புதன், 28 நவம்பர், 2012

இரட்டை நாக்கு!! (நிமிடக்கதை)



 
    பக்கத்துத் தெரு மதியம்மா வாசலில் நுழையும் பொழுதே... “பிருந்தா... பக்கத்துத்தெரு மதியம்மா வர்றாங்க... எதையாவது பேசிவிட்டு எதையாவது கேட்பாங்க. ஏமார்ந்து கொடுத்திடாதே...“ பிருந்தாவிடம் அவள் கணவன் சொல்லிவிட்டு வெளியே போய் விட்டான்.
    மதியம்மா அறைக்குள் நுழைந்த போது பிருந்தா மெதுவாக எழுந்து கட்டிலில் சாய்வாக அமர்ந்தாள். “என்னம்மா... பிருந்தா... கேள்விபட்டேன்ம்மா... எப்படிம்மா இப்படி ஆச்சி...?“
   “என் தவறு தான் மதிமாமி. போன ரெண்டு கொழந்தையும் நாலாம் மாசத்துலேயே கலஞ்சிடுச்சி. அதனால இந்த முறை ரொம்ப ஜாக்கிரதையா தான் இருந்தேன். ஆனால் இதுவும்...“ அதற்கு மேல் பேச முடியாமல் உதட்டைக் கடித்துக் கலங்கிய விழியை மறைத்தாள்.
   “சரி போவட்டும் விடும்மா. இந்தக்கொழந்தைக்குக் கொடுத்து வக்கலைன்னு நினைச்சிக்கோம்மா...“ என்று சொல்லிவிட்டு “கொஞ்ச நாள் உன் அம்மா வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றது தானே...?“ என்றாள்.
   “ரெண்டு நாளுக்கு முன்ன அங்க போயிட்டு வரும் போது தான் இப்படி ஆயிடுச்சி மாமி...“ என்றாள் கவலையாக.
    “அப்படியா...? உன் மாமியா சும்மா இருக்க மாட்டாளே... உன் குடும்பத்தாரைக் கரைச்சிக் கொட்டியிருப்பாளே...
    “அப்படியெல்லாம் இல்ல மாமி. எனக்கு இப்படி நடந்ததுக்கு அவங்க என்ன செய்வார்கள் என்பதை நல்லா புரிஞ்சிக்கினு அன்பா தான் பேசினாங்க. அவங்க என்கிட்ட மொதோ மாதிரி சண்டையெல்லாம் போடுறது இல்ல மதிமாமி“ என்றாள் பிருந்தா.
    “என்னவோ போம்மா... உன் மாமியாளைப் பற்றி எனக்குத் தான் தெரியும். நான் ரெண்டு நாளா ஊருல இல்ல. இருந்திருந்தா எங்கிட்ட வந்து உன்னைப்பத்தித் தாறுமாறா பேசியிருப்பா... நான் தான் அப்படியெல்லாம் பேசாதேன்னு சொல்லுவேன்.... ம்ம்ம்...“
    பெருமூச்சி விட்டுவிட்டு... “அம்மா பிருந்தா... எனக்கு ரெண்டாயிரம் ரூவா அவசரமா தேவைப்படுது. குடும்மா... மாச தொடக்கத்துல தந்திடுறேன்.“ என்றாள்.
    பிருந்தாவிற்கு கணவன் சொல்லி சென்றது ஞாபகம் வந்தது.
   “ஐயோ... ரெண்டு நாளா ஆஸ்பிடல் செலவே அதிகமா ஆயிடுச்சி. இப்போ கையில காசு இல்லையே மதிமாமி..என்றாள்.
    “வேற ஏதாவது முயற்சி பண்ணி கொடுக்க முடியுமா பிருந்தா. அவசரம்... அதான்...“ இழுத்தாள் மதிமாமி.
    “தற்போது எதுவும் என்னால முடியாது மாமி.“ பிருந்தா சொல்லும் பொழுதே இவளிடம் இருந்து கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு வெளியேறினாள் மதிமாமி.

