புதன், 9 ஜனவரி, 2013

பயம்.. எப்பொழுது வரும்..? (குட்டிப் பேய் கதை)





நட்புறவுகளுக்கு வணக்கம்!
    மனிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள்.

    ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
    இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
    இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
    ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.
    மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.
    அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
   அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா....“ என்று சொன்னது.
    அதற்கு அம்மா பேய்.... “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.
    இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. “எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
    உம்ம்ம்... ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.


    இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
   ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்... “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாளி இவன் தான்“ என்றது.
    அதற்கு அம்மா பேய்... “அவன் தைரியசாளி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்“ என்றது. குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது.
    அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான்.
   குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... “அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?“ என்று கேட்டது.
    இதற்கு அம்மா பேய், “மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.
   அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“ என்றதாம்.

(உண்மை தானா...?)
அருணா செல்வம்.

கவிமனத்தில் இப்பொழுது போகப் போகத் தெரியும்தொடர்-33 தட்டுங்கள். http://kavimanam.blogspot.fr/

22 கருத்துகள்:

  1. சந்தோஷங்களை இழக்க பயப்படுவான் என்பது ஒருபுறம் இருந்தாலும் இதை இன்னொரு கோணத்தில் பார்த்தால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது பயமும் தோன்றிவிடும் என எண்ணுகிறேன் அருணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது பயமும் தோன்றிவிடும் என எண்ணுகிறேன் “

      ஆமாம் தோழி. இதில் தன்னம்பிக்கை அற்றவர்களுக்குத் தான் அந்த பயம் வரும் என்பது என்றன் கருத்து.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  2. இந்தக்கதையின் கருத்து நல்லாயிருக்கு.

    //”மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“//

    உண்மை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  3. நல்ல கதை. உங்கள் தாத்தா சொன்னது சரியென்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  4. உண்மைதான்....சந்தோஷமான தருணங்களில் மனம் கஸ்டங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  5. நீங்க சொன்ன கதையில் உள்ள சாராம்சம் உண்மைதான்

    பதிலளிநீக்கு
  6. எனக்கென்னமோ கதையின் கருத்து சரியானதாகவே படுகிறது. தாத்தா சொன்ன கதை அருமை அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

      நீக்கு

  7. கதை நன்றாக இருக்கிறது. எனக்கென்னவோ சந்தோஷமாக இருக்கும் போது யாரும் எதற்கும் அஞ்சுவதில்லை ஆனால் கஷ்டப்படும் போது மேலும் கஷடம் வருமோ என்று அஞ்சி அஞ்சிதான் வாழ்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்... இதுவும் யோசிக்கத் துாண்டுவதாகத்தான் இருக்கிறது.

      உண்மைகள்.... நான் ஒர் உண்மையைச் சொல்லட்டுமா...
      நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது அந்த சந்தோஷம் எப்பொழுதுமே நிலைத்து இருக்க வேண்டுமென்று பயத்துடனாவது கடவுளை வேண்டுவோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு

  8. அனுபவஸ்தர் சொன்னது சரியாய்த்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாலசுப்பிரமணியன் ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாரதி ஐயா.

      நீக்கு
  10. தாத்தா சொன்னது சரிதான். துன்ப படும் நேரத்தில் பயம் தோன்றுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நட்பே.

      நீக்கு
  11. mokka kathai solla poringa nu nenachi padikka arambicha kadasila semma punch ponga..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      (மொக்கை கதை என்றால் அதையும் நான் பதிவின் தொடக்கத்திலேயே எழுதிவிடுவேன்.... பின்னாடி யாரும் திட்டக்கூடாது இல்லையா?)

      நீக்கு
  12. மனிதன் விரக்தியின் விளிம்பில் உள்ளபோது தான் பயங்கொள்ளமாட்டான் என்பது எனது கருத்து...

    பதிலளிநீக்கு