செவ்வாய், 22 அக்டோபர், 2013

என்னுள் ஏன்டீ நீவந்தாய்?



எடுத்த பிறவி பழியின்றி
   எவர்க்கும் அஞ்சா நெஞ்சமுடன்
தொடுத்தச் சரமாய் நானிருந்தேன்!
   தோல்வி எதிலும் காணாமல்
கொடுத்த வாக்கை மீறாமல்
   கொள்கை மனத்தாய் வாழ்ந்திருந்தேன்!
விடுத்தாய்ப் பார்வை அம்பைப்போல்
   விழுந்தேன்! இன்னும் எழவில்லை!

கண்ணுள் உன்னை ஒளித்ததனால்
   காணும் இடத்தில் தெரிகின்றாய்!
விண்மேல் இருக்கும் நிலவினிலும்
   வெண்பல் காட்டிச் சிரிக்கின்றாய்!
மண்ணுள் இருக்கும் தங்கம்போல்
   மனத்தில் மறைந்து இருக்கின்றாய்!
பண்ணுள் அதைநான் எழுதிவிட்டுப்
   பார்க்க ஒருகண் அடிக்கின்றாய்!

மெய்யோ என்றே நெருங்கிவந்தால்
   மின்னல் போல மறைகின்றாய்!
பொய்யோ என்றே நகர்ந்தாலோ
   பூவாய் நெஞ்சை வருடுகின்றாய்!
கையால் தொடநான் நினைத்தாலோ
   கனவில் உணவாய்க் கலைகின்றாய்!
ஐயோ! என்ன நான்செய்வேன்?
   அமைதி யற்ற நிலையானேன்!

பொன்னை நனைத்தப் பூங்கொடியே!
   பொலிரும் வண்ணச் சித்திரமே!
உன்னை நினைக்கா நேரமில்லை!
   உன்னில் உலகம் உயர்வில்லை!
அன்பே! உன்றன் நினைவொன்றாய்
   அனைத்துச் செயலும் மறக்கின்றேன்!
என்னை நானே இழந்துவிட
   என்னுள் ஏன்டீ நீவந்தாய்?!

அருணா செல்வம்
22.10.2013
  

   

34 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  2. அருமையான கவிதை தோழி
    வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  3. உள்ளே ஏகிவிட்டாய்
    உணர்வுகள் வதைகின்றன
    வெளியே சென்றுவிடாதே
    உணர்ச்சியும் போய்விடுமே..

    அழகான கவிதை சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மகி அண்ணா.

      நீக்கு
  4. அருமையான சொற் பிரயோகம் !!!!!
    ஓரிடத்திலேனும் செறிவின்றி வார்த்தைகள்
    மிக மிக அழகாகச் சொல்ல வந்த விசயத்தைச்
    சொல்லி முடித்த விதம் அருமை ! அருமை என் தோழி !
    வாழ்த்துக்கள் வளமான கவிதைகள் என்றும் உனதாகட்டும் .

    பதிலளிநீக்கு
  5. நல்ல வசன் கவிதை .வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  6. அருமை அருணா!வார்த்தைகள் சரளமாய் விழுந்து மெருகூட்டுகிறது.காதலை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா?
    "ஏன்டீ" என்பதற்கு பதிலாக ஏனடி என்று வந்தால் பிழையாகி விடுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மூங்கில் காற்று.
      நீங்கள் சொல்வது போல் “ஏன்டீ“ என்பதற்கு பதிலாக “ஏனடி“ என்று வந்தால் அது பிழைதான்.

      நான் எழுதிய அறுசீர் விருத்தம்
      மா - மா - காய் - மா - மா - காய்
      என்ற இலக்கணத்தில் அமைந்தது.
      இங்கே “மா“ என்பது தேமாவையும் புளிமாவையும் குறிக்கும்.

      “ஏன்டி” என்பது தேமா.
      “ஏனடி” என்பது கூவிளம்.
      இங்கே கூவிளம் வரக்கூடாது.

      அதனால் ”ஏன்டீ” என்று வந்ததே சரி.

      தவிர கடைசி வரியில் அந்த வார்த்தையை வைத்தது அந்தக் காதலில் உள்ள நெருக்கத்தைக் காட்டுவதற்கே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
    2. பாவடிகளை, சீர், அசைகளை அழகாக விளக்கியமையைப் பாராட்டுகிறேன். பலருக்கு மரபுக் கவிதையில் நம்பிக்கையூட்டும் விளக்கமாக நான் கருதுகிறேன்.

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும் பாரட்டிற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  7. // விடுத்தாய்ப் பார்வை அம்பைப்போல்
    விழுந்தேன்! இன்னும் எழவில்லை...//

    உணர்வு மிக்க கவிதை. காதல் வந்துவிட்டாலே இது போலத்தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “காதல் வந்துவிட்டாலே இது போலத்தான்....“ ஹா ஹா ஹா...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  8. அழகான அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  9. நல்லதொரு படைப்பு. பகிர்வுக்கு நன்றி அருணா!

    பதிலளிநீக்கு
  10. இதுபோன்ற அற்புதமான கவிதைகளைத்
    தங்கள் மூலம் வெளிவரச் செய்ய வேண்டும்
    எனத்தான்.
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்ஹுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத முயற்சிக்கிறேன் ஐயா.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு

  13. காதல்படுத்தும் பாடு – கவிதை வரிகள் இயல்பாகச் செல்லுகின்றன. இப்போது வலைப்பதிவில் மரபுக் கவிதைகள் தருவோர் ஒரு சிலரே. தாங்கள் கவிதையை மட்டும் எழுதாது அது எந்த வகைப் பாடல் என்பதனையும் தெரிவித்தால் உங்கள் புலமை மற்றவர்களுக்கும் தெரிய வரும். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தமிழ் இளங்கோ ஐயா.
      என் புலமையைக் காட்டும் அளவிற்கு பெரியதாக ஒன்றும் நான் கற்கவில்லை. ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் கற்றதை இனி வரும் பாடல்களின் கீழ் நிச்சயம் எழுதுகிறேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.


      நீக்கு
  14. //மெய்யோ என்றே நெருங்கிவந்தால்
    மின்னல் போல மறைகின்றாய்!
    பொய்யோ என்றே நகர்ந்தாலோ
    பூவாய் நெஞ்சை வருடுகின்றாய்//
    ரசித்த வரிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜனா ஐயா.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மனோ சார்.

      நீக்கு

  16. வணக்கம்!

    என்னை நானே இழந்துவிட
    என்னுள் ஏனோ நீவந்தாய்!
    அன்னைத் தமிழின் அருளாலே
    அமுதைப் பொழியும் இக்கவிதை!
    தென்னை இளநீா் சுவைஎன்பேன்!
    தேனில் ஊறும் சுளைஎன்பேன்!
    பொன்னைக் கொட்டிக் கொடுக்கின்றேன்
    புலமை ஓங்கிப் மின்னுகவே!

    பதிலளிநீக்கு