Friday, 1 August 2014

சிபாரிசு!!


    “சார்.... இன்னைக்கு அரை நாள் லீவு கேட்டேனே.... நீங்கள் பதில் எதுவும் சொல்லவில்லைங்க“ என்றான் காரை ஓட்டியபடி குமரன்.
    “அது இன்னைக்குத் தானா....? நான் பத்து மணிக்கு வெளியில் போகணுமே....“ முதலாளி யோசனையுடன் சொன்னார்.
   “நான் உங்களை ஆபிசில் விட்டுவிட்டு ஒரு மணிக்கெல்லாம் வந்திடுவேன். அதுவரைக்கும் என் நண்பனை வேண்டுமானால் வர சொல்லட்டுமா? “ என்றான் குமரன்.
   “அதெல்லாம் வேண்டாம். என் டிரைவர் மூர்த்தி எவ்வளவோ காலமா வேலை செய்திருந்தாலும் ஒரு நாள் கூட லீவுன்னு கேட்டது கிடையாது. அவர் மகளுக்கு பேரன் பிறந்து இருப்பதால நான் தான் ரெண்டு மாசம் லீவு கொடுத்து அனுப்பினேன். அந்த ரெண்டு மாசத்துக்கு டெம்ரவரியா வேலைக்கு வந்த நீ அதுக்குள்ள லீவு கேட்கிறே.... ம்... போயிட்டு வா. நானே காரை ஓட்டிக்கினு போறேன்....“ என்ற படி தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

    நேர்முகத் தேர்வு அறையில் (இண்டர்யு ஹால்) இருந்த மூன்று நடுவரில் அவனின் முதலாளியும் ஒருவராக இருந்தது இருவருக்குமே வியப்பாக இருந்தது. இருந்தாலும் இருவருமே தெரிந்ததாக காட்டி கொள்ளவில்லை. கேள்விகள் கேட்கப்பட்டது. பதில் சொன்னான். அவனுடைய சான்றிதழ்களை நோட்டமிட்டுவிட்டு, “பதில் தபாலில் வரும்“ என்று எப்போதும் போல சொல்லி அனுப்பினார்கள்.

    “நீ மூர்த்தியோட பையன்னு ஏன் என்கிட்ட சொல்லவில்லை....?“ கார் ஓட்டிக்கொண்டிருந்த குமரனிடம் கேட்டார் முதலாளி.
    “சொன்னால் உங்களுக்குப் பிடிக்காதுன்னு சொல்லலை சார்.“ என்றான் குமரன்.
    “ஏன்...?“
    “சார்.... உங்களுக்கு வேண்டுமானால் என்னைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களை உதாரணம் காட்டி காட்டியே தான் என் அப்பா எங்களை வளர்த்தார். உங்களுக்கு நேர்மை பிடிக்கும். திறமையை மதிப்பவர். யாராவது சிபாரிசுடன் வந்தால் அவர்களை வேலைக்கு வைக்க மாட்டீர்கள் என்பது எல்லாம் தெரிந்ததால் தான் நான் விளம்பரத்தைப் பார்த்து இந்த இரண்டு மாத வேலைக்கு வந்தேன். நான் இங்கே தான் வேலை செய்றேன்னு என் அப்பாவுக்கும் தெரியாது சார்“ என்றான் குமரன் காரை அவர் பங்களா வாசலில் நிறுத்திவிட்டு.
   “ம்... இருந்தாலும் இன்ஜினியர் படிப்பு படிச்சிட்டு டிரைவரா வேலை செய்யவும் ஒரு துணிவு வேண்டும்“ என்றபடி காரிலிருந்து இறங்கினார் முதலாளி.
   “படிப்புக்கேத்த வேலை கிடைக்கும்வரை கிடைக்கிற வேலையைச் செய்யலாம்ன்னு தான் எந்த வேலை கிடைச்சாலும் செய்கிறேன் சார்“ என்றான் குமரன் அடக்கமாக.
   “படிப்பு இருக்கு, திறமை இருக்கு, நிறைய இடத்துல வேலை செய்த அனுபவம் இருக்கு. நல்லா வருவப்பா நீ“ என்றார் முதலாளி.
   “ரொம்ப நன்றி சார்“ என்றான் நெகிழ்வாக குமரன்.

    “ஏங்க... அந்த கம்பெனியில நீங்களும் ஒரு பார்ட்னர் தானே.... இந்த குமரனுக்கே அந்த வேலை கிடைக்க நீங்க சிபாரிசு பண்ணுங்களேன்....“ என்றாள் அவர் சொன்ன அனைத்தையும் கேட்ட அவர் மனைவி.
   “வேண்டாம்மா.... அவன் ரொம்ப தன்னம்பிக்கை உள்ள பையனா தெரியுறான்.. நான் சிபாரிசு செய்ததால தான் அந்த வேலை கிடைச்சதுன்னு தெரிஞ்சா அவனுடைய திறமையையே அவன் தாழ்வா நினைக்க வச்சிடும். அதுமட்டுமல்லை. என்னையும் அதே மாதிரி நினைக்க ஆரம்பிச்சிடுவான். ஆனால் அவனா வந்து கேட்டால் செய்யலாம்“ என்றார் பெருமூச்சுயுடன்.

