ஞாயிறு, 4 ஜனவரி, 2015

சமத்துவம்!



    ரஞ்சனாவிற்கு உணவு உள்ளே இறங்க மறுத்தது. மனதிலே இறுக்கம் இருந்தால் தொண்டையிலுமா இப்படி ஓர் அடைப்பு வந்து அழுத்தும். சாப்பிடப் பிடிக்காதவளாக சோற்றைப் பிசைந்துக் கொண்டிருந்தாள்.
    தெருவில் நாய் குறைக்கும் சத்தம்.
    எழுந்து போய் சாப்பாட்டை நாயிக்குக் கொட்டினாள். நாய் வாலாட்டிக் கொண்டே சாப்பிட்டது. இரண்டு நிமிடம் இருக்காது... எதிர் வீட்டு மல்லிகா இரண்டு எச்சில் இலையைக் குப்பையில் எறிந்தாள். உடனே இந்த நாய் அந்த இலையை நோக்கி ஓடியது.
    அதிலிருந்த ஒன்றிரண்டு பருக்களை வாலை ஆட்டிக் கொண்டே நக்கியது. இதற்கும் ரஞ்சனா போட்ட இலையில் கறியும் எலும்பும் அதிகமாகவே இருந்தது.
    ரஞ்சனா பெருமூச்சுடன் அந்த நாயையே பார்த்துக் கொண்டிருந்தாள். நாய் குணம் என்பது சரிதான். எவ்வளவு அன்பாகவும் ருசியாகவும் கொடுத்தாலும் அடுத்த வீட்டு எச்சில் இலை தான் அதற்குப் பிடிக்கிறது. மனிதர்களும் ஒரு வயதுக்கு மேல் அப்படித் தானே மாறி விடுகிறார்கள்.....
    தன் கணவனை நினைத்துக் கொண்டாள். வயது நாற்பத்து நான்கு. பதினெட்டு வருட தாம்பத்திய வாழ்க்கை. வயதுக்கு வந்த இரண்டு பெண்பிள்ளைகள்.
    இது வரையில் வசந்தம் மட்டுமே வீசிய குடும்பத்தில் புதியதாக ஆபிசில் சேர்ந்த மிதுனாவால் லேசான புயல் வீசத் துவங்கியுள்ளது.
    மிதுனா அப்படி ஒன்றும் அழகியல்ல. ரஞ்சனாவுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான். இருந்தாலும் இந்த ஆண்களுக்கு எதனால் இப்படி ஓர் ஈர்ப்பு.... இலை நிறைய சாதம் இருந்தும் எச்சில் இலைக்குப் பறக்கும் நாயைப்போல...
    கண்களில் இருந்து உருண்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
    “என்ன ரஞ்சனா... என்ன யோசனை? அந்த நாயையே பார்த்துக்கினு நிக்கிற...?“
    அவளின் தாய் மாமன் சுந்தரம் கிராமத்தில் இருப்பவன். டவுனுக்கு வரும் போது ரஞ்சனாவைப் பார்க்காமல் போக மாட்டான்.
    அவன் குரலைக் கேட்டதும்... “பாரு மாமா. நான் போட்ட சோற்றைத் தின்னாமல் இந்த நாய் அடுத்த வீட்டு எச்சிலை விரும்பி சாப்பிடுது...“ என்றாள்.
    குரலில் ஏக்கம். கொஞ்சம் நேரத்தில் அது அழுகையாகக் கூட மாறலாம் என்ற அளவில் இருந்தது.
    “விடுமா. அது தெரு நாய். அப்படித் தான் இருக்கும். உள்ளே வாம்மா....“
   நாயை முறைத்து விட்டு வீட்டின் உள்ளே சென்றாள்.

