செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

“இஞ்சி“ இடுப்பா? “இஞ்ச்“ இடுப்பா? (வாக்குவாதம்)



நட்புறவுகளுக்கு வணக்கம்.
    ஒருமுறை உறவினர் வீட்டுப் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தோம். அங்கே நடந்த கலகலப்பான வாக்கு வாதத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.


    விழா கலகலப்பாகப் போய் கொண்டிருந்தது.
ஆண்கள் எல்லோரும் கும்பலாக அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே (“தண்ணீ“ கிளாசுடன்) அரட்டை அடித்தபடி சந்தோஷமாக இருந்தார்கள். அப்பொழுது திரையில் இரண்டு பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
    இருவருக்கும் ஒல்லி உடம்பு. இருவரும் நெளிந்து நெளிந்து ஆடினார்கள். இதைப்பார்த்த ஒருவர் சொன்னார் “வைரமுத்து சொன்ன “இஞ்ச்“ இடுப்பு இதுதான் போல....“ என்றார் சிரித்தபடி.
    அதற்கு இன்னொறுவர் “அது “இஞ்ச்இடுப்பு இல்லை. வைரமுத்து “இஞ்சி“ இடுப்பு என்று தான் பாடினார்“ என்றார்.
    மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள்.
    அதற்கு முதலானவர்... “இல்லை இல்லை... பெண்கள் மெல்லிய இடையுடன் இருப்பதால் தான் அழகு என்றும் அதனால் தான் மெல்லிடை... நூலிடை... கொடியிடை என்றெல்லாம் கவிஞர்கள் பாடியுள்ளார்கள். இதனால் வைரமுத்து சொன்னது “இஞ்ச்“ இடுப்பு தான்“ என்றார்.
    அதற்கு இன்னொருவர்.... “பெண்களின் இடுப்பானது இஞ்சிபோல் வழவழப்பாகவும் பொன்னிறமாகவும்... மெல்லிய கோடுகளுடன் இருப்பதாலும் கவிஞர் இஞ்சி இடுப்பு என்று தான் பாடினார்... இல்லை என்றால் இஞ்சி காஞ்சி சுக்கு போல் என்று பாடி இருப்பார்...“ என்றார் சிரித்தபடி.
    முதலானவர் விடவில்லை. “பெண்களுக்கு மெல்லிய இடை இருந்தால் தான் இப்படியெல்லாம் ஆட முடியும். குண்டான பெண்களால் இப்படி ஆடமுடியாது. அதனால் வைரமுத்து “இஞ்ச்இடுப்பு என்று தான் எழுதியிருப்பார்.“ என்றார்
     “அப்படிப் பார்த்தால் அதே பாடலில் ஆணையும் அதே மாதிரி தானே “இஞ்சி இடுப்பழகா....“ என்று பாடியிருக்கார். ஆணுக்கு எதற்கு “இஞ்ச்“ இடுப்பு...?“ என்று ஒருத்தர் கேட்க, முதலானவர்    
    “ஆணுக்கும் சேர்த்துத் தான் பாடினார். ஆணும் தொந்தியும் தொப்பையும் வைத்திருந்தால் அழகாகவா இருக்கும்? அதனால் அவர் இருவருக்கும் சேர்த்து “இஞ்ச்“ இடுப்பு என்று தான் பாடினார்“ என்று விடாமல் பேசினார்.
     இதற்குள் இன்னொருவர் “வைரமுத்துவை விடுங்கள். நம் கவியரசு கண்ணதாசன் ஒரு பாடலில்

“உண்டென்று சொல்வதுந்தன் கண் அல்லவா...
வண்ணக் கண் அல்லவா...
இல்லை என்று சொல்லதுந்தன் இடையல்லவா...
மின்னல் இடையல்லவா...“

என்று பாடியிருக்கிறார். அப்போ அதில் வரும் கதாநாயகிக்கு (சரோஜா தேவி)  இடுப்பே இல்லைன்னு சொல்வீர்களா...?“ என்று கேட்டார்.
    இதற்கு முன்னவரால் பதில் சொல்ல முடியவில்லை. பேசாமல் கிளாசைக் காலி பண்ணிவிட்டு அமர்ந்து விட்டார்.

     பொதுவாக பெண்கள் நாங்கள் தனியாக அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். இவர்களின் வாக்கு வாதத்தில் நுழைய மாட்டோம். ஆனால் அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு தான் இருப்போம்.

