சனி, 23 ஆகஸ்ட், 2014

சட்டென்றே ஒருமுத்தம் !!ஒத்தையடிப் பாதையிலே
ஒத்தையிலே நடக்கையிலே
அத்தைமகன் முன்வந்தான்
ஆசையிலே வழிமறித்தே

முத்தமொன்று கொடுத்துவிட்டு
முன்னேறிப் போவென்றான்!
கத்திஊரைக் கூப்பிடுவேன்
கணப்பொழுதில் சொன்னாலும்

ஏக்கத்தில் அவன்பார்வை
ஏதெதுவோ செய்ததனால்
தாக்கத்தில் வழிவிட்டும்,
தயங்கியேதான் நின்றுவிட்டாள்!

நோக்கத்தைப் புரிந்துகொண்டும்
நூதனமாய்த் தனைப்பார்க்க
ஏக்கமொன்றும் எனக்கில்லை
என்றுசொல்லித் தள்ளிவந்தாள்!

அஞ்சியஞ்சி நில்லாமல்
அலட்சியமாய் வந்தாலும்
மஞ்சத்தில் அனல்பறக்க
மங்கையவள் உறங்காமல்

கொஞ்சுமொழி கண்பேச
குறும்பாகச் சிரித்தவனை
நெஞ்சுனுளே சுமந்துகொண்டு
நெடுநேரம் விழித்திருந்தாள்!

தொட்டணைக்க உரிமையுள்ள
தோதான அத்தைமகன்!
சட்டென்றே ஒருமுத்தம்
தந்துவிட்டு வந்திருந்தால்

கட்டான காளையவன்
கனவினிலே வந்திருப்பான்!
பட்டென்றே ஏன்வந்தோம்?
பண்பின்றி ஏக்கமுற்றாள்!

நட்புறவுகளுக்கு வணக்கம்.

    இந்த “சட்டென்று ஒரு முத்தம்“ என்ற கவிதை, “தயக்கம் ஏனோ அதைச் சொல்ல“ என்ற எனது அடுத்த புத்தகத்தில் வர இருக்கிறது.
    இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் இந்தக் குறிப்பிட்டக் கவிதையைப் பற்றி பாராட்டி எழுதி இருக்கிறார்கள். இந்தக் கவிதையில் அப்படி என்ன விசேசம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
   படிக்கும் உங்களுக்கு ஏதாவது சிறப்பாக உணருகிறீர்களா என்பதை அறிவதற்காகவே இந்தக் கவிதையை மறுபதிப்பாக வெளியிடுகிறேன்.
   தாங்கள் அறிந்த கருத்தை அவசியம் பின்னோட்டத்தில் தெரிவித்தால்..... நானும் தெரிந்துக் கொள்வேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

23.08.2014

19 கருத்துகள்:

 1. வணக்கம்
  சகோதரி
  இரசிக்கவைக்கும் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் தோழி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 3. தங்களது அடுத்த புத்தக வெளியீட்டினை கட்டியங் கூறிய கவிதை! வாழ்த்துக்கள்!
  த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 4. உணர்வு மிகு வரிகள்
  ந்ன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. ஏக்கம் எமக்கில்லைன்னு சொல்லிட்டு.....இம்புட்டு ஏக்கமா...ஒரு முத்தம்னா சும்மாவா.

  ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே.....
   ஒரு சமயம் இது தான் சிறப்போ.....

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி முத்தரசு.

   நீக்கு
 6. கட்டான காளையவன்
  கனவினிலே வந்திருப்பான்!
  பட்டென்றே ஏன்வந்தோம்?
  பண்பின்றி ஏக்கமுற்றாள்

  அச்சம் ,நாணம் தடுத்ததால் ஏற்பட்ட அவலம் ! இரவின் தனிமை ஏக்கம் இவ் வரிகளில் வெளிப்படும் தாக்கம் , அதனை வள்ளுவன் பாணியில் வடித்த ஆக்கம் ! அருமை மகளே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏக்கத்தின் தாக்கத்தை வெளிப்படுத்திய ஆக்கத்தால் சிறப்பு என்கிறீர்கள்....

   தங்களின் வருகைக்கும் புரியவைத்தமைக்கும்
   மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 7. சிறப்பான காதல் கவிதை! தாள லயம் சிறக்கிறது! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாளலயத்தால் சிறக்கிறது என்கிறீர்கள்....

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சுரேஷ்.

   நீக்கு
 8. கவிதை அருமை...
  கிராமிய மண் வாசத்தோடு ஒரு நாட்டுப்புறப்பாடலைப் போன்று இருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிராமிய மண் வாசத்தோடு ஒரு நாட்டுப்புறப்பாடலைப் போன்று இருப்பதால் சிறப்பு என்கிறீர்கள்...

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 9. கவிதை நல்லாயிருக்குங்க அருணா!

  ஆக, பண்புடன் அவள் சொல்லும் இதெல்லாம் பொய்யா?

  “கத்திஊரைக் கூப்பிடுவேன்“

  “ஏக்கமொன்றும் எனக்கில்லை“

  ---------------------

  *** பட்டென்றே ஏன்வந்தோம்?
  பண்பின்றி ஏக்கமுற்றாள்..***

  இதுதான் உண்மையா?!!!! :)

  ------------------

  பொண்ணுங்களை புரிந்து கொள்வது ரொம்ப எளிது. அவங்க சொல்றதுக்கு "நேர் எதிர்" அர்த்தத்தை எடுத்துக் கொள்ளணும்.. அம்புட்டுத்தான்! னு உங்க கவிதை ஒரு கவித்துவத்தை சொல்லுதுனு நான் சொல்றேன்! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேர் எதிராக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் வந்த கவிதை என்பதால் சிறப்பு என்கிறீர்கள்....

   அடடா.... என்னமா சிந்திக்கிறீர்கள்....!!
   நான் இப்படி சிந்தித்து எழுதினேனா என்று எனக்கே தெரியவில்லை. ஒரு சமயம் இப்படித்தான் சிந்தித்தேனா.... ஐயோ.... எனக்கே குழப்பமாக இருக்கிறது.

   சரி .... நீங்கள், புலவர் ஐயா, முத்தரசு, சுரேஷ், குமார் அனைவர் சொன்ன கருத்துக்களாலும் சிறப்புற்றது என்று கொள்கிறேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி வருண் சார்.

   நீக்கு