செவ்வாய், 22 ஜனவரி, 2013

பார்த்தவன் எல்லாம் பாதிக் கணவன்!!
உலகம் இருண்டு உறங்கும் நேரம்
நிலவு மங்கையை நெருங்கும் மேகம்
வாச மலர்கள் வண்டுடன் உறங்க
மோச நினைவுகள் மோதிய தென்ன!

காதல் என்பதைக் கானல் நீரென
வேதம் சொன்னது வியப்போ அன்றோ
தானாய் மனத்தை நழுவிடா வண்ணம்
தேனாய் வாழ்க்கை தித்தித்த தென்ன!

பருவ வயது பதினெட் டானதால்
உருவ அமைப்பில் ஒழுங்கு கொள்ள
உடையை மாற்றி உடுத்தத் துவங்க
நடையில் கூடிய நளினம் என்ன!

மனத்தில் ஏனோ மாற்றம் இல்லை
கணத்தில் ஓடிடும் காலப் பிடியில்
திருமணம் முடிக்கத் தேடினார் வரனை!
தருணம் பார்த்துத் தரகர் வந்தார்!

பெண்ணைப் பார்த்தவன் பேதையின் மனத்தைக்
கண்களால் பேசிக் காதல் புரிந்தே
அன்னை தந்தை அறியா வண்ணம்
கண்ணால் கவர்ந்தே இழுத்த தென்ன!

வந்தவன் அவனே வாழ்க்கை என்று
சொந்தம் கொண்டே சூழ்ந்த உள்ளம்
கனவில் வந்த காமுகன் அவனை
மனத்தில் வைத்து மகிழ்ந்த தென்ன!

தீதும் என்பது தெரிந்து செய்வது
சூதும் இல்லை! சூழ்நிலை மயக்கத்
தடாகம் தொட்டிடும் தாமரை இலையாய்த்
தொடாமல் கற்பைத் தொலைத்த தென்ன!

வரன்கள் நான்கு வந்து பார்க்கக்
கரத்தைப் பிடிக்கும் கைதான் எதுவோ?
பார்த்தவன் எல்லாம் பாதிக் கணவனாகச்
சேர்த்துப் பார்த்தச் செய்திதான் என்ன!

பெண்ணைப் பார்க்கும் படலம் பேதையை
மண்ணைப் பார்க்க மயக்கும் ஆண்களை
வேண்டாம் என்று வெறுப்பாய்ச் சொல்லித்
தூண்டில் புழுபோல் துளைத்தா லென்ன!

மறத்தமிழன் நல்ல மங்கையை மணக்க
வரவு வைத்தே பேசி யதனால்
தரவே மறுத்தார் தந்தை! வேறு
வரனைக் கூட்டி வாழவைத்த தென்ன!

பழகிப் பார்த்திடாப் பைந்தமிழ்க் காதலாய்க்
குழவி இல்லாக் குடும்பத் தலைவியாய்த்
தீமை தராத தீஞ்சுடர் நெருப்பாய்
ஊமை மொழியாய் உருகிய தென்ன!

கட்டியக் கணவன் காதல் உடனே
கட்டி அணைத்தான் கட்டிலின் மேலே
கெட்டுப் போனது கேவலம் மனம்தான்
விட்டு விலகி விளக்கவா முடியும்?

சவம்போல் இல்லை பெண்ணின் சரீரம்
துவர்ப்பும் சுவைதான்! தொட்டதும் தெரிந்தது!
தவம்தான் வாழ்க்கைத் தத்துவம் என்பது
தவறே என்றால் தகிப்பாய் நெஞ்சே!!

(
அகவல்)

அருணா செல்வம்.

31 கருத்துகள்:

விச்சு சொன்னது…

ஒரு பெண்ணின் ஏக்கமும், பெண்பார்க்கும் படலத்தின் கொடுமையும், மிக்சரும் காபியும் குடித்துவிட்டு பெண் பிடிக்கவில்லை என்று சாதாரணமாகச்சொல்லிவிட்டு போவதும் இயல்பாகவும் வார்த்தை தெரிவும் அருமையாக உள்ளது.

Seeni சொன்னது…

solli sentrathu palarin valikalai......


kuru kurukkuthu nenjam....

T.N.MURALIDHARAN சொன்னது…

தலைப்பு அருமை.ஒரு வித்தியாசமான கவிதையை அகவற்பாவில் தந்தது சிறப்பு. திருமதி செல்வம்.
நன்றியில் முரளிதரன் ஐயா என்று விளிப்பதை தவிர்க்கவும்.

பால கணேஷ் சொன்னது…

யப்பா... அகவல் படிச்சு நான் அகவிட்டேன்- எப்படித்தான் இப்படில்லாம் எழுத வருதோன்னு! சூப்பர் அருணா.

ஸ்ரீராம். சொன்னது…

மலரில் வண்டு உறங்குமோ?! :))

நல்ல தலைப்பு. இது அகவல் இல்லை! கேவல்.
பெண் பார்ப்பது என்ற சடங்கில் சிக்கிய ஒரு பெண்ணின் மனதை அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்.

அம்பாளடியாள் சொன்னது…

பெண் பார்க்கும் படலம் எத்தனை வலிகளைத் தந்து செல்கிறது என்று உணரும் வகையில் அமைந்த கவிதை வரிகள் மிகவும் அருமையாக உள்ளது !....
மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

s suresh சொன்னது…

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நட்பே!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண்பரே.

(நீங்கள் என்னைத் தோழியாக நினைத்து “அருணா“ என்றே அழைத்தால் நானும் உங்களை “முரளி“ என்று நட்புடன் அழைக்கிறேன்.)

அருணா செல்வம் சொன்னது…

பெண் பார்த்துவிட்டுச் சென்றப் பிறகு
அந்தப் பெண்ணின் மனத்தில் வரும் கற்பனைகளைச்
சொன்னேன். (இதை எந்தப்பெண்ணும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்)
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

இரவில் மலரில் தான் வாண்டினங்கள் உறங்கும்.
அதனால் தான் பொழுது சாய்ந்தப்பிறகு
மலர்களைப் பறிக்கக் கூடாது என்பார்கள்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நட்பே!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் சொன்னது…


தமிழ்மணம் 6

புலவர் சா இராமாநுசம் சொன்னது…பெண் பார்க்கும் நிகழ்வே மிகவும் கொடுமையான ஒன்று! கவிதை அருமை!

மாதேவி சொன்னது…

பாதிப்புற்ற பெண்ணின் வலி கவிதையாக மிளிர்கிறது.

அருணா செல்வம் சொன்னது…

அருமையாகச் சொன்னீர்கள் புலவர் ஐயா.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

அடுத்தவரின் வேதனையை
அறிந்ததும் தனக்கே வந்தது போல்
வேதனை அடைவது தானே பெண்ணின் மனம்!!

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி.

குட்டன் சொன்னது…

பெண் என்ன காட்சிப் பொருளா,வந்தவன் காலில் விழுந்து வணங்கி,நிற்க?
நன்று

நம்பள்கி சொன்னது…

அதுக்கு தான் ஒரே நாளில் பல பெண்களை நாங்கள் பாப்போம்; அவர்கள் அறியாமல் தான்! ஆம்! அவர்கள் மனது நோகக் கூடாது என்ற நல்லென்னதினால் மட்டுமே!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஒவ்வொரு பெண்ணிற்கும் இது போல அனுபவம் - அப்பெண்ணின் உணர்வினை அப்படியே படம் பிடித்துக் காட்டியது உங்கள் கவிதை.

பெயரில்லா சொன்னது…

''..பார்த்தவன் எல்லாம் பாதிக் கணவனாகச்
சேர்த்துப் பார்த்தச் செய்திதான் என்ன..''
''..தவம்தான் வாழ்க்கைத் தத்துவம் என்பது
தவறே என்றால் தகிப்பாய் நெஞ்சே!!..''
இப்பபெ; பல கருத்துடை வரிகள்.
அருமை.
இனிய வாழ்த்து.

வேதா.இலங்காதிலகம்.

அருணா செல்வம் சொன்னது…

குட்டன் ஐயா...
பெண்கள் பல கண்களுக்குக் காட்சிப்
பொருளாகத்தான் இருக்கிறாள்.

ஆனால் வந்து பார்த்துவிட்டுப் போகும்
ஒவ்வோர் ஆணையும்... இவன் தான் நமக்கு வரப்போகும்
கணவனோ... என்று எத்தனை மனங்கள் எண்ணி ஏமாறுகிறது?
அதைத்தான் சொன்னேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நம்பள்கி.... நன்றி!

(நான் ஏதாவது சொல்லப்போய் அது வம்பில்
தான் போய் முடியும். அதனால் வெறும் நன்றி.)

அருணா செல்வம் சொன்னது…

உண்மைதான் நாகராஜ் ஜி.
பெண்களின் உள்ளுணர்வுகளை
வெளிப்படையாகக் கொட்டத் துவங்கினால்...
என் எழுத்துக்கள் அழுக்காகிவிடும்!

தங்களின் வருகைக்கும்
புரிதலுக்கும் மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே.

Ramani சொன்னது…


சவம்போல் இல்லை பெண்ணின் சரீரம்
துவர்ப்பும் சுவைதான்! தொட்டதும் தெரிந்தது!
தவம்தான் வாழ்க்கைத் தத்துவம் என்பது
தவறே என்றால் தகிப்பாய் நெஞ்சே!//

கருத்துடன் கூடிய அழகிய் கவிதையை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

tha.ma 10

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஐயா.