ஞாயிறு, 11 ஜனவரி, 2015

முதுமை!!நட்புறவுகளுக்கு வணக்கம்!
    இன்று (11.01.2015) பிரான்சு தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் கி.பாரதிதாசன் தலைமையில் “ஆடிய ஆட்டம் என்ன?“ என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
   அதில் “இளமை“ “செழுமை“ வறுமை“ “முதுமை“ என்ற தலைப்புகளில் நான்கு கவிஞர்கள் பாடினார்கள். அதில் நான் ஒருத்தி. எனக்குக் கொடுத்த தலைப்பு “முதுமை“. இதனால் எனக்கு கவிஞர் மீது கொஞ்சம் வருத்தம் தான். அதனால்.....

முதுமையிலே ஆடுகின்ற ஆட்டம் என்ன?
     முறையாக மொழிந்திடவே அருணா வந்தார்!
எதுகையிலே மோனையிலே என்னைப் போன்றே
    எழுதுகின்ற ஆற்றலினை என்முன் கற்றார்!
புதுமையிலே இவருக்கு நாட்டம் உண்டு!
    பொல்லாத காலத்தில் மாட்டிக் கொண்டார்!
புதுவையிலே இருக்கின்ற தெய்வம் எல்லாம்
    புரப்பட்டுக் காக்கட்டும் புகழை ஈந்தே!

அருணா செல்வமே! அருந்தமிழ் வெல்லமே!
திருமால் இல்லமாய் இருக்கும்உன் உள்ளமே!

முதுமை ஆடிய ஆட்டம் பாடப்
பதுமைபோல் வருகிறார் அருணா செல்வம்!

முதுமையைப் பாட இளமையே வருக!
முழுமையாய் ஆட இனிமையே தருக!

அவையேறி வருக! – பாக்கள்
சுவையுறித் தருக!

என்று என்னைப் பட அழைத்தார். இதைக் கேட்டதும் என் வருத்தமெல்லாம் பறந்துவிட “ஆடிய ஆட்டம் என்ன?“ என்ற தலைப்பில் “முதுமை“யைப் பாடினேன்.

ஆடிய ஆட்டம் என்ன?  "முதுமை"

அவை வணக்கம்.

தங்கத் தமிழைப் படைத்திட்ட
   தமிழின் தலைவா முதல்வணக்கம்!
எங்கும் நிறைந்து கமழ்கின்ற
   எழிலே தமிழே என்வணக்கம்!
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
   சான்றோர் தமக்கும் தலைவருக்கும்
அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும்
   அவைக்கும் என்தன் நல்வணக்கம்!

குரு வணக்கம்.

துள்ளியாடும் பருவத்தில் எனக்குத்
      தள்ளாடும் இத்தலைப்பு!
பள்ளியினால் வந்திடுமோ இதைப்
     படித்தறிந்தால் புரிந்திடுமோ?
உள்ளாடும் உணர்வுகளைச் சபையில்
     உரைத்திடவே நான்வந்தேன்!
மல்லாட்டம் இங்கில்லை தலைவா
     மதிவணங்கிக் கேட்கின்றேன்!

ஆடிய ஆட்டம் என்ன?
(முதுமை)

நரம்பெல்லாம் வாடிப்போய்
     நாடியெல்லாம் தளர்ந்துபோய்க்
கரம்பிடித்த துணையும்போய்க்
    கடந்தகால அனுபவத்தைச்
சிரம்தாங்கிச் சொல்வதனால்
    சீர்க்குலைந்து போனாலும்
வரமென்று சொன்னார்கள்
     வயதான முதுமையினை!

களம்நிறைந்த போட்டியினில்
    கர்வமுடன் பெற்றவெற்றி
வளம்நிறைந்து வளர்ந்துவிட்ட
    வாலிபத்தின் வேகமது!
இளவயது இரத்தஓட்டம்
    இன்றில்லை என்றாலும்
உளமென்ற கூட்டினிலே
    ஓய்வின்றி நினைவுண்டு!

அன்றாடிய ஆட்டங்கள்  
    ஆசையதன் வெளிபாடு!
என்றென்றும் நிலைத்திருப்போம்
    என்றெண்ணும் குறைபாடு!
இன்றென்றும் நாளையென்றும்  
    என்றறியா நிலைபாடு!  
நன்குணர்ந்து நான்கண்டேன்
    நாடியெல்லாம் தளர்ந்தபின்னே!

எதிர்நீச்சல் போட்டெழுந்தே
     எனக்குநிகர் யாரென்றே
மதியிழந்து ஆட்டமிட்டேன்!
     மாறிவிட்ட காலத்தில்
சதிசெய்த விளையாட்டோ
     சமதர்மக் கோட்பாடோ
விதியறிந்து பார்க்கின்றேன்
     வீரமெல்லாம் போனதெங்கே?

அந்தநாளில் ஆடியதோ
    ஆனந்தக் கூத்தாட்டம்!
இந்தநாளில் ஆடுவதோ
     இயலாத தள்ளாட்டம்!
வந்துபோன நாட்களிலே
    வம்பலந்த சொல்லாட்டம்
எந்தநாளில் இனிவருமோ
    ஏங்கிடுதே மனஓட்டம்!

கோலாட்டம் ஆடியக்கை
     கோலூன்றி நடக்கிறது!
வேலாட்டப் பார்வையின்று
     விழித்திறையை மறைக்கிறது!
காலாட்டிச் செய்தவேலை
     கைநிறைய தந்தாலும்
தாலாட்ட யாருமின்றித்
     தனியாளாய் ஆடுகின்றேன்!

அருணா செல்வம்

10.01.2015

33 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் !

மிக அருமையான எடுத்துக்காட்டுடன் விளங்கும் தங்களின் பாவரிகள் கண்டு நானும் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தோழி !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஆடிய ஆட்டம் என்ன? தலைப்பில் அசத்தி விட்டீர்கள்
//அந்தநாளில் ஆடியதோ
ஆனந்தக் கூத்தாட்டம்!
இந்தநாளில் ஆடுவதோ
இயலாத தள்ளாட்டம்!//
ஆஹா‍! அருமை

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

கவியரங்கத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசனாரின்

// எதுகையிலே மோனையிலே என்னைப் போன்றே
எழுதுகின்ற ஆற்றலினை என்முன் கற்றார்! //

// அருணா செல்வமே! அருந்தமிழ் வெல்லமே!
திருமால் இல்லமாய் இருக்கும்உன் உள்ளமே! //

என்ற தலைமை வரிகளில் மிளிர்ந்திட்ட சொல்லாடலத் திரும்பத் திரும்ப படித்தேன். கவியரங்கத் தலைவர் சொன்னதைப் போல உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் வெல்லமாக் இனிக்கின்றன. இவற்றில்,

// அந்தநாளில் ஆடியதோ
ஆனந்தக் கூத்தாட்டம்!
இந்தநாளில் ஆடுவதோ
இயலாத தள்ளாட்டம்!
வந்துபோன நாட்களிலே
வம்பலந்த சொல்லாட்டம்
எந்தநாளில் இனிவருமோ
ஏங்கிடுதே மனஓட்டம்! //

என்ற வரிகள் நான் மிகவும் ரசித்தவை. வாழ்த்துக்கள்.
த.ம.4


Avargal Unmaigal சொன்னது…

முதலில் உங்களுக்கும் உங்களை அழைத்த கவிஞருக்கும் பாராட்டுக்கள் சுத்தமான தமிழை உங்கள் இருவரிடமும் காண்கிறேன் பெருமையும் அடைகிறேன்

Avargal Unmaigal சொன்னது…

//துள்ளியாடும் பருவத்தில் //

என்ன உங்களுக்கு துள்ளியாடும் பருவமா உண்மையாவா? சத்தியமாகவா?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அசத்தல் சகோதரி...

வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.

பாராட்டுகள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

முதுமை பற்றி சிறப்பாக கவிபாடி அசத்தி இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

கும்மாச்சி சொன்னது…

அருணா முதுமை கவிதை நன்றாக உள்ளது, ஆடிய ஆட்டம் தள்ளாடும் வயதிலும் நிற்காமல் தள்ளாட்டமாக மாறுவதே ஒரு வரம் தானே.

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

Iniya சொன்னது…

தள்ளாட்டம் பற்றிய சொல்லாட்டம் வெகு சிறப்பு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ....!

