவிட்டது போலவும், அரக்கத்தனமான சாயல் வந்துவிட்டது போலவும் தோன்ற பலமுறை கண்ணாடியைப் பார்த்துக்கொண்டேன்.

      நன்றி தோழி.

      நீக்கு
  9. ஹா ஹா ஹா ஹா யப்பா அழகா இல்லாத பெண்ணா இருந்தாலும் நீங்க ரொம்ப அழகுன்னு முதல்லையே சொல்லிரனும் போல...

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. நல்லவேலை.... பூதசகோதரின்னு சொல்லாம போனீங்களே....

      நன்றி குமார்.

      நீக்கு

  11. வணக்கம்!

    சின்னக் குழந்தை சிறப்புடன் செப்பியதால்
    என்னுடைய வாக்கும் இதற்கு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை அவள் “பூதம்“ என்பதற்காக மகிழ்ந்தா வாக்களித்தீர்?

      ம்ம்ம்.... நன்றி கவிஞர்.

      நீக்கு
  12. சிறந்த பகிர்வு
    சிந்திக்க வைக்கிறியள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. விளக்கம் தெரிகிற வரை உங்களை நீங்களே பல முறை கேட்டுக் கொண்டிருப்பீர்கள் ‘நான் பூதமா?”..... :))))

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  14. நல்ல நகைச்சுவை
    பூதமானக் கதை ன்னு "க்: சேர்த்து இருக்கீங்களே இது சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறு தான் மூங்கில் காற்று.
      புதமான என்பது பெயரெச்சம். தெரியாமல் எழுதிவிட்டேன்.
      தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு