திங்கள், 18 ஆகஸ்ட், 2014

பிரிந்தாலும் பொருள் வரும்!!


   “மாமா.... இந்த ஜோக்கைக் கேளுங்களேன்....“ என்று சிரித்தபடி வந்தாள் காமினி.
   “என்ன ஜோக் அது? சொல்லேன் நானும் சிரிக்கிறேன்“ என்றார் மாமா.
    “நான் வேலை செய்யிற பள்ளியில் டீச்சர்ஸ் ரூம்இருக்கும் இல்லையா....? அந்த அறையின் கதவைச் சுத்தம் செய்து பெயிண்ட் அடித்தார்கள். அதன் பிறகு அந்த பெயிண்டரிடம், அந்த கதவின் மேலே “ஆசிரியர்கள் சாப்பிடும் இடம்“ என்று தமிழில் எழுத சொல்லி இருக்கிறார் பிரின்ஸ்பால். அந்த பெயிண்டரும் அது போலவே எழுதி தன் வேலையை முடித்து விட்டு சென்று விட்டார். இன்னைக்குக் காலையில நாங்க போய் பார்த்தால்.....“ அதற்கு மேல் பேச முடியாமல் சிரித்தாள் காமினி.
    “ஏன் என்ன ஆச்சு....? எழுத்து ஏதாவது அலைந்து விட்டதா....?“ என்று கேட்டார் மாமா.
   “ஐயோ.... அப்படி ஏதாவது அலைந்து இருந்தாலும் இவ்வளவு சிரிப்பு வந்திருக்காது. ஆனால் அந்த பெயிண்டர் செய்த செயலை நினைத்தால் தான் சிரிப்பாக வருகிறது“ என்றாள் சிரிப்பு மாறாமல் காமினி.
   “அப்படி என்னதான்மா செய்தார் அந்த பெயிண்டர்...?“ ஆர்வமுடன் கேட்டார் மாமா.
   “அதுவா மாமா.... “ஆசிரியர்கள் சாப்பிடும் இடம்“ என்பதை ஒன்றின் கீழ் ஒன்றாக  ஆசிரியர் கள் சாப்பிடும் இடம் என்று பிரித்து எழுதி விட்டு போய்விட்டார். அதைப் பார்த்ததிலிருந்து எங்களுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பிறகு திரும்பவும் பெயிண்டரை வரவழித்து சரியாக எழுதினார்கள்“ என்றாள் காமினி.
   மாமாவும் சிரிப்பை உதிர்த்தார். பின்பு சொன்னார்.... “அந்த காலத்தில் படிக்காதவர்களைக் கொண்டு தான் கல்வெட்டுகள் எழுதினார்கள். அதனால் தான் சரியான எழுத்து நடை அதில் இருக்காதாம். அது போல தான் இதுவும்.... ஆனால், ஒரு சொல்லைப் பிரித்து எழுதினால் எப்படி பொருள் மாறுகிறது என்பதை காளமேகப் புலவர் எப்படி கவிதையில் கையாண்டு இருக்கிறார் தெரியுமா காமினி?“ என்று கேட்டார் மாமா.
   “அட. காளமேகப் புலவரின் கவிதையிலும் இந்த வகை இருக்கிறதா...? அதைச் சொல்லுங்க மாமா“ என்றாள் ஆர்வமாய் காமினி.
   “சொல்கிறேன் கேள். ஒரு முறை காலமேகத்திடம் “குடத்திலே கங்கை அடங்கும்“ என்று ஈற்றடி வருமாறு ஒரு வெண்பா எழுதுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அவரும் எழுதினார்“ என்றார் மாமா.
   “என்னது.... குடத்திலே கங்கை அடங்குமா....? எப்படி அடங்க முடியும்? குடமோ மிகவும் சிறிய பாத்திரம். வேண்டுமானால் கங்கையிலிருந்து எடுத்த தண்ணீர் அதில் அடங்கலாம் என்று பாடலாம்“ என்றாள் காமினி.
   “அதுதான் இல்லை. குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி கொடுத்திருக்கிறார்கள். அதாவது கங்கையே அந்தக் குடத்தினுள் அடங்கும் என்று பொருள் வருமாறு தான் பாட வேண்டும்“ என்றார் மாமா.
   “அது எப்படி மாமா முடியும்? சரி. காளமேகப் புலவர் எப்படி பாடினார்....?“ கண்களை விரித்துக் கேட்டாள் காமினி.
   “ம்.... சொல்கிறேன் கேள்....

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை யடங்கும்

பொருளைச் சொல்கிறேன் கேள்.