    பிறகு அனைவருமே ஒன்றாக சாப்பிட அமர்ந்தோம். “இஞ்ச்இடுப்பு தான் என்று பேசியவருக்கு கொஞ்சம் குழப்பம். “கவிஞர்கள் ஏன் இப்படி பொய் சொல்லி பாடுகிறார்கள். அந்த அம்மாவுக்கு இம்மாம் பெரிய இடுப்பு. அதைப் போய் இல்லை என்று எப்படி பாடியிருக்கிறார்..... இருந்தாலும் கவிஞர்கள் நிறைய பொய் சொல்கிறார்கள். இல்லையென்றால் அதிகபடியாக வர்ணிக்கிறார்கள் . கவிஞர்களிடம் உண்மை கிடையாது“ என்று சொன்னார்.
    அந்தச் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த அனைவரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். (நான் ஒரு கவிஞர் என்பதால்... ஹா ஹா ஹா..) நான் பேசாமல் சிரித்துக்கொண்டு இருந்ததால் என் மாமா “அருணா... அவர் சொல்வதெல்லாம் உண்மையா...? இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா...?“ என்றார்.
    நான் சொன்னேன்.... “அவர் சொன்னது போல் கவிஞர்கள் நிறைய வர்ணிக்கிறார்கள். சிறியதைப் பெரியதாக்கிச் சொல்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் உண்மையைத் தான் அதிகப்படுத்திச் சொல்கிறார்கள். பொய் சொல்வதில்லை“ என்றேன்.
    அதற்குள் முன்னவர் “இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா....“ என்று பாடியது பொய் தானே....“ என்றார் தான் கண்டுபிடிதத்தை.
    நானும் அவரிடம்.... “நீங்கள் ஒரு விசயத்திற்கு ஆமாம்“ என்று சொல்வதென்றால் எப்படி தலையை ஆட்டி சொல்வீர்கள் என்று கேட்டேன்.
    அவர் தலையை மேலும் கீழும் ஆட்டி “ஆமாம் ... என்று சொல்வேன்“ என்றார்.
    “இல்லை என்று சொல்ல எப்படித் தலையை ஆட்டுவீர்கள்?“ என்று நான் கேட்க அவர், தலையை வலமும் இடமும் ஆட்டி “இல்லை... என்று சொல்லுவேன்“ என்றார்.
    நான் உடனே “கவியரசு இந்தச் செய்கையைத் தான் கருத்தாய் கவிதையில் வைத்துப் பாடியிருக்கிறார்.

“உண்டென்று சொல்வதுந்தன் கண் அல்லவா...
வண்ணக் கண் அல்லவா...
இல்லை என்று சொல்லதுந்தன் இடையல்லவா...
மின்னல் இடையல்லவா...“

நீங்களும் பாடிப்பாருங்கள்“ என்றேன்.

    உடனே அனைவருமே பாடிப் பார்த்துப் பாடலின் பொருள் புரிந்து மகிழ்ந்தார்கள்.
    அதற்கு முன்னவரும் “இனி மேல், கவிஞர் “இஞ்ச்“ இடுப்பு என்று பாடியிருந்தாலும் “இஞ்சி“ இடுப்பு என்று பாடியிருந்தாலும் இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கற்பனையும் வர்ணனையும் இருந்தால் தான் அது கவிதை...“ என்றார்.
    “அது மட்டுமில்லாமல் கருத்தும் இருக்க வேண்டும். அது தான் உண்மையான கவிதை“ என்றேன்.
    நண்பர்களே... நான் சொன்னது சரிதானே...?

அருணாசெல்வம்.
   
        
        



   

35 கருத்துகள்:

  1. பயங்கரமான ஆராய்ச்சி... நீங்கள் லியோனியின் பட்டிமன்ற குழுவில் சேரலாம் :)

    பதிலளிநீக்கு
  2. கவிஞர்கள் நிறைய வர்ணிக்கிறார்கள். //
    உண்மைதான் இஞ்சி இடுப்பு என்பதன் அர்த்தம் மெலிதான சற்று பருத்து நளினமாக உள்ளதை பாட்டின் நயம்கருதி பாடியிருப்பார்கள் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. இப்போது புரிந்ததா நக்கீரன் என்று நான் சொன்னதன் அர்த்தம்.அன்புடன்,அப்துல் தயுப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

      (இப்பொழுதும் புரியவில்லை.....
      நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்...?
      நான் ஒரு ட்யுப் லைட்டுங்க...)

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  5. ஹா... ஹா... ரசிக்க வைக்கும் உரையாடல்... கீழே ஒரு நாடகமே நடக்குதாம்...!

    நடையா... இது நடையா...? ஒரு நாடகமன்றோ நடக்குது...!
    இடையா... இது இடையா...? அது இல்லாதது போல் இருக்குது...!

    வெள்ளிக்கண்ணு மீனா வீதிவழி போனா...
    தையாத் தக்க தையாத் தக்க உய்யா...

    (திரைப்படம் : அன்னை இல்லம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய பாடலை
      நினையுறுத்தியதற்கும் மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      (அது இல்லாதது போல் இருக்குது...!
      அது இல்லாதது போல் “இருக்குதாம்”
      இந்த இடத்தில் தான் கவிஞர் நிற்கிரார்)

      நீக்கு
  6. சரிசரிசரிசரிசரிசரிசரிசரிசரிசரிசரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”உண்மைகள்“ உண்மையை ஒத்துக்கொண்டால்...
      சரிசரி தான்.

      மிக்க நன்றி.

