திங்கள், 1 ஜூலை, 2013

கனவிலாவது நடக்கவேண்டும்!!
தானாய் வந்த கனவினிலே
   தட்டுத் தட்டாய் இனிப்புவகை!
தேனாய் நினைக்க இனிக்கின்ற
   தேர்ந்து செய்த தங்கநகை!
மீனாய் மனதோ துள்ளிவிட
   மின்னும் பட்டுச் சேலைவகை!
வீணாய்ப் போன ஆசையெல்லாம்
   விருந்தாய்க் கனவில் தெரிந்ததம்மா!

நானாய் எதையும் கேட்கவில்லை!
   நன்றாய்த் தெரிந்த காட்சியெல்லாம்
தூணாய்ப் பொதிந்து நின்றாலும்
   தூங்கி எழுந்து பார்த்தாலோ
மானாய்க் குதித்து மறைந்ததம்மா!
   மனத்தில் உள்ள ஆசையெல்லாம்
வானாய் விரிந்து கிடக்கையிலே
   வந்த கனவோ துளியம்மா!

குட்டிக் குட்டி ஆசையெல்லாம்
   குடைந்து தலையில் குவிந்திருந்தும்
செட்டி பிடுங்கும் வட்டிபோல
   சேர்ந்து போகும் அசலின்றி!
எட்டிப் பிடிக்க முடியாத,
   எண்ண முடியா ஆசைகளைக்
கட்டிப் பாட்டில் பதிக்கின்றேன்!
   கனவில் சுகத்தைக் காண்கின்றேன்!!

அன்பு என்ற பெயராலே
   அடிமை யானப் பெண்களெல்லாம்
தன்..கை நம்பி நடக்கவேண்டும்!
   தவறிக் கூடத் தலைவரெல்லாம்
தன்..கை நீட்ட கூசவேண்டும்!
   தவறு செய்யும் மனிதரிடம்
என்..கை வரிசை காட்டிவிட்டு
   எழுத்தில் அதைநான் பதிக்கவேண்டும்!

செந்தேன் மொழியைப் பிள்ளையெல்லாம்
   சேர்ந்து பேச கேட்கவேண்டும்!
என்றன் எழுத்தை அரசாங்க
    ஏட்டில் கண்டு மகிழவேண்டும்!
சந்தம் கொண்ட திரைப்பாடல்
   தமிழை மட்டும் ஒலிக்கவேண்டும்!
விந்தை யாக விலைவாசி
   விரும்பும் அளவு குறையவேண்டும்!

(கனவு தொடரும்)
அருணா செல்வம்
02.08.2011

33 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

என்றன் எழுத்தை அரசாங்க
ஏட்டில் கண்டு மகிழவேண்டும்!
சந்தம் கொண்ட திரைப்பாடல்
தமிழை மட்டும் ஒலிக்கவேண்டும்!
விந்தை யாக விலைவாசி
விரும்பும் அளவு குறையவேண்டும்!

வாழ்த்துக்கள் தோழி விரைந்து கனவெல்லாம்
நினைவாகட்டும் ! :)

Avargal Unmaigal சொன்னது…

///கனவிலாவது நடக்கவேண்டும்!! ///
அப்படி செய்தால் இந்த பெண்ணிற்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி என்று சொல்லப் போகிறார்கள்

Avargal Unmaigal சொன்னது…கனவெல்லாம் நினைவாக வேண்டும் என்று தலைப்பு வந்திருக்க வேண்டுமோ?

அது சரி தலைப்பு எப்படியும் இருந்து போகட்டும் ஒகே ஆனால் கவிதை மிக நன்றாக இருக்கிறது

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அளவான ஆசைகள் நிறைவேறும்... நிறைவேறட்டும்...

வாழ்த்துக்கள்...

கவியாழி சொன்னது…

தூங்கி எழுந்து பார்த்தாலோ
மானாய்க் குதித்து மறைந்ததம்மா!//கனவுவிதி அப்படி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

//விந்தை யாக விலைவாசி
விரும்பும் அளவு குறையவேண்டும்!//
உண்மையில் கனவில்தான் நடக்கவேண்டும்.
கவிஞர்களுக்கு ஒரு வசதி தன ஆசைகளை கவிதையாக்குவது. இவை எல்லாம் நடக்காது போனாலும் அழகான கவிதை கிடைத்தது

ராஜி சொன்னது…

கனவு நனவாக வாழ்த்துக்கள்..., எல்லோரும் பாடுபட்டா இதெல்லாமே நம்ம ஜென்ரேஷன்லேயே நடந்துடும். இல்லாட்டி..., சரி, நம் பிள்ளைகளாவது இதெல்லாம் அனுபவிக்கட்டும் அருணா!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

.. செந்தேன் மொழியைப் பிள்ளையெல்லாம்
சேர்ந்து பேச கேட்கவேண்டும்!
என்றன் எழுத்தை அரசாங்க
ஏட்டில் கண்டு மகிழவேண்டும்!
சந்தம் கொண்ட திரைப்பாடல்
தமிழை மட்டும் ஒலிக்கவேண்டும்!
விந்தை யாக விலைவாசி
விரும்பும் அளவு குறையவேண்டும்!...