சசிகலா சொன்னது…

துள்ளிப் பாடும் பருவத்தை தேன்துளியாய் பாடிய விதம் சிறப்புங்க தோழி. வாழ்த்துக்கள்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

'பசி'பரமசிவம் சொன்னது…

தன்னை மறந்து, தான் காட்சிப்படுத்த இருக்கும் பாத்திரமாகவே மாறிவிடுவது ஒரு படைப்பாளனுக்கான முதல் தகுதி எனலாம்.

இந்தத் தகுதி உங்களுக்கு உள்ளது அருணா. அதனால்தான், உங்களால் இம்மாதிரி சிறந்த கவிதைகளைப் படைக்க முடிகிறது.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கவிதையை ரசித்துப் படித்துக் கருத்திட்டு, வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தமிழர்கள் அனைவருமே தழிழை விரும்புகிறார்கள் தான்.

ஆனால் வெறுப்பது போலவும் சிலர் நடிக்கிறார்கள் தமிழரே.

பாராட்டிற்கு மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

ஏனுங்க இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு....?

முதுமையைப் பாட இளமையே வருக!
முழுமையாய் ஆட இனிமையே தருக!

என்று கவிஞர் அழைத்ததை எழுதி இருக்கிறேனே...

தமிழரே..... துள்ளியாடும் பருவம் என்பது எந்தப் பருவத்தைக் குறிக்கும் என்பதை நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

முதுமை ஒரு வரம் தான் கும்மாச்சி அண்ணா.
ஏன் என்றால் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை.

எதையும், யாரையும் தள்ளாத மனம் வந்தாலே அவர்கள் “தள்ளாதவர்“ என்ற பெருமையை அடைகிறார்.

(உங்களின் பதில் புரியவில்லை என்பதால் ....)
நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

G.M Balasubramaniam சொன்னது…

அன்பின் அருணா செல்வம் கவியரங்கக் கவிதைக்குப் பாராட்டுக்கள். மரபு வழுவாப் பாடலில் துள்ளிப் பாடும் பருவத்தே தள்ளாடும் வயது பற்றி சொல்லாடுவது சிரமம்தான்.தளாடும் ஒருவனின் அனுபவப் பாட்டை இங்கு இரு சுட்டிகளில் தருகிறேன் படித்துப் பாருங்களேன்
gmbat1649.blogspot.in/2010/12/blog-post_05.html
gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html

வாழ்த்துக்கள்

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


தமிழ்மணம் 12

Unknown சொன்னது…

நரம்பெல்லாம் வாடிப்போய்
நாடியெல்லாம் தளர்ந்துபோய்க்
கரம்பிடித்த துணையும்போய்க்
கடந்தகால அனுபவத்தைச்
சிரம்தாங்கிச் சொல்வதனால்
சீர்க்குலைந்து போனாலும்
வரமென்று சொன்னார்கள்
வயதான முதுமையினை!

இவ் வரிகள் என்னை நினைத்துப் பாடினாயா ! மகளே! அருமை!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

சசிகலா.... “ஆடிய ஆட்டம் என்ன?“ என்பது தான் தலைப்பு.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சசிகலா.

அருணா செல்வம் சொன்னது…

உங்களின் கருத்தை ஏற்கிறேன் ஐயா.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பரமசிவம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

உங்களின் அனுபவத்தில் எழுதிய இந்த இரண்டு பதிவும் மிக அருமை ஐயா.


வயதானால் விரும்பியதை உண்ணலாம் என்ற அனுபவக் கருத்து உங்களைப் போன்றவர்களுக்கேத் தோன்றும். அருமை.
வணங்குகிறேன் ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நேரமில்லை என்றாலும் எனக்காக வந்து வாக்கிட்ட
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

புலவர் ஐயா.... உங்களுக்கு இன்னும் வயதாகவில்லை.தவறுகளைச் சுட்டிக் காட்டித்
தைரியமுடன் நீங்கள் கவிதை எழுதும் வரையில்
நீங்கள் என்றும் இளைஞர் தான்.

நன்றி புலவர் ஐயா.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதலில் தங்கள் கவிஞருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்! தமிழ் "முதுமையிலும்" கொஞ்சி இளமை ஊஞ்சலாடுகின்றது!!! சகோதரி!

இறுதி வரிகள் அருமை!! வாழ்த்துக்கள்!