திங்கள், 18 டிசம்பர், 2017

மயில் பந்தம்! - சித்திர கவிதை!

மயில் பந்தம்!   இது மயிலின் வடிவத்தில் சித்திரம் எழுதி அதனுள் பாடப்படும் கவிதையாகும். பாம்பன் ஸ்ரீமத் குமுரகுரு தாச சுவாமிகள்  அருளிய மயில் பந்தம், குற்றெழுத்துக்களை மட்டும் வைத்துப் பாடப்பட்டுள்ளது.
     தன தன தன தன தன தன தனதன தன தன தன தனன
    என்ற தாள ஓசை அளவில் பாடப்பட்டுள்ளது. பாடலில் எழுத்துக்கள் 100. ஆனால் சித்திரத்தில் வெறும் 64 எழுத்துக்கள் மட்டுமே வந்துள்ளது. அப்படியென்றால் மீதி 36 எழுத்துக்கள் வந்த எழுத்தே திரும்பத் திரும்ப வரும் படி அமைக்கப்பட்டிருக்கிறது.
                               (படம்)


    தற்காலத்தில் இயற்றப்பட்ட சித்திர கவிதை மிகவும் எளிய முறையிலேயே தான் வடிவமைக்கப் பட்டுள்ளது. முதலில் கொடுக்கப்பட்டுள்ள சித்திரத்தை வரைந்து கொண்டு அதனுள் எண்களை எழுதிக்கொள்ளுங்கள். பிறகு 79 எழுத்துக்கள் வருவது போல் விருப்பப் படும் பாடல் வகையில் ஏதேனும் ஒரு பாடலை எழுதிக் கொள்ளுங்கள். இப்போது சித்திரத்தில் மயிலின் மேல் அலகிலிருந்து பாடலை எழுதத் துவங்கி கொடுக்கப்பட்டுள்ள வரிசையின் படி எழுதிக் கொண்டே வந்து மயிலின் தலைக்கு மேல் உள்ள கொண்டையில் பாடலை முடித்து விடுங்கள்.

உதாரண பாடல்
நேரிசை வெண்பா!

பாவினிக்கும் நன்மொழிப் பண்ணிசையால்! பண்கவிதை
நாவினிக்கும்! பாக்கள்நான் நல்கிடஇன்தேவியருள்
கூடிவர நற்றமிழாள் கூடிவரம் தந்திடவே
பாடிடுவேன் செந்தமிழில் பாட்டு!

   இதில் ஒரு சில இடங்கள் தான் சற்று தடுக்கும். அதாவது மேல் அலகில் தொடங்கும் எழுத்தும் பாடலின் கடைசிலிருந்து மூன்றாவது எழுத்தும் அதாவது 77 ஆம் எழுத்தும் ஒரே எழுத்து வருவது போல் பாடலை அமைக்க வேண்டும். இது தவிர, பாடலில் சில இடங்கள் ஏற்கனவே எழுதிய எழுத்தில் திரும்பவும் பாடல் தொடர்ந்து வரும். அந்த இடங்களில் சற்று யோசித்துச் சரியான பொருளுடன் சொற்கள் அமையுமாறு பாடலை எழுத வேண்டும். பாடலில் மொத்தம் 79 எழுத்துக்கள். படத்தில் 69 எழுத்துக்கள் மட்டுமே வரும்.
   இது மிகவும் எளிய முறை தான். இந்த எளிய முறையைப் பயின்று தொடர்ந்து வந்தால் பழங்கால பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல் போல் எழுத முயற்சிக்கலாம்.

   தவிர மேல் உள்ள சித்திரம் போல் வேறு பறவைகளை வரைந்தும் அந்த பறவையின் பெயருடைய சித்திர கவிதையை விருப்பப்பட்டவர்கள் எழுதி வெளியிடலாம். இதனால் சித்திர கவிதையின் வளர்ச்சி மேலும் அதிகமாகும்.
.
பாவலர் அருணா செல்வம்
(சித்திர கவி தீட்டுவோம் - என்ற என் புத்தகத்தில் இருந்து.....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக