Tuesday, 11 June 2013

பெற்ற மனம்!! (சிறுகதை)
    அகிலாவின் கை கணவருக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் தான் பெற்ற பிள்ளைகளின் மேலேயே இருந்தது.
    என்னவாச்சி இந்த இரண்டு பேருக்கும்? ஏதாவது கோபமாக இருக்குமா....? ஏன் கோபப்படணும்? நான் என்ன குறை வைத்தேன்? எதுக்காக இரண்டு பேரிடம் இருந்தும் இந்த இரண்டு வாரமாக ஒரு போன்கூட வரவில்லை? நாமே போன் பண்ணினாலும் எடுப்பதில்லையே...? என்னவாக இருக்கும்...?
   “என்ன அகிலா... குழம்பு வைக்க வில்லையா...? இந்த கூட்டைப் போட்டே சாப்பிடனுமா?“ கணவனின் குரல் கேட்டு நிமிர்ந்தாள். மனம் குழப்பத்தில் இருந்ததால் கணவருக்குச் சாதத்தைப் போட்டுவிட்டு குழம்பு ஊற்ற மறந்து இருந்தது தெரிந்தது.
   “இதோ... கத்திரிக்காய் குழும்பு வச்சேங்க“ சொல்லிக்கொண்டே சாதத்தில் கொஞ்சம் எடுத்து ஊற்றினாள்.
   “என்னம்மா... உப்புப் போட மறந்துட்டியா...?“ கணவன் கேட்டதும் உடனே ஒரு துளி குழம்பை வாயில் வைத்துச் சுவைபார்த்தவள்.... “ஆமாம்... உப்புப் போட மறந்துட்டேன். இதோ போடுறேங்க...“ சொல்லிக்கொண்டே கொஞ்சம் உப்பைப் போட்டு கலக்கிச் சாதத்தில் ஊற்றினாள். அவளையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் சாப்பாட்டைச் சற்று நகர்த்தி வைத்துவிட்டு நிமிர்ந்து மனைவியைப் பார்த்தார்.
   “அகிலா... என்னவாச்சி உனக்கு..? நானும் ரெண்டு மூனு நாளாக கவனிக்கிறேன்... ஏதோ யோசனையிலேயே இருக்கிறியே.... என்னத்தான் அது...? சொல்லு“ என்றார்.
    “அப்பா.... இப்பவாவது கேட்டீங்களே.... நீங்க கடையைத் தவிர வேற எதையும் யோசிக்கவே மாட்டீங்க... சொன்னாலும் எதையும் பெரிசா எடுத்துக்க மாட்டீங்க... அதனால தான் சொல்லலை.“ என்றாள்
   “சரி. இப்போ கேக்கிறேன் இல்ல... சொல்லு. என்ன பிரட்சனை...?“
   “அது ஒன்னும் இல்லைங்க. போன ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நமக்கு அறுவதாங் கல்யாணம் நடந்துச்சி இல்லையா...?“
   “ம்... இப்போ அதுக்கென்ன?“
   “அந்த விசேசத்திற்கு நம்ம பொண்ணும் பையனும் குடும்பத்தோட வந்தாங்க... அப்போ... கிராமத்து வீட்டுல இருந்து என் அம்மா அவங்களால வர முடியலை என்றாலும் எனக்கு பட்டுப்புடைவை உங்களுக்கு பட்டு வேட்டி கூடவே ஒரு பாவாடை சட்டையும் வாங்கி தம்பி கிட்டே கொடுத்திருந்தாங்க.“
   “ஆமாம்... இது தெரிஞ்ச விசயம் தானே...?“
   “விசயம் இருக்குதுங்க. அந்த பாவாடை சட்டையை நான், நம்ம பையனோட பொண்ணுக்குக் கொடுத்துட்டேன். அண்ணனோட பொண்ணுக்கு மட்டும் பாட்டி துணி எடுத்துக் கொடுத்தாங்கன்னு நம்ம பொண்ணுக்குக் கொஞ்சம் மனவருத்தம். ஏதோ அவங்களால முடிஞ்சது அவ்வளவு தான் போல. நீ கவலைப்படாதே....ன்னு அந்தப் பாவாடை சட்டையை விட நல்லதா உன் பொண்ணுக்கு நீயே எடுத்துக் குடுன்னு நான் அவளைச் சமாதானப் படுத்திவிட்டு கொஞ்சம் பணம் கொடுத்தேங்க. அதை மருமகளும் பார்த்தாள் தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. ஆனால் விசேசம் முடிஞ்சி ரெண்டு வாரத்துக்கு மேல ஆவுது.... இன்னமும் ரெண்டு பேருகிட்டேருந்தும் ஒரு போன்கூட வரலைங்க... என்ன இன்னும் கோபம்ன்னு தெரியலை.... அது தான் ஒரே யோசனையா இருக்குதுங்க.“ என்றாள் அகிலா கன்னத்தில் கை வைத்தபடி.
    “இது தான் உன் கவலையா...? நான் சாய்ந்திரம் டவுனுக்குத் தான் போறேன். அப்படியே ரெண்டு பேரையும் நேராகப் பார்த்துவிட்டு வர்றேன். கவலைப்படாதே“ என்றார் ஆறுதலாக.
    இந்தச் சொற்களே அகிலாவிற்கு கொஞ்சம் பாரம் குறைந்தது போல் இருந்தது.

