வியாழன், 11 ஏப்ரல், 2013

கறுப்புத் துணியைக் கழற்றிஎறி!




வாய்மை வெல்லும் எனச்சொல்லி
    வழக்கு மன்ற நடுவினிலே
தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில்
    தராசைக் கையில் கொடுத்துவிட்டு
தூய்மை நீதி தேவதையாய்த்
   துணிவாய் உன்னை நிற்கவைத்தார்!
வாய்யைத் திறக்க வழியில்லை
   வாய்..மெய் பேசும் நிலையில்லை!!
  
பெண்மை என்றும் மென்மையென
    பெருமை பேசி சிலைவடித்தே
வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே
    வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்!
உண்மை, நன்மை, தீமைகளை
    உணர்ந்து பயந்தி டுவாயென்று
கண்ணைக் கறுப்புத் துணியிட்டு
    கட்டி நடுவாய் நிற்கவைத்தார்!

குருடன் கண்ட யானைபோலே
    குறுக்குப் பேச்சைக் கேட்டுநின்றாய்!
உருவில் உணர்த்தும் உண்மைகளை
    ஒளித்து வைக்க முடியாது!
திருட்டுப் பார்வை காட்டிவிடும்!
    தீர்ப்பைச் சரியாய்ச் சொல்வதற்குக்
கருட பார்வை வேண்டுமென்றால்
    கண்ணைத் திறந்து நாலும்பார்!

பெண்ணே! உன்கண் கட்டியதால்
    பேச்சை மட்டும் கேட்டுநின்றாய்!
மண்ணை இழந்து கலங்குபவர்
    மானம் இழந்த பேதையர்கள்
உண்மை மறைத்து நடிப்பவர்கள்
   உன்றன் கண்ணால் அறிந்திடவே
கண்ணைக் கட்டி வைத்திருக்கும்
   கறுப்புத் துணியைக் கழற்றிஎறி!!

அருணா செல்வம்.
11.04.2013


31 கருத்துகள்:

  1. /// உன்றன் கண்ணால் அறிந்திடவே ///

    அருமை... இன்றைக்கு மிகவும் தேவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  2. வாய்யைத் திறக்க வழியில்லை
    வாய்..மெய் பேசும் நிலையில்லை!!//அதனால் கருப்புத்துணியை கழற்றியெறி என்பது உண்மைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  3. அவள் கருப்பு துணியை கழற்றி எரிந்தால் அவள் கண்கள் கண்ணகி மதுரையை எரித்தது போல அங்கு இருக்கும் நீதிபதியை எரித்துவிடுவாள் அதனால்தான் அவள் கண்ணை கட்டி வைத்திருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது தான் உண்மை
      என்றே நினைக்கத் தோன்றுகிறது “உண்மைகள்“

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. உண்மை மறந்து நடிப்பவர்களை, ஏமாற்றுப் பேர்வழிகளை அவள் கண்களைத் திறந்து எரிக்கட்டும்! மகிழ்ச்சிதான்! அருமையான கவிதை படைத்திருக்கிறீர்கள்! நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  5. சரியாகச் சொன்னீர்கள்.... நீதி தேவதை கண்ணைக் கட்டி சுலபமாய் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  6. வியக்கத்தக்க சித்தனை. அருமை!
    கவிதை சொற்கள் அமைப்பு மிகஅழகு. ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    நயனமொழிசேர்த்து ஞாயத்தைக்கூறு என்று
    கயல்கண்ணைக் கட்டிய கறுப்பினைப் பறித்தே
    வியன்மிகு கருத்தை விளம்பிய கவியால்
    உயர்வாகும் ஓங்கும் உன்புகழ் வாழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி.
      உங்களின் தொடர் ஊக்குவிப்பு எனக்கு மேலும் மேலும் எழுத துாண்டுகிறது.
      தற்போது அதிக வேலை கரணமாக சில நாட்கள் சரியாக வரமுடியவில்லை. நிறைய பேர்களின் இடுகைகளையும் படிக்க முடியவில்லை. (அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்)
      இருப்பினும் தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. நீதி தேவதையின் மயக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  8. இரண்டு கையிலும் துலாக்கோலையும் வாளையும் கொடுத்து நிற்கவைத்துவிட்டார்களே...அவளாய் எங்கே கண்கட்டை கழற்றி எறிவது? இன்னொன்று கவனித்தீர்களா? கண்ணைக் கட்டிய கறுப்புத்துணி காதையும் மறைத்திருக்கிறது. இந்நிலையில் வழக்குகளை எப்படிக் கேட்டிருக்க முடியும்?

    தர்மதேவதையிடம் இடப்பட்ட விண்ணப்பமும் கூட அவள் செவியை எட்டுமா என்பது சந்தேகமே என்றாலும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்று பாடிய கவிதைக்குப் பாராட்டுகள் அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி அக்கா!

      நீங்கள் சொல்வதும் உண்மைதான்!
      நீங்கள் சொன்ன கோணத்தில் பார்க்கவில்லை!
      ஊதுகிற சங்கைத் தொடா்ந்து ஊதுவோம்
      தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  9. அருமை அருமை
    புதிய பார்வை
    புதுமையான விண்ணப்பம்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  10. நல்ல சிந்தனை, நல்ல பதிவு, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு

  11. பெண்மை என்றும் மென்மையென
    பெருமை பேசி சிலைவடித்தே
    வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே
    வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்!
    உண்மை, நன்மை, தீமைகளை
    உணர்ந்து பயந்தி டுவாயென்று
    கண்ணைக் கறுப்புத் துணியிட்டு
    கட்டி நடுவாய் நிற்கவைத்தார்!
    _______________________________________
    அருணா! இனி வருவது என் கவிதை...!

    பெண்மை பெண்மை என்று பழம்
    பெருமை பேசியே பெண்ணின் பெண்மை
    ஆண் துணை இழந்து அல்லாடும்போது
    ஆணாதிக்க ஆண்குலம் பெண்ணின் பெண்மைக்கு
    பெருமையுடன் புதுத் துணை சேர்க்காமல்
    வெண்மை நிறத்தில் உடை கொடுத்து
    நடமாடும் சிலையாய் பெண்ணின் பெண்மையை
    பெண்ணின் மென்மனதில் சிதைத்து விட்டனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பளகி.

      ஆமாம்... நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?
      ஏதோ அந்த நீதி தேவதை “பொம்மை“யாக உள்ளது.
      உண்மையான கண்ணகி கதை தெரியுமில்லை...?

      சும்மா... இந்த மாதிரி பெண்களைக் குறைச்சி மதிப்பிடாதீர்கள் நம்பள்கி.

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  12. கோபம் கலந்த சாட்டையடி..ஞாயமானது அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி அகல்.

      நீக்கு
  13. கடைசியில வச்ச பஞ்ச் கவிஞர்களுக்குரிய அழகான ஆவேசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மால “பஞ்ச்” வச்சி கவிதை மட்டுமாவது எழுத
      முடிகிறதே... என்பதை ஆழ்ந்த கவலையுடன்
      சொல்லிக் கொள்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  14. உலகத்தை பெற்றெடுத்த தாய் வாய்மை

    பொய்மையை வளர்த்து வரும் மனிதரை கண்டு

    நாளும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றாள்

    கண்களின் கருப்பு துணி அவள் கண்ணீரை துடைக்கின்றது
    கட்டவிழ்த்துவிட சொல்லாதீர்கள் *

    -அன்பு தம்பி
    லிங்கம் மாமல்லன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மல்லன் அண்ணா...

      அவள், அவளின் கண்ணீரை மட்டுமாவது
      துடைத்துக் கொள்ளட்டும்.

      தங்களின் வருகைக்கும் நல்ல கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு