Thursday, 14 March 2013

நடிப்பு !! (நிமிடக் கதை)
     சரவணன் அன்றையக் காட்சியைத் தத்ரூபமாக நடித்து முடித்ததும் அந்த யுனிட்டில் இருந்த லைட் பாய் முதற்கொண்டு அனைவரும் கை தட்டிப் பாராட்டியதில் சரவணன் நெகிழ்ந்து போனான்.
     தற்போது முன்னனியில் இருக்கும் இயக்குநர், அவனருகில் வந்து... “சரோ... நீ இன்னைக்கு அருமையாக ஆக்ட் பண்ணினே. சந்தோசம் தான். ஆனால் இன்னும் நாளை மறுநாள் மனோ சாருடன் நடிக்கனும். அவரைப் பற்றித் தெரியுமில்லை.... அவருடன் உன் போல் புது முகமெல்லாம் போட்டு நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டார். அதனால நிறைய ப்ராட்டிக்ஸ் எடுத்துட்டு வந்து நடி... புரியுதா....  சொல்லிக் கொண்டே கிளம்பி விட்டார்.
    சரவணனுக்கும் மனோகரன் என்ற மனோ உடன் நடிக்கப் போகிறாய் என்றதும் பெருமகிழ்ச்சியாக இருந்தது. மனோ சாரையெல்லாம் தன் வாழ்நாளில் நேரே பார்த்துவிட முடியுமா... என்று பல நாட்கள் நினைத்து ஏங்கி இருக்கிறான். ஆனால் இன்றைக்கு அவருடன் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
   சரவணன் யோசித்தான்...
   அன்றைக்கு நடிக்கப் போகும் காட்சி... காதலியை இழந்தத் துயரம் தாங்காமல் சோறு தண்ணி உண்ணாமல் முகம் வாடிபோய் கவலையுடன் தன் காதலியைப் பற்றி மனோவிடம் சொல்லி அழு வேண்டும். அந்த அவலத்தைக் கேட்டதும் துயரம் தாங்காமல் எதுவும் பேசாமல் மனோ கவலையுடன் வெளியேறிவிட வேண்டும். இவ்வளவு தான் அன்றைய காட்சி.
    இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது. இதற்கு முன் நடித்ததை விட அவரின் எதிரில் இன்னும் தத்ரூபமாக நடிக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தான. அவரே ஆச்சரியப்படும்படி நடிக்க வேண்டுமென்றால் இருக்கும் இந்த இரண்டு நாட்களும் சோறு தண்ணி உண்ணக் கூடாது. அப்பொழுது தான் முகத்தில் அந்த உண்மையான வாட்டம் வரும். பேச வேண்டியதை பல முறை பேசிப்பார்த்தான்.

    இரண்டு நாட்கள் ஓடியது. சரவணனைக் கண்டவர்கள் அவனுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று வருத்தத்துடன் வந்து விசாரித்தார்கள். இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் கண்கள் உள்ளே போய் முகத்தில் பொலிவிழந்து... சவரம் செய்யாத முகம் மேலும் கறுத்து.... இருந்ததால் இயக்குநரே வந்து விசாரித்தார்.
   சரவணன் தன்னுடைய இன்றைய நடிப்பிற்காகத் தான் இப்படியெல்லாம் உடலை வருத்தி இருக்கிறான் என்றுத் தெரிந்ததும் இயக்குநர் கூட பாராட்டிவிட்டுச் சென்றார்.

    மனோவுடன் சரவணன் நடித்தக் காட்சிகண்டு அனைவருமே வியந்தனர். அவ்வளவு அருமையாக நடித்தான். முடிந்ததும் மனோவைத் தவிர அனைவருமே அவனைப் பாராட்டினார்கள். இது சரவணனுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
    தான் எதிர் பார்த்தவரிடமிருந்து எந்தப் பாராட்டும் வரவில்லையே என்று கவலைப்பட்டான்.
    மனோ இயக்குநரிடம் சொல்லிவிட்டு கிளம்பத் தயாரானார். பொறுக்க முடியாத சரவணன் மனோவின் முன் தயங்கித் தயங்கி வந்து “சார் என் நடிப்பு எப்படி இருந்ததுங்க...“ என்று ஆர்வத்துடன் கேட்டான்.
     மனோ அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு, “உன் நடிப்பாற்றல் மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஆனால் இதற்காக உன் உடலை உண்மையில் வருத்திக் கொண்டாய் என்று இயக்குநர் சொன்னார். ஆனால் இது சரியில்லை. நடிப்பு என்பது இப்படி வரக்கூடாது சரவணா. நன்றாக வயிறு முட்டச் சாப்பிட்டு இருந்தாலும் பத்து நாள் பட்டினி கிடந்தவன் போல் நடிக்க வேண்டும் என்றால் உடனே அந்த நேரத்திலேயே அந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்து நடித்துக் காட்ட வேண்டும்.
     இது தான் நடிப்பதற்கான சிறந்த உண்மையான வழி. நாளைக்கு நீ விஷம் குடித்துச் சாவது போல் நடிக்க வேண்டும் என்றால் உண்மையில் விஷத்தைக் குடித்துவிட்டு வந்து நடிப்பாயா...?
     காட்சியை உன்னுள் வாங்கி நம் உள்ளுக்குள்ளிருந்து வரவழைத்து நடிப்பது தான் உண்மையான நடிப்பு. உனக்கு நல்ல திறமை இருக்கிறது. நடிப்பு என்பது வெறும் நடிப்பு தான். அதையே வாழ்க்கையாக்கி விடாதே. வருகிறேன்.“
    கிளம்பிப் போய்விட்டார். அவரின் நடிப்பை மக்கள் இவ்வளவு புகழுவதற்கான காரணத்தை இன்று தான் அறிந்து கொண்டான் சரவணன்.

அருணா செல்வம்.
14.03.2012