    இரவு டவுனுக்குப் போன கணவன் திரும்பி வந்ததும் அவசரமாக கேட்டாள் அகிலா.
   “என்னங்க... ரெண்டு வீட்டுக்கும் போனீங்களா...? என்ன சொன்னாங்க? நல்லா இருக்கிறாங்களா...? என்மேல என்ன கோவமாம்...? பிள்ளைகளுக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா...?“
    அவரைப் பதில் சொல்லவிடாமல் கேள்விமேல் கேள்வி கேட்டாள்.
    “அகிலா... நம்ம பொண்ணும் பையனும் குடும்பத்தோட நார்த் சைடு டூர் போயிருக்கிறாங்களாம். உங்கிட்ட சொன்னாங்களாமே...“
   அகிலா சற்று நேரம் யோசித்துவிட்டு...
   “ஆமாம்... சொன்னாங்க தான். நான் தான் அறுவதாங் கல்யாண வேலையில் மறந்துட்டேன்...“ என்று சொன்னவள், “சரி ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்லையா....? நான் என்னவோ ஏதோன்னு பயப்படுவேன்னு தெரியாதா?“ தாயின் தவிப்புடன் கேட்டாள்.
   “நமக்கு போன் பண்ணினால் டவர் கிடைக்கலையாம். நம்ம பொண்ணோட மாமியார் சொன்னாங்க“ என்றார் சுந்தரம்.
   “சே... என்ன பிள்ளைகளோ... வேற யார்கிட்டேயாவது போன் பண்ணி சொல்லச்சொல்லி இருக்கலாம் இல்லையா...? இந்த ரெண்டு வாரமா இதுங்க கிட்டேர்ந்து எந்த தகவலும் வராம நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்“ புலம்பிக்கொண்டே இருந்தாலும், படுத்ததும் நிம்மதியுடன் தூங்கினாள்.

   மறுநாள் காலை தபால் காரன் கொடுத்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
   அதில்..

   என் அன்பு மகள் அகிலாவிற்கும் மருமகனுக்கும் அனந்தக் கோடி ஆசிகளுடன் எழுதுவது. நலம் நலமறிய ஆவல்.
   உங்களின் அறுவதாம் திருமணம் நல்லபடியாக நடந்தது என்று தம்பி சொல்லிவிட்டுச் சென்றான். சந்தோஷமாக இருந்தது. உன் தம்பியிடம் கொடுத்தனுப்பிய புடைவை வேட்டி பிடித்ததா...? உங்களுக்கு அதிகம் செய்யத்தான் ஆசை. ஆனால் என் கையில் கிடைத்தப் பணத்தில் ஏதோ என்னால் முடிந்ததைச் செய்தேன்.
   அதில் ஏதேனும் குறையிருந்தாலும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் போல் பக்கத்துப் பாய் கடைக்குப் போன் போட்டு பேசு. இந்த தள்ளாத வயதில் எனக்கு ஒரு போன்கூட பண்ணாமல் தவிக்க விடாதே. காத்திருக்கிறேன்.

                            அன்புடன் அம்மா.

   அம்மாவின் கடிதத்தைக் கண்டதும் தான்... தன் அம்மாவின் எண்ணம் மனத்துள் வந்தது. சே... நம் பிள்ளைகளையே நினைத்துக் கொண்டிருந்ததால் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் நம் அம்மாவை மறந்து விட்டோமே.... என்ன பிள்ளை நான்?
    நாம் தவித்தது போல் தானே அவர்களும் தவித்து இருப்பார்கள்... என்ற எண்ணத்துடன் தொலைபேசியை நோக்கி அவசரமாக ஓடினாள் அகிலா.
      பெற்ற மனம் எப்பொழுதுமே பித்து தான்.

அருணா செல்வம்.
11.06.2013