Tuesday, 12 August 2014

“பைசா“ நகரத்துச் சாய் கோபுரம்!! ( இத்தாலி - 2)

பைசா சாய் கோபுரம்

   எட்டு உலக அதிசயங்களில் “பைசா“ நகரத்துச் சாய்ந்த கோபுரமும் ஒன்று என்று நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்பதை நான் அங்கே சென்ற பிறகு தான் அறிந்து காண்டேன்.

    பைசா நகரத்துக் கோபுரம் மற்றும் அதன் அருகிலேயே உள்ள “கொம்போ டை மிராக்கொலி“ (COMPO DEI MIRACOLI) என்ற கோவில், அதற்கும் முன் பகுதியில் “பப்திஸ்த்ர் தி பீஸ்“ (BAPTISTERE DE PISE) என்ற கோபுரமும் ஒன்று சேர்த்து வடிவமைக்கப் பட்டே கட்டப்பட்டது.

    மூன்று இடங்கள்

   இந்த மூன்று இடங்களுமே வெறும் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டுள்ளது. இளம் பச்சை கலந்த மார்பல் கல். இதனால் இரவில் கூட விளக்கு வெளிச்சம் இல்லை என்றாலும் வெண்மையாகப் பிரகாசிக்கிறது.

   இதில் கோவிலைத் தவிர மீதி இரண்டு இடங்களும் வெறும் அழகுக்காக மட்டுமே கட்டப்பட்டது என்றாலும் அந்த காலத்தில் கலிலேயோ தன் ஆராய்ச்சிகளை இந்த கோபுர உச்சிகளில் இருந்து தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

   பைசா நகரத்துக் கோபுரம் 1174-ல் பனானோ பிசானோ என்பவரால் கட்டத் துவங்கப்பட்டு 1350 ல் தொமாஸோ பிசானோ என்பவரால் முடிக்கப் பட்டது.  இதன் உயரம் 58.36 மீட்டர். உட்புற சுற்றளவு 4.38 மீட்டர். வெளிப்புறம் 5.22 மீட்டர். இதன் எடை 14.453 டன்.

கீழ் பாகம்
   
   இந்த கோபுரம் ஏழு அடுக்குகள் கொண்டுள்ளதாக உள்ளது. அந்த ஏழு அடுக்குகளும் ஏழு இசைக் குறிப்புகளைக் காட்டுவதாற்காகச் செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறதாம். (Assunta, Crocefisso, San Ranieri, Pasquareccia, Dal Pozzo, Terza, Vespruccio இவை ஏழும் இசைக்குறிப்புகள்) கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல 293 படிகட்டுகள் உள்ளன.

ஏழு அடுக்கு
   
   இந்த மூன்று கோபுரங்களில் பைசா கோபுரம் மட்டும் வருடத்திற்கு 1.2 மில்லி மீட்டர் சாய்கிறது. இதுவரையில் 2.36 மீட்டர் சாய்ந்து விட்டது. இதற்கான காரணத்தைச் சரிவர அறியவில்லை என்றாலும் மண் அரிப்பாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
   1993 ம் ஆண்டு அதிக அளவு சாய்வு ஏற்பட்டதால் 11 ஆண்டுகள் கடுமையாக உழைத்துக் கோபுரத்தை 38 செண்டிமீட்டர் அளவு நேராக்கினார்களாம்.
   பைசா கோபுரம் மட்டும் வருடா வருடம் 1.2 மில்லி மீட்டர் சாய்ந்துக் கொண்டே வருவதால் தான் இதை உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தார்களாம்.

   பைசா கோபுரத்திற்குள் செல்ல நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு 18 யுரோ. இந்த டிக்கெட்டில் பைசா கோபுரத்தையும் “மிராக்கொலி“ கோவிலையும் மட்டும் பார்க்கலாம். “பத்திஸ்த்தர்“ கோபுரத்திற்கும் அதன் இடப்புறம் இருக்கும் “கம்போசன்டோ மொனிமெண்ட்டால் (COMPOSANTO MONUMENTALE )என்ற இடத்திற்கும் தனியாக 10 யுரோ. அதிக பார்வையாளர்கள் இருப்பதால் இதில் ஏதாவது ஒன்றை தான் வாங்க வேண்டும்.
   எங்களுக்குப் பைசா கோபுரத்திற்குள் செல்ல டிக்கட் கிடைத்தது பெரு மகிழ்ச்சி.
   முன்பு சில வருடங்களாக கோபுரத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லையாம். கடந்த மூன்று வருடங்களாகத் தான் அனுமதிக்கிறார்களாம். கோபுரத்திற்குள் செல்ல ஒரு முறைக்கு வெறும் இருபது பேர்களையே அனுமதிக்கிறார்கள். இந்த இருபது பேர்களும் சுற்றிப் பார்த்து விட்டு இறங்கியதும் அடுத்த இருபது பேர்களை அனுப்புகிறார்கள்.
   முக்கியமாக கையில் கேமராவைத் தவிர மற்ற எந்தப் பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. கைப்பைகளை வைக்க பாதுகாப்பான இடங்கள் உள்ளன.

உள் பாகம்

   மிகவும் நீண்ட வரிசையில் நின்று நானும் உள் நுழைந்தேன். அதன் உள் வட்டமான ஓர் இடம். அங்கிருந்து மேல் நோக்கிப் பார்த்தால்.... ஒன்றுமே பெரியதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு மூடிய கிணற்றுக்குள் நின்று கொண்டு இருப்பது போல் தான் இருந்தது.
   அங்கிருந்த பாது காவலர் “படிகட்டுகளில் பார்த்து ஏறுங்கள். வழுக்கும். முடிந்தவரையில் சீக்கிரமாக இறங்கிவிடுங்கள்“ என்று முதலில் இத்தாலி மொழியிலும் பின்பு ஆங்கிலத்திலும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

   உட்புற படிகள்

   மற்றவர்கள் இறங்கி முடித்ததும் நாங்கள் ஏறினோம். 293 படிகட்டுகள். சாதாரண படிகட்டிலேயே இரண்டு மாடி ஏறுவதற்கு எனக்கு மூச்சு வாங்கும். இதுவோ மேலே ஏற ஏற மிக மிக சாய்வாகச் செல்கிறது. அது மட்டுமல்லாமல் எத்தனை கோடி பேர் ஏறினார்களோ.... சில இடங்களில் மார்பல் படிகட்டுகளின் உள்பாகங்கள் தேய்ந்து மிகவும் வழுவழுப்பாக இருந்தது. சற்று ஏமார்ந்தால் நம்மை ஏமாற்றி விடும்.

மேலிருந்து எடுத்தப் படம்.

    எப்படியாவது உலக அதிசயத்தை பார்த்து விட வேண்டும் என்று விடா முயற்சியுடன் ஏறினேன். மேலே முழுவதும் ஏறியப்பிறகு தான் அந்த கோபுரம் எவ்வளவு சாய்வாக உள்ளது என்பதை நன்கு உணர முடிந்தது. மேலிருந்து பார்த்த போது மற்ற இரண்டு இடங்களும் அழகாகத் தெரிந்தது.

  
   என் பலநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட திருப்தியுடன் கீழிறங்கினேன்.

   மற்ற இரண்டு இடங்களுடன் கொம்போசன்டோ மொனிமென்டல் இடத்தையும் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

நட்புடன்

அருணா செல்வம்.