இரவு நேரம் கழித்து வந்த கணவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தாள்.
    “நான் மிதுனா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டேன்...“ சொல்லியபடி மேசையில் இருந்த அழைப்பிதழை எடுத்துப் பார்த்தான்.
    “மத்தியானம் மாமா வந்தார். உங்களுக்காக சாய்ந்தரம் வரையில் காத்துக்கினு இருந்தார்“ சொல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் சொன்னாள்.
    “ம். நான் தான் மிதுனா வீட்டுக்குப் போறேன்னு உனக்குத் தெரியுமே. காத்திருக்க வேணம்ன்னு சொல்லறது தானே....“
    “எப்படி சொல்ல முடியும்?“
    “ஏன்.... சொன்னால் என்ன?“
    “நீங்க அவ வீட்டுக்குப் போயிருக்கிறீங்கன்னு சொன்னா அது உங்களுக்குத் தானே அசிங்கம்....“
    அவன் அவளை உற்றுப் பார்த்தான். கண்களில் சிகப்பேறியது.
    ரஞ்சனாவிற்குத் தொண்டையில் அடைத்திருந்த உருண்டை வெளியே வந்துவிட்டது போன்ற உணர்வு!
    “அப்போ.... உன் மாமா வருவான்னு தெரிஞ்சித் தானே நான் உன்னை மிதுனா வீட்டுக்குக் கூப்பிட்டும் நீ வரலை...“
     “அதுக்காக இல்லை. நான் எப்படி அவ வீட்டுக்கு வருவேன்? அவள் தான் கேவலம் என்றால் நானுமா.... சே....“ என்றாள் கோபமாக.
    “என் கூட எனக்குத் தெரிஞ்சவங்க வீட்டுக்கு வருவது கேவலம். ஆனால் உன் மாமா கூட இருப்பது கௌரவமா?“
    அவன் கேட்டதும் நெருப்பை வாரி முகத்தில் கொட்டியது போல் இருந்தது ரஞ்சனாவிற்கு.
    “என்ன சொன்னீங்க...? நீங்க செய்ற தப்பை மறைக்க என் மீது பழி சுமத்துறீங்களா...?“
    “அதையே திருப்பி நான் சொன்னால்....“ சவாலாகக் கேட்டான்.
    “அப்படீன்னா... நீங்க என்னை சந்தேகப் படுறீங்களா...? அதுவும் இத்தனை வருஷத்துக்குப் பிறகு...“
   “ஏன்... நீ என்னை சந்தேகப்படலை...?“
   “நான் நான் உங்க மனைவி. என்னைப் போய்.... அதுவும் என் தாய் மாமாவுடனா....“
    “ஏன்... உன் தாய்மாமாவும் ஆண்பிள்ளை தானே. ஏற்கனவே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இருந்தவர் தானே... வீட்டுல ஆம்பளை இல்லை. பெண்கள் காலேஜிக்குப் போயிட்டாங்கன்னு தெரிஞ்சும் வீட்டிலேயே தானே இருந்தான். ஏன் நான் சந்தேகப்படக் கூடாது.....?“
    அவன் இப்படி கேட்க அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றாள் ரஞ்சனா.
    “ரஞ்சனா... மிதுனா என் தங்கச்சியோட ஃபிரெண்ட். பெரிய குடும்பம். ஆனால் வசதி இல்லாதவங்க. அவளுக்கு உதவுறதும் என் கடமை. அவளும் எனக்குத் தங்கை மாதிரி தான். இது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்கிறது....“
    பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்த மனைவியைப் பார்த்தான். அவளின் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தான்.
    “ரஞ்சனா.... உன்னை இப்படி சொன்னதும் உனக்கு இப்படி கோபம் வருதே... அதே கோபம் கவலை எனக்கு வராதா...? நான் உன்னை புண்படுத்தனும்ன்னு இப்படி பேசலை. என்னை நீ புரிஞ்சிக்கனும். அதுக்காகத் தான் அப்படி பேசினேன். சாரி ரஞ்சனா...“ என்றான்.
   அவள் கலங்கி விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
   “மிதுனா என் ஆபிசுக்கு வந்ததிலிருந்து அவளுக்கு நான் உதவப் போனதிலிருந்து நீ என் கிட்டே தானாகவே விலகி போன உணர்வு எனக்கும் தெரியாமலில்லை. உன் மனசுல இருக்கிற இந்த சந்தேகம் போகனும்ன்னு தான் இப்படி பேசிட்டேன். நீ என் மேல வச்ச அன்பு வற்றாத வரைக்கும் என் மனசுல நீ மட்டும் தான் இருப்பே. என்னைப் புரிஞ்சிக்கோ ரஞ்சனா...“ என்றவனின் மார்பில் சாய்ந்து விம்மினாள்.
   அவன் அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டான். அந்த கண்ணீருடன் அவளின் சந்தேகமும் கவலையும் காய்ந்து போனது.