இந்த கனவு நிச்சயம் நினைவாகும்...

சசிகலா சொன்னது…

அன்பு என்ற பெயராலே
அடிமை யானப் பெண்களெல்லாம்
தன்..கை நம்பி நடக்கவேண்டும்!

நிஜத்திலேயே நடக்க வேண்டும் தோழி. சிறப்பு.

Yaathoramani.blogspot.com சொன்னது…

மனதிற்கு அதிகக் களிப்பூட்டும் கனவுகள்
தித்திக்கும் சந்தத்தில்...
கரும்பு தின்னக் கூலியா ?
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 8

அருணா செல்வம் சொன்னது…

ஹா ஹா ஹா...

ஏன்.... உண்மையில் இந்தப் பெண்ணிற்கு கால்கள் இல்லையோ... என்று கூட நினைப்பார்கள் தான் “உண்மைகள்“

தவறிப்போய் இப்படி தலைப்பைக் கொடுத்துவிட்டேன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்ல கனவுகள்! நிறைவேற வாழ்த்துக்கள்!

இளமதி சொன்னது…

கனவினில் மட்டும் காண்பது வோஇவை
நனவினில் நிகழ்திட நல்லதன் றோநம்
துயர்கள் அகன்றிட தொடரும் வாழ்வு
துலங்கியே துளிர்த்திடும் உயர்ந்து நன்றே!

கனவு மெய்ப்படவேண்டும் தோழி!
வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் சொன்னது…

இதெல்லாம் நடக்கும் என்கிறீர்கள்...?

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

இதெல்லாம் நினைவில் நடக்க முடியாது. அதனால் கனவிலாவது
வந்து போகட்டுமே... என்ற ஆசையில் தான் கேட்டேன்.

“உண்மைகள்“... உங்களின் வலையை நீங்கள் மட்டுமே
படித்துக் கொள்வீர்களா...?
நான் எப்பொழுது வந்தாலும் துள்ளிக்கொண்டே தான் இருக்கிறது.
எனக்காக துள்ளாத அளவு கொஞ்சம் கட்டிப்போடுங்க. எத்தனை முறை தான் வந்து ஏமாறுவது?

நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

இது அளவற்ற ஆசை இல்லைங்க.
சாதாரண சின்ன சின்ன ஆசைகள் தான்....

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாங்க.... இனிமேல் விழித்துக்கொண்டே
கனவு காண வேண்டியது தான்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

மாதேவி சொன்னது…

கனவுகள் நிறைவேறினால் !!!

நீங்கள் விரும்புவதுபோல கிடைக்கட்டும் வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

நிறைய ஆசைகள் கனவில்தான் நடக்கும் போல!

அருணா செல்வம் சொன்னது…

நினைவில் நடக்காது என்பது
உங்களுக்கும் தெரிந்து விட்டதா?

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

வாரிசுகள் ஆள்வதால் நம்
வாரிசுகளுக்கும் இதெல்லாம்
நினைவில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

உங்களின் வாக்குப் பலிக்கட்டும்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சங்கவி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நடந்தால் நன்மைதான்.

நன்றி சசிகலா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஐயா.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கனவு... தொடரட்டும் கனவு நினைவாகும் வரை....

அருணா செல்வம் சொன்னது…

நினைவில் அனைத்தும் நடப்பதில்லை! நெஞ்சுள்
பனையளவாய் ஆசை படர்தல் - வினைதான்!
தினையளவே நான்கேட்டேன்! தீதியின்றி வந்தால்
நனைந்திடும் நன்றாய் மனம்!

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

கனவிலாவது நடக்குமா...?

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஐயோ... அதுக்காக கனவு கண்டுகொண்டே
இருப்பதா...?

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

கனவுகள் நிறைவேறினால்....
கடமைகள் முடிந்துவிடும்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மாதேவி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

Seeni சொன்னது…

nalla kanavu...