செவ்வாய், 31 ஜூலை, 2012

அன்பே அனைத்தும் !! (கவிதை - 2)துன்பம் என்று வந்தாலும்
    துணிந்து நகர்த்தி வைத்துவிட்டு
இன்பம் மட்டும் இருப்பதைப்போல்
    இயன்ற அளவு நடித்திடலாம்!
அன்பால் அரும்பும் கண்ணீரை
    அடக்கி விடவும் முடிந்திடுமா?
அன்பின் எல்லை இதுவன்றோ!
    அகிலம் இதற்கு தூசியன்றோ!

இனத்தை இணைக்கும் அன்பற்றோர்
    இருக்கும் அனைத்துப் பொருளினையும்
தனக்கே என்றே வைத்திடுவார்!
    தன்னுள் அன்பை வைத்தவரோ
தனக்கே உரிய எலும்பினையும்
    தஞ்சம் என்று வந்தவர்க்கு
உனக்கே என்று கொடுத்திடுவார்!
    உலகில் அவர்தாம் உயர்ந்தவரே!

பார மான வாழ்க்கையென்று
    பாச மற்றோர் நினைப்பாரே!
ஈரம் நெஞ்சில் காய்ந்நிருக்க
    இன்பம் அங்கே விளைந்திடுமா?
ஓரம் ஒடுங்கும் கோழையரும்
    ஒருவர் மேலே அன்புவைத்தால்
வீர தீர செயல்செய்து
    வியக்கும் வெற்றி பெறுவாரே!


(அன்பு தொடரும்)

23 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// தனக்கே உரிய எலும்பினையும்
தஞ்சம் என்று வந்தவர்க்கு
உனக்கே என்று கொடுத்திடுவார்!
உலகில் அவர்தாம் உயர்ந்தவரே! ///

அருமை வரிகள் சகோ ! நன்றி !

Ramani சொன்னது…

ஓரம் ஒடுங்கும் கோழையரும்
ஒருவர் மேலே அன்புவைத்தால்
வீர தீர செயல்செய்து
வியக்கும் வெற்றி பெறுவாரே!//

நிச்சயமாக
அருமையான கருத்துடன் கூடிய
அழகான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

அன்பிலார் எல்லாம் உடையார் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

ஈரம் நெஞ்சில் காய்ந்நிருக்க
இன்பம் அங்கே விளைந்திடுமா?
nice lines

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

அன்பே கடவுள்
அன்பே வாழ்க்கை
அன்பே அழகு
அன்பே அமைதி
அன்பே உலகு
நல்ல கவிதை....

சிட்டுக்குருவி சொன்னது…

ஓரம் ஒடுங்கும் கோழையரும்
ஒருவர் மேலே அன்புவைத்தால்
வீர தீர செயல்செய்து
வியக்கும் வெற்றி பெறுவாரே!
////////////////////////
அழகான ஆழமான கருத்துக் கொண்ட வரிகள் சகோ.......

ஹேமா சொன்னது…

அன்பை,பாசத்தை அள்ளித் தருகிறீர்கள் அருணா !

மகேந்திரன் சொன்னது…

அன்பின் மிகுதியால் புறாவிற்கு தன் தொடைச் சதையை
அறுத்துத் தந்த சிபிச் சக்கரவர்த்தியின் கதைதான் நினைவுக்கு
வருகிறது நண்பரே..
அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை....
நன்று...

Seeni சொன்னது…

kadaisi!

arumai!

Avargal Unmaigal சொன்னது…

உங்கள் தளத்திற்கு இன்றுதான் வருகிறேன் வந்ததும் ஒரு நல்லொதொரு கவிதையை படித்த திருப்தி ஏற்படுகிறது

AROUNA SELVAME சொன்னது…

வாருங்கள் தனபாலன் ஐயா...

இது வள்ளுவர் வாக்கு! அதனால் தான் அருமையாக இருக்கிறது.

தங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்
மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் அழகிய வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

சரியாக சொன்னீர் நட்பே!

இந்தக்கவிதையைத் திருக்குறள் அரங்கத்தில் “அன்புடமை“ என்ற தலைப்பில் வாசித்தேன்.

இதை இதே தலைப்பில் வலையில் போட்டால் யாரும் வந்து கூட பார்க்கமாட்டார்கள் என்று “அன்பே அனைத்தும்“ என்று வெளியிடுகிறேன்.

AROUNA SELVAME சொன்னது…

அன்பே அனைத்தும் நண்பரே!

நன்றிங்க பிரதாப் சிங்.

Sasi Kala சொன்னது…

ஓரம் ஒடுங்கும் கோழையரும்
ஒருவர் மேலே அன்புவைத்தால்
வீர தீர செயல்செய்து
வியக்கும் வெற்றி பெறுவாரே!

கோழைக்கும் வெற்றிக்கு வழி சொல்லூம் வரிகள் அருமை சகோ.

AROUNA SELVAME சொன்னது…

இல்லைங்களா பின்னே....

அன்பு மட்டும் இல்லையென்றால் அனைவரும் கோழையாகத் தான் வாழ்வோம் சிட்டுக்குருவி.

நன்றிங்க.

AROUNA SELVAME சொன்னது…

யாருமே இதை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள் இல்லையா... என் இனிய தோழி ஹேமா
நன்றிங்க தோழி.

AROUNA SELVAME சொன்னது…

அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை....

இல்லை தாங்க நண்பரே... அது உண்மையில் உடனே வள்ளுவர் சொன்னது போல் காட்டிக்கொடுத்து விடுகிறதுதாங்க.
சிபி கதையை ஞாபகப் படுத்தினீர்கள். நன்றிங்க நண்பரே!

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க நண்பரே!

AROUNA SELVAME சொன்னது…

“அவர்கள் உண்மைகள்“ - அவர்களே... வாருங்கள் வாருங்கள். உங்களை என் வலைதளத்தில் கண்டு மகிழ்கிறேன்.

தொடர்ந்து வந்து கவிதைகளைப் படித்து நன்றாக இருந்தால் திருப்தி அடைந்தும் இல்லையென்றால் திட்டிவிட்டும் செல்லுங்கள்.

நன்றிங்க தோழரே.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க சசிகலா.

கீதமஞ்சரி சொன்னது…

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

முக்குறளையும் முத்தானக் கவி வடிவில் தந்து அசத்திவிட்டீர்கள். அன்பின் மேன்மையைப் பறைசாற்றும் அற்புத வரிகளுக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.

AROUNA SELVAME சொன்னது…

உங்களின் அழகிய பாராட்டைக்கண்டு மனமகிழ்ந்தேன் கீதமஞ்சரி அக்கா.
நன்றிங்க.