அருணா செல்வம்.

08.04.2000

27 கருத்துகள்:

  1. இயல்பான இந்த சந்தேகம் இப்போது உதிர்ந்தாலும் நாளை மறுபடி பூக்கும்! மனித பலவீனம்!

    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. இனி சந்தேக பூதம் பிடிக்காமலிருந்தால் சரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகம் வருவது போல் நடக்காமல் இருந்தாலே
      சந்தேகப் பேய் பிடிக்காது அண்ணா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. கணவன் விளக்கம் கொடுத்ததும் அதை மனைவி நம்பி ஏற்றுக் கொள்வது கதைகளிலும் சினிமாக்களிலும்தான். நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கணவர்கள் மனைவியிடம் நடந்துக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது.

      நான் அப்படித்தான் இருப்பேன். நீ எப்படியாவது போ... என்றால்.... இப்படித் தான் ஆகும் மதுரைத் தமிழரே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி உண்மைகள்.

      நீக்கு

  5. உங்களிடம் பிடித்ததே நீங்கள் கதைசொல்லும் பாணிதான். மிக சிறிய அளவிலும் அதே நேரத்தில். தெளிவாகவும் அருமையாகவும் சொல்லிச் செல்கிறீர்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... நான் பாக்கியவதி ஆனேன்!!!

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி மதுரைத் தமிழரே.

      நீக்கு
  6. வணக்கம்
    இரசித்தேன் கதையை.. நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு

  7. வணக்கம்!

    நாட்டின் நிலைமையைக் காட்டும் கதைபடித்தேன்!
    ஓட்டும் துயரை உடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  8. நடை அருமை சகோ... வாழ்த்துகள் தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. உண்மை தான் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பித்தன் ஐயா.

      நீக்கு
  10. எல்லாருக்கும் வரும் சந்தேகமே அவளுக்கும்...
    தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அவர்களின் சந்தோஷம் நிலைக்க வைத்ததல்லவா... அருமையான கதை அக்கா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு வழியில்லை.
      என்னசெய்வது. முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டியுள்ளது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  11. சந்தேகம் வந்தால் வாழ்க்கை நரகமே! தெளிவாக மனைவிக்கு விளக்கிய பாத்திரப்படைப்பு சிறப்பு! அருமையான கதை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான சந்தேகம் என்று வந்தால் வாழ்க்கை நரகம் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  13. நாற்பது வயதிற்கு மேல் பெரும்பாலான பெண்களுக்கு வரும் சந்தேகம். புரிதல் கொண்ட கணவரால் புரியவைக்கப்படாவிட்டாலும், தானாகவே அந்த முதிர்வை வளர்த்துக் கொள்ளாமலும் வாழ்வை நரமாக்கிக் கொள்கின்றனர் சிலர். நல்ல சிறுகதை

    பதிலளிநீக்கு
  14. சந்தேகம் என்பது ஒரு வியாதி. தொடர்கதை. இன்று முற்றுப் புள்ளி என்றாலும், அது கமாவாக மாறுவது எளிது. மனித சைக்காலஜி ..

    நடை அருமை! நீங்கள் சொல்லிச் செல்லும் விதம் அருமை!

    பதிலளிநீக்கு