திங்கள், 25 ஜனவரி, 2016

பண்பு இல்லாதவனைப் பாராட்டினால்…..    நல்ல பண்புகள் கொண்டவனை யாரும் எவ்வளவு உயர்வாகப் பேசியும் பாராட்டலாம். அவன் பாராட்டியவருக்கு எதுவும் தரவில்லை என்றாலும் பாராட்டி பேசியவருக்கு மனமகிழ்ச்சியாவது கிடைக்கும்.
    ஆனால் நல்ல பண்புகள் இல்லாத, அமையப்பெறாத ஒருவனை ஒருபோதும் உயர்வாகப் பாராட்டக்கூடாது. அப்படி உயர்வாக அவனைப் பாராட்டினாலும் அந்த பாராட்டுக்கு உரியவன் தான் இல்லை என்பது அவனுக்குத் தெரிந்து தான் இருக்கும்.
     அப்படித்தான் ஔவையார் ஒருநாள் செல்வந்தன் ஒருவனிடம் சென்று பரிசு பெறுவதற்காக அவனை உயர்த்திப் பாடிவிட்டு காத்திருந்தார். அந்தச் செல்வந்தனோ ஔவைக்குப் பரிசு எதுவும் தராமலேயே அனுப்பி விட்டான்.
    நொந்து போய் வந்த ஔவ்வையாரை மற்றொரு புலவர் பார்க்க நேர்ந்தது. ‘போயும் போயும் அவனிடமா பரிசு பெற போனீர்கள் ? போகட்டும்…. அவன் உங்களுக்குப் பரிசு ஏதும் தந்தானா… ?‘ என்று விசாரித்தார் அந்தப் புலவர்.
    ஔவையார் அதற்கு பதிலாகத் தந்த பாடல் தான் இது.

கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்.
    காடேறித் திரிந்தவனை நாடா என்றேன்.
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்.
    போர்முகத்துக் கோழையைப் புலியே என்றேன்.
மல்லாரும் புயமென்றேன் தேம்பற் றோளை.
    வழங்காத கையனையான் வள்ளல் என்றேன்.
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்.
    யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே !

என்று தன் நிலையை விளக்கிச் சொன்னார் ஔவையார்.
    ‘அந்த செல்வந்தனிடம் இல்லாதவைகளை நான் இருப்பனவாகச் சொன்னேன். இல்லாததை எல்லாம் நான் சொன்னதால், அவனும் எனக்கு எதுவும் இல்லை என்றான் போலும். ஆகவே தான் என் குற்றத்தை உணர்ந்த நானும் எதுவும் பேறாமல் போகிறேன்‘ என்றார் ஔவையார்.

பாடலின் பொருள் -  கல்வி கற்றாதவனைக் கல்விமான் என்றேன். காட்டில் வாழ்பவனை நாட்டு மனிதன் என்றேன். பொல்லாதவனை நான் நல்லவன் என்றேன். போரைக் கண்டு அஞ்சும் கொழையைப் புலி என்றேன். மெலிந்த தோள்களை மற்போர் செய்யும் வலிமையானத் தோள் என்றேன். அடுத்தவருக்குக் கொடுத்து உதவாதவனை வள்ளல் என்றேன். இல்லாததைச் சொன்ன எனக்கு, அவனும் இல்லை என்றான். தகாதவனைப் பாராட்டிய குற்றத்திற்காக நானும் எதையும் பெறாமல் போகிறேன்.

அதனால்

    பாராட்டத் தகுதி அற்றவனைப் பாராட்டுவதும் குற்றம்.

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பாடலும் விளக்கமும்....

பகிர்வுக்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

மற்றவர்கள் செயலை, தனது போல் காட்டிக் கொண்டு, அந்த காலத்துப் புலவர்களை ஔவையார் கிண்டல் செய்யும் பாடல் இது.. இலக்கிய இன்பம் படைத்த சகோதரிக்கு நன்றி!

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! இந்த பாடலை நானும் படித்துள்ளேன்! தித்திக்கும் தமிழ் என்ற என் பதிவிலும் பகிர்ந்துள்ளேன்! சிறப்பான விளக்கம்! நன்றி!