வெள்ளி, 16 ஜனவரி, 2015

தோழிக்காக ஒரு பாட்டு!தொலைந்து போன ஆண்டுகளில்
    தோற்றுப் போனாள் என்தோழி!
மலைத்துப் போயே அமர்ந்தவளின்
    மதியை எண்ணிச் சிரிக்கின்றேன்!
விளைந்து விட்ட நெற்பயிரை
    வெட்டி னாலே பிறர்க்குதவும்!
வளைந்து போகும் பாதைகளும்
    வழியை நமக்குத் தந்துதவும்!

கடந்து போன வாழ்க்கையிலே
    கரைந்து போன கண்ணீரோ
கடலில் கலந்த உப்புநீரே!
    கவலை இல்லா மனிதன்யார்?
தடங்கள் இல்லா வெற்றியேது?
    தவற்றைச் சரியாய்க் காட்டிவரும்
கடவுள் இல்லா இடமெங்கே?
    இருந்தால் எனக்கும் காட்டிவிடு!

துறவு பூண்ட மனத்தினிலே
    துன்பம் கூட தூசியன்றோ?
வரவு செலவு பார்த்தாலே
    வாழும் வாழ்க்கை பாரமன்றோ?
இரவு நேர வானத்திலே
    இளைய பிறைதான் சூரியனோ?
உறவு பலமாய் அமைந்திருக்க
    உலகில் எதுவும் அமிர்தமன்றோ!

நேராய் நிமிர்ந்து வளர்ந்திருக்கும்
    நெடிய நீண்ட தென்னைமரம்!
பாராய் தோழி அதன்வேரைப்
    பல்வேர் கோணல் வளைந்திருக்கும்!
வேராய் மனமோ குலைந்தாலும்
   விரும்பி எதையும் எதிர்கொண்டால்
காராய் இருந்த மனம்கூட
    கவிதை போல அழகாகும்!
   

அருணா செல்வம்

14 கருத்துகள்:

 1. உறவுகள் பலமாயும் பாலமாயும் அமைய வேண்டுமே...!!

  நல்லதொரு ஆறுதல் கவிதை.

  பதிலளிநீக்கு
 2. // விரும்பி எதையும் எதிர்கொண்டால் //

  அனைத்தும் சுபம் சகோதரி...

  பதிலளிநீக்கு
 3. மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியும் தெம்பும் தருவதாய் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 4. படத்தில் இருக்கும் பெண்ணின் இமெயில் இருந்தால் கொடுங்க காதல் கடிதம் எழுத

  பதிலளிநீக்கு
 5. ஆஹா ...என்ன ஓர் அற்புதமான கருத்தினை இனிக்கும் செந்தமிழ்ப்
  பாவில் வடித்துள்ளீர்கள் தோழி !!!!..வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்களின் பாமாலைகள் பரங்கும் பரவட்டும் .

  பதிலளிநீக்கு
 6. தோழிக்குச் சொன்ன அறிவுரைகள் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்!

  தோழி துயர்துடைக்கச் சொன்ன விருத்தத்தை
  வாழியென வாழ்த்துமென் வாய்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 8. ஆஹா! தோழிக்குச் சொன்ன அறிவுரைகள் கவிதை நடையில் அருமை! படமும் அழகு!

  பதிலளிநீக்கு