    வாசலில் நுழைந்த பிருந்தாவின் மாமியாரைக் கண்டதும் “என்ன அஞ்சலை... இப்படி ஆயிடுச்சே...“ கவலையுடன் சொன்னாள்.
    “ஆமாம் மதி. என்ன செய்யறது...? எல்லாம் கடவுள் விட்ட வழி...“ கவலையுடன் மேலே கையைக் காட்டினாள் அஞ்சலை.
    “இங்க நீதான் பெரிசா கவலைப் பட்டு கடவுள் மேல பழியப் போடுற. ஆனா உன் மருமக சொல்லுறதை உண்மைன்னு நம்புற... என்ன பொம்பளையோ நீ...“ கிசுகிசுப்பாகச் சொன்னாள்.
    “என்ன சொல்லுற மதி...?“
    “உன் மருமகளுக்குத் தானா கொழந்த கலைஞ்சிருக்காது. வேலைக்கி போறாளில்ல... இப்போ எதுக்கு குழந்தைன்னு அம்மா வீட்டுக்குப் போற சாக்குல கலச்சிட்டு வந்து இருப்பான்னு நினைக்கிறேன். அதுதான் அவ மொகமே காட்டுதே...“
    அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவளிடம் “அஞ்சலை இன்னும் நிறைய விசயம் இருக்குது. எனக்கு இப்போ நேரம் இல்ல. அவசரமா ரெண்டாயிரம் தேவப்படுது. குடு. மீதியை நாளைக்கி வந்து சொல்லுறேன்...“ கையை நீட்டியவளிடம் ரெண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து அனுப்பினாள் அஞ்சலை.
   இதை அனைத்தையும் உள்ளறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பிருந்தா இனி நடக்கப் போவதை நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.


 அருணா செல்வம்.

22 கருத்துகள்:

  1. நல்ல கரு! கதையின் நடை நல்ல உரு அருமை! அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      (அம்மாடி... ஒரு வரியில் இத்தனை “ரு“ வா...?)

      நீக்கு
  2. பதில்கள்
    1. பாவம் தாங்க.
      இப்படிப்பட்டப் பெண்கள் திருந்தும் வரையில்
      எல்லா பெண்களுக்குமே கெட்ட பெயர் தான் வருகிறது.

      நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  3. தலைப்புக்கேற்ற அருமையான கதை.
    ஆங்காங்கே சிலபேர்கள் இப்படித்தான் இரட்டை நாக்குடன் உள்ளனர்.
    நாம் தான் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்புகிறவர்கள் இருக்கும் வரை
      வாய்ஜாலம் பேசுபவர்கள் இருப்பார்கள் தான் ஐயா.

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  4. இப்படித்தான் பல குடும்பங்களில் பிரச்சனை வெடிக்கிறது. தன் உடனிருப்பவரை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக்கூடாது. அதுதான் மற்றவர் நம் குடும்பத்துள் நுழைய காரணமாகிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கருத்தைச் சொன்னீர்கள் தோழி.

      உங்களின் அளவிற்கு யோசித்தால் ஏன் குடும்பங்களில் பிரட்சனை வரப்போகிறது?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  5. கதைகளிலும் அசத்துறீங்க அருணா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆமாம்... நீங்கள் சொல்வது உண்மை தான் ஹாரி....
      கொஞ்சம் மாற்ற வேண்டும்.

      நாளை வேறு மாடலில் எழுதுகிறேன் ஹாரி.
      நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி “இறை நிலை“.

      நீக்கு
  8. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    தங்கள் காரியம் கைகூட இப்படி எல்லாம் பேசும் மனிதர்களும் இருக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. கதையி்ல் இரட்டை நாக்கு மனிதர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது..

    வாழ்க்கையில்..?

    நல்ல கதை. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ம்ம்ப சிரமம் தான்.

      அப்படி கண்டுபிடிக்க முடியாமல் தானே ஏமாறுகிறோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு