Sunday, 3 February 2013

நான் வாங்கிய “பல்பு ” (நகைச்சுவை)
நட்புறவுகளுக்கு வணக்கம்.
    ஒரு முறை இந்தியாவிற்கு சென்றிருந்த போது (எந்த வருடம் என்று ஞாபகம் இல்லை) நான் வாங்கிய பல்பு இது. யாரிடமும் சொல்லாதீர்கள் !!!


     ஓர் உறவினர் திருமணத்திற்கு என் கணவருக்கு லீவு இல்லாததால் நாம் மட்டும் சென்றிருந்தேன். அந்தத் திருமணத்திற்கு முன் நாள் பெண்ணழைப்பு நிச்சயதார்த்தம் என்று நிகழ்ச்சிகள் இருந்தது.
     அதே பெண்ணழைப்பு நாளில் பிரான்ஸ் தமிழ் சங்கம் பாண்டிச்சேரியில் பாரதி விழாவை நடத்தினார்கள். என்னையும் அழைத்திருந்தார்கள். நான் போனில் என் உறவினர் வீட்டு நிகழ்ச்சிளைச் சொல்லியும், அதற்காகத்தான் நான் பாண்டிச்சேரி வந்திருக்கிறேன் என்றும், அதனால் அந்த நாளில் நான் உங்கள் விழாவில் கலந்து கொண்டால் உறவினர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று சொல்லியும் தமிழ்ச்சங்கத் தலைவர் அவர்கள் கேட்கவில்லை.
     நீங்கள் பாண்டிச்சேரியல் இருந்து கொண்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றால் மற்றவர்கள் ஏதாவது சொல்வார்கள். அதனால் நீங்கள் சும்மா வந்து தலையைக் காட்டிவிட்டு போனால் மட்டும் போதும் என்று கேட்டுக் கொண்டதால்.. நானும் சரிஎன்று ஒப்புக்கொண்டேன்.
     விழா அன்று என் அம்மாவிடம் மட்டும் விசயத்தைச் சொல்லிவிட்டு அம்மாவிற்கு உதவியாக இருக்கும் ஒரு பெண்ணின் மகள் சுதாவை, அவளுக்கு எட்டு ஒன்பது வயதிருக்கும். அவளை மட்டும் அழைத்துக் கொண்டு இந்தத் நிச்சயதார்த்த விழாவிலிருந்து நைசாக தமிழ்ச்சங்க விழாவிற்கு கிளம்பி விட்டேன்.
     கிளம்பும் பொழுதே சீக்கிரம் வந்து விடுஎன்று அம்மா சொல்லி அனுப்பினார்கள்.
     தமிழ்ச்சங்க விழாவிற்குப் போய் பார்வையாளர்கள் இடத்தில் அமர்ந்து மேடையைப் பார்த்தேன். மேடையில் அமர்ந்திருந்த பலர் எனக்குப் பழக்கமானவர்கள். அப்பொழுது என்னை கவனித்துவிட்ட தலைவர் என்னை மேடைக்கு வந்து அமரும்படிச் சைகை செய்தார். நான் கண்டு கொள்ளாத மாதிரி திரும்பிக் கொண்டேன். என்னுடன் வந்தச் சிறுமி... அக்கா... அவர் உன்னை மேடைக்குக் கூப்பிடுகிறார்... போக்கா... என்றாள்.
    நான் அவளிடம், “எனக்குத் தெரியும். நீ பேசாமல் இருஎன்று அதட்டிவிட்டு கீழேயே அமர்ந்திருந்தேன். மேடையில் நின்று பேசிய, கவிதை படித்த, சங்கத்தைப் பாராட்டிய அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்கள்.