விண்ணுக்கு அடங்காமல் – வானத்திடத்தே அடங்காமல்
வெற்புக்கு அடங்காமல் – இமயமலையிடத்தே அடங்காமல்
மண்ணுக்கு அடங்காமல் – புமியான மண்ணுக்கும் அடங்காமல் வந்தாலும் – பெருகி வந்த போதிலும்
பெண்ணை – உமாதேவியை
இடத்திலே வைத்த இறைவர் – தன் இடபாகத்திலே வைத்துக் கொண்டவரான சிவபெருமான்
சடாம குடத்திலே கங்கை அடங்கும் – சிவபெருமானின் சடா மகுடத்திலே கங்கை அடங்கும்.

இது தானம்மா பொருள். புரிந்ததா....?“ என்று கேட்டார் மாமா.
   “நல்ல புரிந்தது மாமா. சடா மகுடம் என்பதைச் சடாம குடம் என்று பிரித்து எழுதி அசத்தி இருக்கிறார். என்ன அருமையான சிந்தனை. அதிலும் நான் சொன்ன பொருள் பிரிவிற்கும் காளமேகத்தின் பொருள் பிரிவிற்கும் எவ்வளவு வித்தியாசம். காளமேகத்தைக் கேட்க கேட்க சுவையாக இருக்கிறது. மாமா“ என்று வியந்தபடி நகர்ந்தாள் காமினி.

அருணா செல்வம்

19.08.2014.

23 கருத்துகள்:

  1. காளிமேகப் புலவரின் கவிதை ரசித்தேன்
    சுவைத்தேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. உதாரணம் ஒன்று சொல்லி காளமேகப் புலவரின் கவிதை ஒன்றை ரசிக்கும்படி பகிர்ந்திருக்கிறீர்கள். சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதாவது ஒன்றைச் சொல்லி விளக்கினால் சுவையாக இருக்கும் என்று தான்....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  3. நல்ல ஒரு பகிர்வு! சடா மகுடம்....சடாம குடம்...என்ன அருமையான பொருள் பொதிந்த பிரித்தல்!

    மிகவும் ரசித்தோம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால்
      அதை யார் படித்துப் பொருள் புரிந்து விளக்குவது என்று நினைத்தே எழுத வில்லை....)))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  4. அந்தக் காலத்துப் புலவர்களின் புலமையைக் கண்டு எங்களுக்கும் தான்
    வியப்பாக உள்ளது தோழி ! மனம் ரசித்துப் படிக்கத் தந்த அருமையான
    பகிர்வுக்கு மிக்க நன்றி தோழியே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில பாடல்கள் மிக மிக வியப்பாக இருக்கிறது தோழி.
      பிறகு பகிர்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  5. ஜோக்கும் சிறப்பு! காளமேகப் புலவரின் பாடலும் சிறப்பு! விளக்கமும் பகிர்வும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஜோக் ஒரு சொந்த அனுபவம் தான்.... இந்த இடத்திற்குப் பொறுந்தியதால் எழுதினேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  6. புலவரின் பாடலும் உங்களின் பகிர்தலும் மிக சுவையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ராஜா ஐயா.

      நீக்கு
  7. காளமேகப் புலவரின் ரசிகையாகி விட்டீர்கள் போலிருக்கிறது. அடிக்கடி அவர் பாடல்களை உங்கள் பதிவில் காணமு டிகிறது. நல்ல்தொரு இலக்கிய இன்பம் தரும் பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காளமேகத்தின் பாடல்களில் உள்ள கருத்துக்கள் பொதுவாக தமிழ் பிரியர் அனைவருக்குமே பிடிக்கும். ஆனால் அவரின் பாடல்களை விளக்கிச் சொல்வது கொஞ்சம் கஷ்டம். புரிந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
      நான் விரும்பிப் படிப்பதை உங்கள் அனைவருக்கும் பகிர்கிறேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  8. கள் சாப்பிடும் இடம். சில நேரம் வார்த்தைகளைப் பிரித்தால் இப்படித்தான் வில்லங்கமாகப் போய்விடும். காளமேகப்புலவரின் பாடலையும் நயம்பட விளக்கியுள்ளீர்கள். அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு முன் உள்ள “ஆசிரியர்“ என்ற வார்த்தை தான் முக்கியம்.
      இதே மது அருந்துபவர் கள் சாப்பிடும் இடம் என்று இருந்தால் அது அவ்வளவு சுவாரசியமாக இருக்காது அல்லவா....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி விச்சு ஐயா.

      நீக்கு
  9. ஒ! காளமேக புலவர் பாடலுக்கு இப்படியும் உரை எழுதலாமா? அழகு தோழி!!! ஆசிரியர் கள் சாப்பிடும் இடம் :))))))))) அருமை தோழி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் உரையா.....? அப்போ ... இந்தப் பாடலுக்கு வேறு உரை இருக்கிறதா....?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  10. அதாவது இந்த ஸ்டைல்லிலும்:))) இப்போ ஓகே வா?

    பதிலளிநீக்கு