செவ்வாய், 29 ஏப்ரல், 2014

போய்யா.... போய்யா....
 நட்புறவுகளுக்கு வணக்கம்!

       இங்கே பிரான்சில் இரண்டு வாரமாக வசந்த கால விடுமுறை. அதனால் என் தங்கை பிள்ளைகள், அண்ணன் பிள்ளைகள், நாத்தனார் பிள்ளைகள் என்று இந்த இரண்டு வாரமாக வீடு அல்லோல் பட்டது.
    குழந்தைகள் சேட்டைகள் செய்யும் பொழுது அந்நேரத்தில் கோபம் வந்தாலும், பின்பு அதை நினைத்துப் பார்க்கும் பொழுது, அந்தக் குழந்தைத் தனமான செயல்களை நினைக்க சிரிப்பு தான் வருகிறது.
   அதில் ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

   போன சனிக்கிழமை மதியம். மழை கொஞ்சம் ஓய்ந்து கொஞ்சம் வெயில் தலைகாட்டவும் நான் பிள்ளைகள் அனைவரையும் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பூங்காவில் விளையாட விட்டுவிட்டு நான் மட்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன். 
    மற்ற வேலைகளை முடித்துவிட்டு, ஏதாவது பதிவு எழுதலாம் என்று அப்பொழுது தான் கண்ணியின் முன்பு அமர்ந்தேன். கதவு தட்டும் ஓசை. போய் திறந்தால்.... என் அண்ணன் மகள் அழுதுக்கொண்டிருக்க அவளுடன் துணைக்குத் தங்கையின் மகள் வந்திருந்தாள்.
   “என்னடி ஆச்சி...?“ என்று கேட்டேன்.
   “நாங்க விளையாடும் பொழுது ஒரு கறுப்பர் பையன் அடித்துவிட்டான்“. என்றாள் துணைக்கு வந்தவள்.
   “கறுப்பர் பையன் அடித்துவிட்டானா.....? நீ என்ன செஞ்சே...?“ என்று கேட்டேன். நம்ம பிள்ளைகளும் சாதாரணமானதுங்கள் கிடையாது என்பது எனக்குத் தெரிந்ததால்.
   “நாங்கள் அவனை ஒன்னுமே செய்யலை. வெறும் பாட்டு மட்டும் தான் பாடிக்கினு வெளையாடினோம். அவன் வந்து அப்படி பாடாதேன்னு சொன்னான். அவன் என்ன சொல்லுறதுன்னு நாங்க பாடினோம். அதுக்கு போயி இவளைக் கன்னத்தில் படார்ன்னு அடிச்சிட்டான் பெரியம்மா“ என்றாள்.
   “பாட்டு பாடியதற்கு அடித்தானா....? என்ன திமிர் இருக்கும். வா கேட்கிறேன்“ என்று சொல்லிவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு போனேன்.