    சற்று நேரத்தில் தலைவரே வந்து மேடையில் வந்து அமருங்கள் அருணா...என்றார். அப்பொழுதும் சுதா அக்கா நீங்க இங்க உட்கார்றதுக்கு மேடையில போய் உட்காந்து ரெண்டு வார்த்தை பேசிடுங்களேன்...என்றாள். அவளை முறைத்ததைத் தலைவர் பார்த்ததும், “பாருங்க அந்தப் பாப்பாவே சொல்லுது. வந்து கொஞ்ச நேரத்தில் ரெண்டே ரெண்டு வார்த்தைப் பேசிவிட்டுக் கிளம்பி விடுங்கள். வரவில்லை யென்றால் மேடையில் மைக்கில் உங்கள் பெயரைச் சொல்லி அழைத்து விடுகிறேன் என்றார். நான் பதறிப்போய் வேண்டாம் ஐயா நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னேன் தானே... புரிந்து கொள்ளுங்கள் என்றேன் கெஞ்சளாய்.
    அவரும் புரிந்து கொண்டு தன் விழா வேலையைக் கவனிக்கப் போய் விட்டார். நானும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டேன்.
   என்னுடன் வந்தச் சிறுமி என்னிடம் எதுவுமே பேசவில்லை. நிச்சயதார்த்த விழாவிலும் உம்என்றே இருந்தாள். நிகழ்ச்சியெல்லாம் முடிந்ததும் எல்லோரும் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்த போது சுதாவின் அம்மா... ஏங்கம்மா... உங்கள மேடையில பேச கூட்டும் நீங்க போய் பேசலையாமே.... சுதாவுக்கு உங்க மேல கோவமாம்என்றாள். 
    இல்லை சுதாம்மா.... நான் போய் பேசியிருந்தா ரொம்ப நேரமாயிடும். அது மட்டுமில்லாம பெரியவர்கள் இருக்கும் இடத்தைவிட்டு நடுவில் எழுந்து வரவும் முடியாது. அதனால தான் போகலை.என்றேன்.
    உடனே சுதாவின் அம்மா... தன் மகளிடம் அக்கா அங்க பேசலைன்னா என்னம்மா.... அது தான் அவர்கள் பேசிய நிறைய நிகழ்ச்சியெல்லாம் பாட்டிகிட்ட சி டி இருக்குதே... கேட்டு போட்டு பாரு... என்றாள் சுதாவிடம்.
    எனக்கும் அப்பொழுது தான் தோன்றியது. அடடா... இந்தச் சின்ன பொண்ணு நாம பேசறதைக் கேட்க.... நேரில் பார்க்க ஆசைப்பட்டு இருந்தாளே.... என்று நினைத்து மகிழ்ந்ததும் இல்லாமல்... அவள் அம்மா, என் மற்ற உறவினர்களின் முன் என் பெருமைகளைப் பாடியதால் உள்ளுக்குள் பெருமிதம் வேறு....
    உடனே சுதாவை அருகில் அழைத்து.... சுதா... கவலைப்படாதே... நாளைக்கு கல்யாணம் முடிந்ததும் நான் பேசிய சிடி களை டிவி யில் போட்டு விடுகிறேன். பாருமா....என்றேன்.
    அப்படி சொன்னது தான் தாமதம்.... ஐயே.... நீ பேசுறதை கேக்கவா உன்னை மேடைக்குப் போவச் சொன்னேன். அதான் அன்னாடம் பேசுறியே...என்றாள் கோபமாக.
    எனக்கு எதுவும் புரியாமல்... பின்ன எதுக்குடி மேடைக்கு என்னை போகச் சொன்னே...?“ என்றேன்.
    அவள் சொன்னாள்... மேடைக்கு போனவங்களுக் கெல்லாம் பட்டுல போன்னாடை போத்துனாங்க. நீ போயிருந்தாலும் ஒனக்கும் போத்தி இருப்பாங்க. நிச்சயமா அதை எனக்கு தான் கொடுப்ப. நான்  அந்த துணியில கவுன் தச்சிக்கினு இருப்பேன். நீ போவாத்தால அந்த பட்டுத் துணி கெடைக்கல. எல்லாம் உன்னால தான்என்றாள் முகத்தில் கோபத்துடன்.
    அதைக் கேட்டதும் என் முகம் போன போக்கை நீங்கள் பார்த்திருக்கனும்....!!

அருணா செல்வம்.