      நீக்கு
  7. உண்டென்று சொல்வதுந்தன் கண் அல்லவா...
    வண்ணக் கண் அல்லவா...
    இல்லை என்று சொல்லதுந்தன் இடையல்லவா...
    மின்னல் இடையல்லவா...“

    நானும் பாடிப் பார்த்தேன் என்ன அழகான பாடல் வரிகளைக் கொண்டு விளக்கியிருக்கிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சசிகலா..
      தலையை ஆட்டியபடிப்
      பாடிப்பார்த்தீங்களா... ?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. இல்லை என்று சொல்வதன் விளக்கம் அருமை....எனக்கு கூட ஒரு சந்தேகம் உண்டு... சின்ன சின்ன ஆசை எனும் ரோஜா படப்பாடலில் வருவது சிக்கிடையா, சிற்றிடையா...
    சிற்றிடைக்கு மேலே சேலை கட்ட ஆசை என்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி.

      தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

      தவிர சிக்கிடையா...? சிற்றிடையா...?
      என்று சந்தேகம் கெட்டிருக்கிறீர்கள்.
      முதலில் உங்கள் சந்தேகமே தவறு!
      பாடலைத் திரும்ப உற்றுக் கேட்டுப்பாருங்கள்.

      அது சிக்கிடையும் கிடையாது!
      சிற்றிடையும் கிடையாது!

      “சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை” என்று தான் பாடியிருக்கிறார்.

      நன்றி.

      நீக்கு
  9. சரியான விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  10. அருணா கண்ணதாசனின் கவிதைக்கு புது விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள், வித்யாசமான விளக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்மாச்சி அண்ணா...

      இது புது விளக்கம் கிடையாது.
      இது தான் உண்மையான விளக்கம்.
      பாடல் முழுவதையும் கேட்டுப்பாருங்கள்.
      பொருள் புரிந்து விடும்.

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. நாகராஜ் ஜி....
      இது புது விளக்கம் கிடையாது.
      இது தான் உண்மையான விளக்கம்.
      பாடல் முழுவதையும் கேட்டுப்பாருங்கள்.
      பொருள் புரிந்து விடும்.

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  12. விளங்கியது ' இல்லை' என்பதன் அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  13. வைரமுத்து பாடலுக்கான கேள்விக்கு ... பதில் கண்ணதாசன் பாடல்!! விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் கேட்டதற்கு மட்டுமே பதில் சொன்னேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி என்.எஸ்.கே. அவர்களே.

      நீக்கு
  14. இதுக்கு பின்னூட்ட்னம் நான் போடலை என்றால் எப்படி?
    காதலர்களும் கவிஞர்களும் ஒன்னு தான்; பேனைப் பெருமாளாக்குவார்கள்; இல்லாததை இருக்கு என்பார்கள்! காதலிகளை கேட்டுப் பாருங்கள்....காதலர்கள் அந்த மூடில் கவிஞராகவெ அகிவிடுவார்கள்.

    மானே! தேனே!நிலவே! அமுதைப் பொழியும் நிலவே..பொய்யின் உச்சம் அப்போது தான் காதலர்களிடம் பார்க்கமுடியும். இதெல்லாம் அந்த வகை தான். காதலிகளுக்கும் இது "நன்றாக" தெரியும்...அதைத் தான் அவர்கள் மனது விரும்புகிறது.

    அதனால் தான், பதினெட்டு வயது பருவமங்கையை காதலியை....
    பீப்பா மாதிரி இருந்தாலும் காதலர்கள் அழைப்பதோ பாப்பா...!

    குடிகாரன் பேச்சுக்கும் காதல் வயப்பட்ட காதலர்களுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை; இரண்டுமே போதையினால் வருவது தான்.
    சில காதலர்கள் 'கவி' ஆகவும் மாறி விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      நீங்கள் “கவி“ ஆக மாறியதும் இந்தக் காதலால் தானா...?

      உண்மைகளை அப்பட்டமாக ஒப்புக்கொண்டதற்கு
      மிக்க நன்றி நம்பள்கி.

      (இந்தக் “கவி“ எப்படியெல்லாம் தாவித் தாவிப் பாடியது
      என்று அக்காவிடம் தான் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.)

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  16. புதுமையான விளக்கம்.

    ஆனாலும் கவிஞர்கள் கொஞ்சம் மிகைபடச் சொல்வதும், இல்லாததை கற்பனை செய்வதும் வழக்கம்தானே!

    'கவிதைக்குப் பொய்யழகு' என்பதும் கவிஞர் வாக்குதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராம் அவர்களே.... கவிதைக்குப் “பொய்“ தான் அழகு.

      உண்மைகளைப் பாடினால்
      கருத்திருக்கும்... ஆனால்
      அழகு இருக்காது.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  18. அருமையை இருக்கு உங்க விளக்கம் கவிஞ்சர்களின் எண்ணத்தை பற்றி அதைவிட ஆம் ,இல்லை என்பதற்கு தலையாட்டலும் விளக்கமும் உங்கள் மற்ற இடுகைகளையும் படித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மலர்பாலன்.

      தொடர்ந்து வந்து படித்து...
      தவறுகள் இருப்பின் திருத்துங்கள்.

      நீக்கு
  19. நல்ல ஆராய்ச்சி. விட்டா பி.எச்.டி வாங்கிடுவீங்க போல?!

    பதிலளிநீக்கு