வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கருணை ஒளி!! (சொந்தக் கதை)




கம்பன் கவியில் ஒளிர்ந்து மின்னுவது...
கருணை ஒளி!!

 இறை வணக்கம்!

தும்பிக்கை தூயவா! தொல்லுலகின் மூத்தவா!
நம்பிக்கை நாயகா! நாட்டினைச் – செம்மையாக்க
உம்மினை யாருளர்? ஓங்கார வேதவா
எம்மையும்நீ காப்பாய் இருந்து!

தமிழ் வணக்கம்!

கற்றோர் வணங்கிக் களிக்கும் தமிழ்த்தாயே!
உற்றார், உயர்ந்தோர், உறவினர், – சுற்றத்தார்
பற்றாய் இருந்தாலும் பாவை எனக்குள்ளே
முற்றும் இருப்பாய் முதிர்ந்து!

குரு வணக்கம்!

காதலினை ஓதி களித்துநின்றும் இவ்வுலகில்
சாதனை பெற்றவரே! சன்மார்க்க – வேதத்தைப்
போதனைச் செய்பவரே! போற்றி வணங்கினேன்!
பாதனில் உம்மைப் பதித்து!

அவை வணக்கம்!

செம்மொழின் சீரும் சிறப்பறிந்த செல்வர்களே!
எம்மொழிக்கே ஈடேது? இவ்வவையில் – கம்பனிடம்
வம்பாகப் பேசிட வந்தே வணங்கினேன்!
தெம்பைத் தருவீர் தெளிந்து!



 கம்பனில் கருணை ஒளி!!

1.
வான்பிறந்து வளமளிக்கும் மழையின் வாழ்வு
   வசந்தத்தை வரவழித்து வடிந்து போகும்!
ஊன்பிறந்தே ஓடுகின்ற மனித வாழ்வும்
   உணர்வுக்கே உடல்கொடுத்து மாண்டு போகும்!
தேன்பிறக்க உழைக்கின்ற தேனி வாழ்வு
   தீதின்றிச் சேமித்தே மடித்து போகும்!
ஏன்பிறந்தோம் என்றறியா எம்மின் வாழ்வோ
   இன்கம்பன் கவிபடிக்க உயர்ந்தே ஓங்கும்!

2.
பெருமைதரும் சொற்களினை முன்னால் சொன்னால்
   பெரும்பேறு கிடைத்ததுபோல் மகிழ்ச்சி பொங்கும்!
அருமைபெரும் சொற்களாலே செயலின் துன்பம்
   ஆழ்மனத்தின் உட்சென்று பெருமை பேசும்!
கருமைகொண்ட மனமெல்லாம் கண்கள் மூட
   கனவற்ற உறக்கத்தை மறந்தே போகும்!
கருணைகொண்ட மனத்தினைப் பெற்ற வாழ்வோ
   காதலினும் உயர்வென்னும் இராம காதை!

3.
ஒளிர்கின்ற பொருளெல்லாம் உயர்ந்த தில்லை!
   ஊர்கின்ற உயிரெல்லாம் நடப்ப தில்லை!
குளிர்கின்ற காலமெல்லாம் கொடுமை இல்லை!
   குவிந்திருக்கும் மலரெல்லாம் காய்ப்ப தில்லை!
களிப்பென்று நினைப்பதெல்லாம் நீல்வ தில்லை!
   கவிஞர்கள் காதலினை வெறுப்ப தில்லை!
துளிர்க்கின்ற மரமெல்லாம் தழைப்ப தில்லை!
   துயரங்கள் என்னாளும் தொடர்வ தில்லை!

(தொடரும்)

சொந்தக் கதை!!




நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கடந்த 14,15 தேதிகளில் பிரன்சில் நடந்த கம்பன் விழாவில் கலந்துகொண்டு கவியரங்கத்தில் நான் எழுதி வாசித்தக் கவிதை இது.
   தவிர, என் கணிணியை நிறுத்திவிட்டு திரும்ப போட்டதும் அதே பழைய அதே பிரட்சனையே வந்துவிட்டது. அது எப்படி யென்றால்.... நான் கருத்துரைகளைத் திறக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படித் திறக்கும் பொழுது கருத்துரைகளின் மேல் விளம்பரங்கள் வந்துவிடுகின்றன. அதனால் அந்தக் கருத்துக்களை என்னால் படிக்க முடிவதில்லை.
    அந்த விளம்பரங்களைத் தள்ளிவிட்டாலும் அடுத்த இரண்டு மூன்று நொடிகளிலேயே திரும்பவும் வந்துவிடுகிறது.
   அதே போல மற்றவர்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுதும் அப்படித்தான் எழுத்துக்களின் மேல் விளம்பரங்கள் வருகிறது. அதனால் மற்றவர்களின் பதிவுகளையும் என்னால் படிக்க முடியவில்லை.
   மேலும் சற்று சிரமப்பட்டு படித்தாலும் தமிழில் கருத்திடவும் முடிவதில்லை. நான் விசாரித்ததில் “உங்கள் கணிணியில் தான் ஏதோ பிரட்சனை“ என்கிறார்கள்.
   நான் அதைச் சரிசெய்யும் வரையில் மற்றவர்களின் பதிவுகளைப் படிக்க முடியவில்லையே என்ற கவலையும் உள்ளது. கூடிய விரைவில் சரிசெய்து விடுகிறேன்.

நட்புடன்
அருணா செல்வம்.

18 கருத்துகள்:

  1. போன பதிவில் சரி செய்து விட்டதாக சொன்னீர்களே... இப்போது எப்படி....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஏன் கேட்கிறீர்கள் அண்ணா...
      நல்லாத்தான் ஓடிக்கொண்டு இருந்தது. கணிணியை இரவு ஆஃப் பண்ணிவிட்டு மறுநாள் போட்டதும் திரும்பவும் அதே பிரட்சனை வந்து விட்டது.

      நீக்கு
  2. கம்பன் விழாவில் கலந்துகொண்டு கவியரங்கத்தில் நான் எழுதி வாசித்தக் கவிதை அருமை..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  3. மிகவும் அருமையாக உள்ளது தங்கள் கவி வரிகள் வாழ்த்துக்கள் தோழி !

    பதிலளிநீக்கு
  4. எனது தளத்திலும் கருத்துரையைக் கிளிக் செய்யும் போது முதலில்
    தோன்றுவது விளம்பரம் தான் .விளம்பரம் கண்ணுக்குத் தெரியும்
    முன்னரே மிக விரைவாக வலது பக்க மூலையில் உள்ள புள்ளடியைக் கிளிக் செய்து தகர்த்தி விடுவேன் .மேற் கொண்டு எனக்குத் தெரிவதில்லை .முடிந்தால் நீங்கள் இன்னொரு தடவை இவ்வாறு முயற்சித்துப் பாருங்கள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது போல் வலது மூலையில் எந்த புள்ளடியும் எனக்கு வரவில்லை தோழி.

      நீக்கு
  5. அன்பு நண்பரே,
    தாங்கள் விருப்பப் பட்டால் நான் நேரில் வந்து பார்க்கிறேன்.
    தொடர்பு கொள்ள :
    என் முகவரி karikalan90@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் எனக்கு உதவிட முன் வந்தமைக்கு
      மிக்க நன்றி நண்பரே!
      உங்களின் மின் அஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

      நீக்கு
  6. கவிதை நல்லா இருக்கு. சீக்கிரம் உங்க பிரச்சனை சரியாகிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தேவி.

      “சீக்கிரம் உங்க பிரச்சனை சரியாகிடும் “
      உங்களின் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும். நன்றி தோழி.

      நீக்கு
  7. கவிதைகள் அருமை.
    ஏதாவது Anti-spyware கொண்டு ஸ்கேன் செய்யுங்கள் .spybot destroy என்ற மென்பொருள் பயன்படுத்திப் பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீங்கள் சொன்னது போல் முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி.

      நீக்கு
  8. கவிதை அருமை...ஒருசில எழுத்துப்பிழைகள் உள்ளன..சரிசெய்யவும்..

    பதிலளிநீக்கு
  9. கவிதை அருமை..ஒருசில எழுத்துப்பிழைகள் உள்ளன.சரிசெய்யவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      தவறுகளைத் திருத்திவிடுகிறேன். நன்றி.

      நீக்கு
  10. அடடா... அற்புதமான அழகிய கவிவரிகள்!

    இன்று உங்கள் இதன் தொடரினைக்கண்டவுடன்தான் எங்கே முதலாவது என்று தேடிவந்தேன்..

    தாமதத்திற்கு வருந்துகிறேன்..

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  11. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
    மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு