கொல்லை புறத்து மரங்களிலே
கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
முத்துப் பல்லை ஒத்திருக்க
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
காற்றில் இராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
சொக்கிப் போனேன் இவைகண்டு!!
காற்றில் வந்த நறுமணத்தில
காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டீ என்மேலே
சின்னக் கிளியே செங்கனியே!
வீட்டில் பாயில் படுத்தாலும்
விடியக் கண்கள் மூடவில்லை!
காட்டிக் கொடுக்கும் கண்ணிரண்டும்
காதல் தவிப்பைத் தாயிடத்தில்!
கூட்டிக் கேட்டால் என்சொல்வேன்?
கொடுத்த ஏக்கத் தவிப்பைநான்!
வாட்டி வதைக்கும் வடிவழகே
வாடி என்தன் பக்கத்தில்!
சொட்டும் தேனை இதழினிலே
சொக்க எனக்குத் தந்தவளே!
கட்டும் குழலைப் பாயாக்கிக்
காதல் களிப்பைத் தந்தவளே!
திட்டும் போதும் பல்காட்டித்
திகட்டா இன்பம் தந்தவளே!
தொட்டுப் பேச அழைக்கின்றேன்
தொடுத்த சரமே அருகேவா!!
வட்ட நிலவு வானத்திலே
வந்த உடனே உன்நினைப்பே!
சிட்டு போலப் பறப்பவளே
சிந்தை முழுதும் உன்நினைப்பே!
சட்டம் போட்டுச் சண்டையிட்டுத்
தனியே தாயின் வீட்டிற்குத்
திட்டம் போட்டுப் போனவளே
திட்ட மாட்டேன் வந்துவிடு!
முன்னே தெரியும் முகமெல்லாம்
முத்துப் பெண்ணே உன்முகமாய்
என்னே அழகாயத் தெரியுதடி!
ஏங்கிக் கிடக்கும் என்னைப்பார்!
கண்ணே! மணியே! கற்கண்டே!
கட்டி அணைக்க வந்துவிடு!
சொன்னேன் கவியில் இனிப்பாக
சுவைக்க இதழைத் தந்துவிடு!!
(அறுசீர் விருத்தம்)
அருணா செல்வம்.
ரசிக்க வைக்கும் வரிகள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
அற்புதமான கவிதை
பதிலளிநீக்குபடித்து நாங்களும் சொக்கிப்போனோம்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
//கொள்ளைப் புறத்து மரங்களிலே//
பதிலளிநீக்குகொல்லைப்புறம் தானே?
விருத்தப் பா தித்திப்பு.
பதிலளிநீக்குகவிதையை ரசித்தேன்...
பதிலளிநீக்குஅருமையான கவிதை சகோதரி.
அருமை!
பதிலளிநீக்குதமிழ்மணம் +1
Adadaa...rasanai....
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குசிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கவிதை. பாராட்டுகள்.....
பதிலளிநீக்குமுதல் வரி - கொள்ளை - கொல்லை? எது சரி..... என சந்தேகம்.
அழகிய கவிதைகள் போல்
பதிலளிநீக்குஅகம் குளிர பிறக்கப் போகும் புத்தாண்டில்
என் இனிய வாழ்த்துக்கள் தோழி அருணா .
ஒரு ஆணின் தவிப்பை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி.
தங்களின் பழைய பதிவுகளை இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
அழகான வரிகள் ..!!
பதிலளிநீக்கு