   அங்கே நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அதில் கறுப்பர்களின் குழந்தைகள் தான் அதிகம். அவள் அங்கிருந்த ஒரு கறுப்பர் பையனைக் காட்டி “இவன் தான் அடித்தான்“ என்றாள். அவனுக்கு ஒன்பது இல்லையென்றால் பத்து வயது தான் இருக்கும்.
   நான் அவனிடம் சென்று “ஏன் இவளை அடித்தாய்?“ என்று கேட்டேன். அவன் இவளை முறைத்துவிட்டு, “மேடம்... என்னை செவிடுன்னு சொல்லி கேலிபண்ணினாள் அதனால் தான் அடிச்சேன்“ என்றான். அப்பொழுது தான் அவன் காதில் செவிட்டு மசின் பொருத்தி இருப்பதை நானும் கவனித்தேன். எனக்கு நம்ம பிள்ளைகள் மேல் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
   “ஏன்டீ.... ஒரு புள்ளையோட குறையைக் காட்டியா கேலி பண்ணுவீங்க...? என்ன புள்ளைங்க நீங்க...?“ என்றேன் கோபமாக.
   “ஐயோ... அத்தை நாங்க அவனை ஒன்னுமே சொல்லலை. போய்யா போய்யா.... பாட்டு தான் பாடினோம். அதுக்குத் தான் அடிச்சிட்டான்“ என்றாள்.
    “போய்யா போய்யாவா...? அது என்ன பாட்டு...?“ என்று கேட்டேன்.
   “போய்யா...போய்யா.... போய்யா... போய்யா.... உன் வேலயத்தான் பாத்துகிட்டு போய்யா போய்யா....ன்னு ஜெயம் ரவி படத்துல வருமே... அந்தப் பாட்டைத் தான் பாடினோம்“ என்றாள்.
   ஆமாம்... அப்படி ஒரு பாட்டு இருக்கிறது தான்.... ஆனால் அதுக்கும் இவன் இவளை அடித்ததற்கும் என்ன சம்மந்தம் என்று யோசித்துக்கொண்டே.... அந்தப் பையனிடம் “எதுவாக இருந்தாலும் நீ பெரியவர்களிடம் தான் சொல்லனும். இந்த மாதிரி பிள்ளைகளை அடிக்கக் கூடாது“ என்று கோபமாக சொன்னேன்.
   “அவர்களிடம் என்னை செவிடுன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லுங்க“ என்றான் அந்தப் பையன். நானும் இவர்களை மிரட்டிவிட்டு அங்கிருந்த பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு மற்றப் பிள்ளைகள் விளையாடுவதை இரசித்துக்கொண்டு இருந்தேன்.
   சற்று நேரத்திற்கெல்லாம் அந்த கறுப்பர் பையன் கோபத்துடன் என் அண்ணன் மகளைத் துரத்திக்கொண்டு ஓடி வர அவள் என் பின்னால் வந்து பதுங்கினாள். நான் அந்தப் பையனைப் பிடித்து, “ஏன்? என்னாச்சி?“ என்று கேட்டேன். அவன் திமிரிக்கொண்டு, “அந்த பொண்ணு திரும்பவும் என்னை செவிடு செவிடுன்னு கேலி பண்ணுது.“ என்றான்.
   நான் அவளை முன்னுக்கு இழுத்து, “இனிமேல் அவனை செவிடுன்னு சொல்லுவியா...? சொல்லுவியா...?“ என்று   காதைப்பிடித்துத் திருகினேன் கோபமாகப் பல்லைக் கடித்துக்கொண்டு.
   அவள் “ஐயோ... அத்தை நான் பாட்டு தான் பாடினேன். உண்மையா அவனை எதுவுமே சொல்லலை.....“ என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டாள். எனக்கோ பாவமாக இருந்தது. அந்தப் பையனுக்கு ஏதோ புத்தி சுவாதீனம் இல்லை போலும் என்று முடிவு கட்டி.... அவனைச் சமாதானம் செய்தேன்.
   அவன் இவனை முறைத்துக்கொண்டே தான் சென்றான். இதற்கு மேல் இங்கிருந்தால் சரியில்லை என்று நான் இவர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன். அப்பொழுது ஒரு பதினைந்து பதினாறு வயதுள்ள கறுப்பர் பையன் ஒருவன் வந்தான். வந்தவன் என்னிடம், “இனிமே என் தம்பியைச் செவிடுன்னு சொல்ல கூடாதுன்னு உங்க பொண்ணுகிட்ட சொல்லி வையுங்க“ என்றான்.
   நான் உடனே, “எங்க பிள்ளைகள் உன் தம்பியை எதுவும் சொல்லலையாம். ஏதோ பாட்டு தான் பாடினார்களாம்“ என்றேன்.
   “அந்தப் பாட்டைத்தான் பாட வேண்டாம் என்றேன். எங்கள் மொழியில் “போய்யா“ என்றால் செவிடு என்று அர்த்தம்“ என்றான். அப்பொழுது தான் இந்தப் பிரட்சனையின் காரணம் எங்களுக்குப் புரிந்தது.
   ஐயோ... அந்தப் பிள்ளையின் மனத்தைத் தெரியாமல் நோகடித்துவிட்டோமே என்று நினைத்து மனம் கலங்கியது. தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறு தான் என்று சொல்லி, அவனிடம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போய் மன்னிப்புக் கேட்க வைத்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் அனைவரும் ஒன்றாக விளையாட ஆரம்பித்து விட்டதும் மனத்திற்கு நிறைவாக இருந்தது.

   ஆனால்.... அது எந்த நாட்டின் மொழி என்று கேட்காமல் வந்துவிட்டோமே என்று வீட்டிற்கு வந்த பிறகு தான் யோசித்தேன்.

