வெள்ளி, 11 ஜனவரி, 2013

மலரும் வண்டும்!!நட்புறவுகளுக்கு வணக்கம்!
    போனமாதம் பாரீஸ் கம்பன் குரளரங்கத்தில் கவிதைக்காக கொடுத்தத் தலைப்பு “மலரும் வண்டும்!!“
    இந்தத் தலைப்பை நான் சற்று யோசித்துத் தமிழ்மகளை மலராகவும், அவளைப் படிப்பவர்களின் கண்களை வண்டாகவும் உருவகப்படுத்திக் கலி விருத்தத்தில் கவிதை எழுதினேன். அந்தப் பாடலை உங்கள் பார்வைக்கும் படைக்கிறேன்.
மலரும் வண்டும்!!

விண்ணில்தான் பிறந்தவளோ!
    வேதவரும் புகழ்கின்ற
மண்ணில்தான் வளர்ந்தவளோ!
    மதிமயக்கும் மலரனைத்தும்
பெண்ணில்தான் உடையவளோ!
    உன்பெருமை சொல்லிவிட
எண்ணில்தான் அடங்கிடுமோ!
    வண்ணமலர் தமிழழகே!

உடலெல்லாம் பூக்காடு!
    உருப்பெல்லாம் கவிப்பூக்கள்!
கடலளவு கற்பனைகள்!
    கண்ணிரண்டும் வண்டினங்கள்!
திடம்கொண்டே உனைஅருந்த
    தேன்சுவையும் தோற்றோடும்!
மடல்விரிக்கக் கருத்தினிலே
    மயங்கிவிடும் கண்ணிரண்டும்!

உன்னிதழை விரித்தவுடன்
    உள்ளிருக்கும் தேனருந்த
மென்னிதழை விரித்துநன்றாய்
    மெய்மறக்கும் வண்டினங்கள்!
பொன்னிதழோ புவிதழோ
    பொருளைமட்டும் உள்வாங்கி
தென்னிதழின் பெருமைகண்டு
    தெளிதமிழில் தனைமறக்கும்!

கள்ளுண்ட வண்டெல்லாம
    கற்பனையில் கவிபாடித்
தள்ளாடி மயக்கமுற்றுத்
    தானாக இமைமூடும்!
துள்ளாத மனம்கூடத்
    துவளாமல் துள்ளியாடி
உள்ளாடும் உணர்வுகளை
    உவமையாக்கி உருவாக்கும்!

வாடாத மலருன்னைப்
    பாடாத கவியுண்டா?
ஓடாத செல்வமுனைத்
    தேடாத தமிழனுண்டோ?
ஏடாக நீயிருந்தும்
    உனக்கீடாய் மலருமுண்டோ?
மூடாத சொர்க்கமென
    முழங்கிடுவேன் முத்தமிழே!!
 


அருணாசெல்வம்.
29.12.2012

30 கருத்துகள்:

ஹாரி R. சொன்னது…

வாழ்த்துக்கள்.. ரொம்ப நாளாவே வேலையா இருந்திட்டன்.. பட்டைய கிளபப்புறிங்க.. வாழ்த்துக்கள்

கும்மாச்சி சொன்னது…

அருணா கவிதை அருமை.

\\ ஏடாக நீயிருந்தும்
உனக்கீடாய் மலருமுண்டோ?
மூடாத சொர்க்கமென
முழங்கிடுவேன் முத்தமிழே!! //

அருமை அருமை.

கவியாழி சொன்னது…


வாடாத மலருன்னைப்
பாடாத கவியுண்டா?// அருமை.வாழ்த்துக்கள்

பால கணேஷ் சொன்னது…

ஆஹா... இன்ன வரி சிறந்ததுன்னு எடுத்துக் கூறிப் பாராட்ட முடியாம தடுமாற வெச்சிட்டீங்க அருணா. அருமையா இருக்கு கவிதை. மிக ரசித்தேன்.

rajamelaiyur சொன்னது…

ஆமாம் ... உண்மையில் மிக அருமையான கவிதை வரிகள் ..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.... அனைத்து வரிகளிலும் உங்கள் கற்பனை பிரமாதம்..... பாராட்டுகள்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஹாரி.

(பட்டைய கிளப்புறிங்க.. ன்னா என்ன அர்த்தம்...? எனக்கு சில தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்குவதில்லை. தவறாக கொள்ள வேண்டாம் ஃபிரெண்ட்)

அருணா செல்வம் சொன்னது…

“அருணா கவிதை அருமை.“ ஐ... வித்தியாசமான வாழ்த்து!!!

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

என் ராஜபாட்டை.... கடைசி வரையில் நாங்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கவே முடியாதா...?

தங்களின் வருகைக்கும் ஐயா அவர்களின் பாராட்டை
முன்மொழிந்தமைக்கும் மிக்க நன்றி.

Seeni சொன்னது…

nalla kavithai sako ...

மகேந்திரன் சொன்னது…

தேனுண்ணும்
வண்டாக
சிலநொடிகள்
மாறித்தான் போனேன்....
தீந்தமிழின் தேன்சுவையை
மண்டி உண்ணும்
வண்டாக இருப்பதில்
மிக்க மகிழ்ச்சியே....

அழகான கவிதை.. வரிகளில்
மதி மயங்கிப் போனேன்...

ezhil சொன்னது…

அருமையான கவிதை அருணா. பாட்டாக் கூட பாடலாம் போல வாழ்த்துக்கள் அருணா.

கோவி சொன்னது…

வாடாத மலருன்னைப் பாடாத கவியுண்டா? அழகிய வரிகள்..

குட்டன்ஜி சொன்னது…

சிறப்பான கற்பனை .
கரும்புப் பொங்கல் வாழ்த்துகள்

ezhil சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முழங்கிடும் முத்தமிழ் கவிதை ..அருமை ..பாராட்டுக்கள்..

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

பாடிப்பாருங்கள் தோழி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கொவி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி குட்டன் ஐயா.

உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அருணா செல்வம் சொன்னது…

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும்
என் இதயங்கனிந்த தமிழர்ப்புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துக்கள்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும்
என் இதயங்கனிந்த தமிழர்ப்புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

அப்பாடி........என்னமா வார்த்தைகள் கோர்க்கிறீங்க.அருமை அருமை.வாழ்த்துகள் அருணா !

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//வாடாத மலருன்னைப்
பாடாத கவியுண்டா?
ஓடாத செல்வமுனைத்
தேடாத தமிழனுண்டோ?
ஏடாக நீயிருந்தும்
உனக்கீடாய் மலருமுண்டோ?
மூடாத சொர்க்கமென
முழங்கிடுவேன் முத்தமிழே!!//

முத்தமிழ் போன்ற அழகான கவிதை. பாராட்டுக்கள்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.