சனி, 21 டிசம்பர், 2013

கண்ணே கண்ணுறங்கு!! 

கண்ணே! மணியே! கற்கண்டே!
  கறுத்த கூந்தல் நிறத்தழகே!
பொன்னே! பொருளே! பூஞ்சரமே!
   பொக்கை வாயால் சிரிப்பவளே!
முன்னே பின்னே பார்க்கின்ற
   முத்துப் போன்ற கண்ணழகே!
பெண்ணாய் உலகில் பிறந்தவளே
   பேசும் கிளியே கண்ணுறங்கு!

இன்றோ உனக்கு வேலையில்லை!
   இதுபோல் வாழ்நாள் கிடைப்பதில்லை!
தின்றால் உணவு தீருதல்போல்
   திரும்ப வராத நாளிதுவே!
அன்றோ எனக்கே அன்னைசொன்னாள்
   அதைநான் உனக்குப் பாடுகிறேன்!
என்றோ வருமா ஏங்காமல்
   இன்றே சேர்த்தே கண்ணுறங்கு!

காலை பூக்கள் மலர்ந்துவிடும்!
   காலம் விரைவில் கடந்துவிடும்!
வேலை போகும் வேளைவரும்!
   விருப்பம் பலவும் சேர்ந்துவரும்!
மாலைச் சூடும் மனம்வந்தால்
   மடியில் மழலை தவழ்ந்துவரும்!
நாளை என்போல் பாடவரும்
   நலமாய் இன்றே கண்ணுறங்கு!

அருணா செல்வம்
11.12.13

15 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கவிதை.

குழந்தையும் அழகு!

அம்பாளடியாள் வலைத்தளம் சொன்னது…

தாயைப் போலொரு பாவிசைத்துத்
தயவாய் என்னைத் தூங்க வைத்தாய்
சேயைப் போல நான் தூங்கும் அழகிய
சேதி கேட்டு விழித்திடு தோழி நீயும் :))))

அருமையான பா வாழ்த்துக்கள் தோழி அருணா .

கி. பாரதிதாசன் கவிஞா் சொன்னது…

வணக்கம்!

கண்ணுறங்கு! கண்ணுறங்கு! - என்
கண்ணே!நீ கண்ணுறங்கு!
விண்ணுறங்கும்! விதியுறங்கும்! - நீ
விடியும்வரை கண்ணுறங்கு!

பெண்ணுறங்க நொடியேது? - என்
பேரழகே கண்ணுறங்கு!
பண்பிறங்கப் பாடுகிறேன் - என்
பைங்கிளியே கண்ணுறங்கு!

மல்லிகையின் வாசத்தில் - என்
மகளே..நீ கண்ணுறங்கு!
மெல்லிய..கை அணைத்தபடி - என்
மேகலையே கண்ணுறங்கு!

எத்தா்கள் உலகமடி - நீ
என்தோளில் கண்ணுறங்கு!
சத்தங்கள் கேட்டாலும் - என்
சந்திரனே கண்ணுறங்கு!
-----------------------------------------------
பெண்மகளைக் கண்ணுறங்கப் பேசும் கவிகண்டு
பண்மகளை நான்அழைத்துப் பாடும்பா! - தண்மதியார்
நல்லருணா நற்றமிழ் வானில் ஒளிர்கவே!
வெல்லருணா பேரை விளைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Rupan com சொன்னது…

வணக்கம்
தாலாட்டுப் பாடல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
த.ம 5வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Avargal Unmaigal சொன்னது…

tha.ma 6

Avargal Unmaigal சொன்னது…

///நாளை என்போல் பாடவருமா///// பதிவு வருமா இப்படி பாட்டு பாடி/

ஸ்கூல் பையன் சொன்னது…

அருமையான தாலாட்டு....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Good...!

(From Android)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

நம்பள்கி சொன்னது…

அருமை
+க

Jeevalingam Kasirajalingam சொன்னது…

"மாலைச் சூடும் மனம்வந்தால்
மடியில் மழலை தவழ்ந்துவரும்!" என
அழகாக அமைந்திருக்கிறதே
தங்கள் தாலாட்டு!

Ramani S சொன்னது…

அருமையான கவிதை
படித்து மிக மகிழ்ந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Ramani S சொன்னது…

tha.ma 10

புலவர் இராமாநுசம் சொன்னது…

நல்ல இசையோடு பாடினால் எந்த குழந்தையும் உறங்கி விடும்
என்பதில் ஐயமில்லை! பாடல் அருமை! அருணா!