அருணா செல்வம்.
29.04.2014
  

36 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

நிச்சயம் அவர்கள் மொழியில் அப்படி
இருக்குமானால் அப்படிப்பாடியது தவறுதான்
ஆனால் அப்படி ஒரு பொருள் இருப்பது
அறியாமல் பாடியது எப்படித் தவறாகும்
என்றாலும்
அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை என அந்தப் பாடலை
பாடாது இருந்திருக்கலாமோ ?
சிறிய விஷயந்தான் ஆயினும் சொல்லிப்போன விதம்
அதிகம் யோசிக்க வைக்கிறது
குழந்தைகள் இருந்தாலே வஸந்த காலம்தான்
கூடுதலாக காலமும் வஸந்தமாய் இருந்தால்
கூடுதல் கொண்டாட்டம் தானே
மகிழ்வும் பகிர்வும் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

ஸ்ரீராம். சொன்னது…

மொழி புரியாத பிரச்னை சரிதான். அவர்கள் வேற்று மொழியில் பாடுகிறார்கள் என்று கூடப் புரிந்து கொள்ளாத குழந்தையா... என்ன கொடுமை!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இவர்கள் பாடியதில் ஏதோ ஒரு வார்த்தை செவிடைக் குறிக்கிறது என்பது மட்டும் புரிந்தது.எந்த நாட்டின் மொழி என்று கேட்டு சொல்லுங்கள்.
நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

//அவனிடம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போய் மன்னிப்புக் கேட்க வைத்தேன்.//

பிறர் மனதை புண்படுத்தக் கூடாது என்ற நல்ல பழக்கங்கத்தை கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

Avargal Unmaigal சொன்னது…

பிரான்ஸ்ல இருக்கிற கருப்புர்கள் ஸ்ட் ராங்க இல்ல போல ஆனா அமெரிக்காவுல உள்ள கருப்பர்கள்கிட்ட அடிவாங்கினா நம்ம காதும் செவிடாகி இருக்கும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஒரு மொழியில் நல்ல வார்த்தையாக இருப்பது வேறு மொழியில் கெட்ட வார்த்தையாக போய்விடுகிறது.....

நல்ல அனுபவம் தான்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

இங்க தெலுங்கு மலையாளம் கன்னடம் பேசும்போதே பல அர்த்தம் வருது. பல மொழிகள் பேசும் அங்கே இது போன்ற பிரச்சனைகள் சகஜமே....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் நேர்மை பிடிச்சிருக்கு சகோதரி... பாராட்டுக்கள்...

Unknown சொன்னது…

கமெண்ட் போடாமல் வோட்டு மட்டும் குரூப் விளையாட்டில் போய்யா என்று சொல்லாமல் என்னையும் சேர்த்துக்குங்க !
த ம 9

கும்மாச்சி சொன்னது…

போய்யா வார்த்தையில் இவ்வளவு விஷயமும் பதிவுக்கான மேட்டரும் இருக்கா?

அருணா சுவையான பதிவு, வாழ்த்துகள்.

Yarlpavanan சொன்னது…


மொழிச்சிக்கல்
புரிந்துணர்வு
உறவு நலம் பேணல்
தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்

Mahesh Prabhu சொன்னது…

தமிழ் பாடல்ல இவ்வளவு சங்கடம் இருக்கா....

அம்பாளடியாள் சொன்னது…

உண்மை தான் தோழி எங்கள் தாய் மொழியின் ஆதிக்கம் உலக நாடு
முழுவதும் பரவிக் கிடப்பதைப் போல் உணரத் தோன்றும் எத்தனையோ சொற் பிரயோகத்தைக் கண்டு நானும் இது நாள் வரை வியந்ததும் உண்டு இன்பத் தமிழ்க் காவிரியாற்றில் இந்த உலகமே நீச்சல் அடித்து மகிழ்ந்ததன் விழைவு தான் இதுவோ ! :))) வாழ்த்துக்கள் மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தவறை உணர வைத்து மன்னிப்பு கேட்க சொன்ன பண்பு பாராட்டத்தக்கது! வாழ்த்துக்கள்!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

தாதாடும் சோலையில் தந்த நிகழ்வுகள்
போதாது போதாது போடு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

ezhil சொன்னது…

மொழி வேறுபாட்டால் எத்தனை வருத்தம்....
ஒரு நிறத்தை வைத்து வேறுபடுத்திக் கூறுவதும் சரியாகத் தோன்றவில்லையே...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா,
போய்யா என்ற வார்த்தை அம் மொழியில் இருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை சகோதரியாரே
தமிழ் மொழி வார்த்தைகள் அநேக மொழிகளில் உள்ளன.
என்ன அதன் அர்த்தம்தான் மாறியிருக்கிறது

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் இரமணி ஐயா.