   அவன் சொன்னதை எல்லாம் கேட்ட குமரனின் தோழன், “டேய் குமரா... இப்பவே கையைக் குடுடா... அந்த வேலை உனக்குத் தான்“ என்றான் உற்சாகமாக.
   “எதை வச்சி நீ வேலை கிடைக்கும்ன்னு இவ்வளவு உறுதியா சொல்லுற?“ குமரன் கேட்டான்.
   “டேய்... உன் முதலாளியும் அந்த கம்பேனியோட பார்ட்னர்ன்னு சொல்லுற... அவரு வேற உன்னைப் பற்றி உயர்வா சொல்லியிருக்காரு. அப்புறம் என்ன? நிச்சயம் உனக்கு அந்த வேலை கிடைக்க சிபாரிசு செய்வாரு தானே....“ என்றான் தோழன்.
   “சே. சே. அவருக்கு சிபாரிசு என்றாலே பிடிக்காது. திறமை இருந்தால் மட்டும் தான் வேலை கொடுப்பாருன்னு என் அப்பா சொல்லி இருக்கிறார்“ என்றான் குமரன்.
   “அப்படியா...? அப்போ... நீயே போய் உன் முதலாளி கிட்ட கேட்டுப்பாரேன்“ என்றான் நண்பன்.
   “வேண்டாம்டா. என் மேல என் முதலாளி நல்ல மதிப்பு வச்சிருக்கிறார். அதை நான் கெடுத்துக்க விரும்பலை. விடுடா“ என்று பேச்சை முடித்தான் குமரன்.
   தன்னம்பிக்கை சில நேரம் தடுமாறவும் வைக்கிறது.
  
   இரண்டு மாதத்தில் வேலைக்கான அத்தாட்சியுடன் அந்த அலுவலகத்தில் குமரன் நுழைந்த போது மனது பாரமாகவே இருப்பது போல் உணர்ந்தான். எதிரில் அவன் முதலாளி.  “வாப்பா குமரன். இந்த வேலைக்காக எவ்வளவு பேர் அப்பளை பண்ணினார்கள் தெரியுமா....? அவ்வளவு பேரையும் தள்ளிட்டு உனக்கு இந்த வேலை கிடைச்சது பெரிய விசயம்பா. வாழ்த்துக்கள்“ என்றார் அவன் கையைப் பிடித்துக் குலுக்கியபடி.
   குமரன், “இந்த சூழ்நிலையில எனக்கு இந்த வேலை கிடைச்சது பெரிய விசயம் தான் சார். ரொம்ப நன்றி சார்“ என்றான். அவனின் குரலில் உற்சாகம் இல்லை. அதைக்கண்ட முதலாளி....
   “குமரன்.. நீ சொன்ன நன்றி நான் சொன்ன வாழ்த்திற்கு வேண்டுமானால் இருக்கட்டும். ஏன்னா இந்த வேலை உன் திறமைக்குக் கிடைச்சது. அதில் என் பங்கு ஒன்றும் இல்லை“ என்றார்.
   குமரன் நிமிர்ந்து அவரைப் பார்த்து மனம்குளிர “நன்றி சார்“ என்றதில் முதலாளியின் மனமும் குளிர்ந்தது.

    “ரொம்ப நன்றி ஐயா. நான் கேட்டதும் குமரனுக்கு இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தீர்களே..... நான் வாழ்நாள் முழுவதும் உங்களை மறக்க மாட்டேன் ஐயா“ என்றார் காரை ஓட்டியபடி மூர்த்தி.
    “மூர்த்தி.... இந்த காலத்துல சிபாரிசு இல்லாமல் எந்த வேலையும் கிடைக்காது தான். ஆனால் குமரனுக்கு தகுதியோ திறமையோ இல்லைன்னா இந்த வேலைக்கு நான் சிபாரிசு செய்திருக்க மாட்டேன். ஆனால், அதே சமயம் நல்ல தகுதியும் திறமையும் இருக்கிறவங்களை என் பக்கத்திலேயே வச்சிக்கிறது தான் புத்திசாலி தனம் என்பது எனக்குத் தெரியாதா....?“ என்று சிரித்தார் முதலாளி.
   அவருடைய வெற்றியின் வழி அவரின் வார்த்தையிலிருந்ததைக் கண்டு மகிழ்ந்தபடி காரை ஓட்டினார் மூர்த்தி!

அருணா செல்வம்

02.08.2014