அந்தப்பையன் சின்ன பிள்ளை தானே... அவன் வயதில் நல்லது கெட்டது புரியாது அல்லவா...?

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அவர்கள் மொழியில்
“செவிடு.... செவிடு....
செவிடு.... செவிடு...
உன் வேலையைப் பாத்துக்கினு செவிடு செவிடு....“ என்று அவனுக்குத் தன் ஊனத்தின் பெயர் மட்டும் தான் புரிந்திருக்கும்.

தவிர நம் பிள்ளைகள் மற்ற வார்த்தைகளைப் பிரன்சு மொழியில் தான் பேசினார்கள்.
அதனால் அந்தப் பையனைத் தவறாகச் சொல்ல முடியாது.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

”போய்யா“ என்றால் அவர்களின் மொழியில் செவிடு என்று அர்த்தமாம்.
அவசியம் எந்த நாட்டின் மொழி என்று கேட்டு எழுதுகிறேன்.

அருணா செல்வம் சொன்னது…

நல்லப் பழக்கங்களை நாம் தான் கற்றுத் தர வேண்டும்.
கெட்டவைகளை அவர்களே கற்றுக் கொள்கிறார்கள்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

அனுபவமோ.....)))

எனக்கு அடி கொடுத்து தான் அனுபவம். வாங்கியது இல்லை. அதனால் தெரியவில்லை.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

ஆமாங்க நாகராஜ் ஜி.

சில பிரன்சு வார்த்தைகளைத் தமிழில் சொல்லவே முடியாது.... ரொம்ப கேவலமாக இருக்கும்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் சொல்வதும் உண்மைதாங்க .

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

அருணா செல்வம் சொன்னது…

நேர்மைக்குக் கிடைத்த பாராட்டு.....!! மகிழ்கிறேன் அண்ணா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் பகவான் ஜி.

நிங்கள் யாரைக் கறித்தச் சொல்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால் சில நேரங்களில் நல்ல பதிவுகளைப் படிப்பேன். பின்னோட்டம் இட நேரமிரக்காது. அல்லது கைபோனில் பதிவுகளைப் படிப்பதால் தமிழில் எழுத முடியாது. அந்த நேரங்களில் நான் வெறும் ஓட்டு மட்டும் போட்டுவிடுவது வழக்கம்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

பதிவுக்கு மேட்டரை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான். ஆனால் இது எனக்கு ஓர் அனுபவம். அதை உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

சில பாடல்கள் நமக்கே சங்கடங்கள் தருகிறதே...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மகேஷ் பிரபு ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கலாம்.
ஒரு சமயம்...தமிழ் தொன்மையான மொழியால் இப்படியெல்லாம் நமக்குத் தெரிகிறது போல...

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

அது தானே மனிதப் பண்பு...!

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

எல்லா நிகழ்வுகளையும் போட்டால்..... “உனக்கு வேற வேலை இல்லையா?“ என்று கேட்பீர்களே....

தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

ஒரு நிறத்தை என்பது....
அந்தப் பையன் வேற்று நாட்டவரின் பையன். வெள்ளைக்காரரின் பையனாக இருந்திருந்தால் “வெள்ளைக்காரப் பையன் என்று குறித்து எழுதி இருப்பேன்.
இந்தப் பையன் எந்த நாடு என்று தெரியவில்லை.
தவிர வெள்ளையர் தங்களின் பிள்ளைகளைத் தனியாக விளையாட விட மாட்டார்கள். கூடவே இருப்பார்கள்.
அதனால் நிறத்தைக் குறித்து எழுதினேன்.

இருப்பினும் இதுவும் தவறுதான். உணர்த்தியமைக்கு நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

உண்மைதாங்க ஜெயக்குமார் ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா.