புதன், 6 மார்ச், 2013

முதிர் கன்னியின் கனவு !!




காலை எழுந்ததும்
கண்ட கனவெல்லாம்
நெஞ்சத்தை நெருடி
நினைவில் வர...

மாலை வந்தால்
மறுபடியும் வாட்டுமோ...
மயங்கி இருக்கும் பொழுதே
வளர்ந்து விட்டதே பொழுது!

மன்மத அம்புகள்
மலர்களா?
முட்களா?
குத்துகிறதே...

தென்றலின் தன்மை
கொடுமையா?
குளிர்ச்சியா?
பட்டதும் சுடுகிறதே..

கண்களில் தெரிவது
மெய்யா? பொய்யா?
கண்டதெல்லாம்
கனவுலகின் முகமாக...

கற்றவர்கள் பொய்
உரைத்தனரோ...
புரியாத உலகத்தில்
புதுமைகள் நடக்கிறதோ...

புரிந்து கொள்ள
என்ன தான் செய்வது?
புரியும் படி
எப்படிச் சொல்வது?

தூங்காத கண்கள்
துடிப்புடன் இருந்தாலும்
காண்பது எல்லாம்
பொய்யென்று போனாலும்...

கண்ட சுகமெல்லாம்
கண்முன் நின்றாடி
கருத்தில் புகுந்து
கலக்கம் செய்தாலும்...

மனமே... காத்திரு!!

இரவு வரும்!
இரவின் மயக்கத்தில்
கனவு வரும்!
கனவிலாவது அவனைக்
கட்டி அணைக்கலாம்!


அருணா செல்வம்.

37 கருத்துகள்:

  1. //இரவு வரும்!
    இரவின் மயக்கத்தில்
    கனவு வரும்!
    கனவிலாவது அவனைக்
    கட்டி அணைக்கலாம்!//

    முதிர் கன்னியின் ஏக்கம் பளிச்சிடுகிறது இவ்வரிகளில் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பிரேம்.

      நீக்கு
  2. அருணா!

    மனமே... காத்திரு!!

    இரவு வரும்!
    இரவின் மயக்கத்தில்
    கனவு வரும்!
    கனவிலாவது அவனைக்
    கட்டி அணைக்கலாம்!
    --
    இதைப் படிக்க மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இதற்க்கு காரணம் ஆணாதிக்கம், ,போலி கவுரவம், கலாச்சாரம்..இத்யாதி.

    யார் தயவு இல்லாமல், ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் காதலை சொல்லும் போது, ஒரு பெண் ஏன் ஒரு ஆணிடம் காதலை சொல்லக்கூடாது? அப்படி சொல்லும் நாள் தான் உண்மையான மகளிர் தினம்...!

    சொன்னால் காலச்சாரம் கெட்டுப்போச்சு! பொம்பளை சிரிச்சா போச்சு என்ற பழமொழி!

    முதிர் கன்னி! அது என்ன முதிர்? எந்த வயதில் வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளளம்; வயது தடையில்லை; மனது தான் தடை; தேவை ஒரு ஆண்மகன் அவ்வளவே! கிடைப்பானா இந்தியாவில்? இங்கு கிடைப்பான்...

    கன்னி சரியான பதம் அல்ல; பெண் என்பதே சரி!
    ________________

    என் சிறிய கவிதை:


    மனமே...காத்திருக்காதே!

    வாழ்கை கிடைப்பது
    ஒரு முறை
    வாழ்க்கை வாழ்வதற்க்கே
    கனவு காண்பதற்கல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு

  3. மொட்டுகளும் மூகைகளும்
    பட்டுநடை பயின்றிருக்க
    சிட்டாக பறக்க மனம்
    காட்டாறாய் பாய்கிறதே
    ஒட்டாதே எனச்சொல்லி
    குட்டு ஒன்றை வைத்துவிட்டு
    நட்டாற்றின் நடுவினிலே
    விட்டுவிட்டு சென்றனரே...

    உணர்வால் தவித்து ..
    உணர்ச்சிப் பெருக்கால் தவிக்கும் முதிர்கன்னியின்
    உணர்வுகளை அழகாக சொல்லி இருக்கீங்க
    சகோதரி...

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை, அருணா வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  5. ஏக்கமே என்றும்
    தூக்கத்தைக் கெடுக்கும்
    துன்பமே மிகும்
    தாக்கம்தான் முதிர்கன்னிக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஆமாம்....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. யப்பா.. முதிர்கன்னியாகவே மாறி யோசித்து என்னமாய் எழுதியிருக்கீங்க அருணா. வரிக்கு வரி பளீர் என மின்னுகிறது! முத்தாய்ப்பான கடைசிப் பாரா ‘நச்!’ சபாஷ்யா அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “சபாஷ்யா அருணா!“ ஹா...ஹா...ஹா..

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  10. ஏக்கதின் சாயலை நன்றாக சொல்லீருக்கீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  11. முதிர் கன்னியின் ஏக்கம் மனதைத் தொடுகிறது.
    என்று தான் கணவு நனவாவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி.

      மேலே நம்பள்கி ஒரு பதில் அளித்து இருக்கிறார்.
      அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா என்று தெரியவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ராஜலட்சுமி அம்மா.

      நீக்கு
  12. கடைசி வரிகள் கலக்கல்! அருமையான கவிதை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  13. கடைசி பத்தி அவளின் உள்ள கிடக்கை உணர்த்தியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  14. அருமையான உணர்ச்சி நிறைந்த கவி. வாழ்த்துக்கள் தோழி!

    தூக்கத்தில் கனவுகண்டு தன்னேக்கம் தீர்க்கும் முதிர்கன்னியென்று
    பாக்கள் அருமையாய் படைத்தனையே தோழி அவர்களின் மன
    நோக்கள் உலகறிமோ தூயஅன்புங்கருணையும் நற்பண்புமிக்கோரை
    தாக்குகின்றனரே சொல்லம்புகளால் சரியோவெனசொல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி.

      “சரியோவெனசொல்... “

      நீங்கள் கேட்டதின் பதில் தான் இன்றைய எனது பதிவு.


      நரியின் குணத்தைக் கொண்டோரே
      நயமாய் உலகில் வாழ்ந்திடுவார்!
      சிரித்தால் பெண்மை கெடுமென்று
      சிலைபோல் பெண்ணை மூடிடுவார்!
      கரியின் நிறத்தின் மனம்கொண்டே
      கருத்தாய்ப் பேசி மடக்குமவர்
      உரிமை என்றே வாழ்வதைநாம்
      சரிதான் என்றே சொல்லுவதா..?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.


      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  16. மற்றவர்கள் கவிதையை ரசித்து பின்னூட்டம் இடும் போது, நான் எனது ஆதங்கத்தை, பெண்ணிற்கு நமது நாட்டில் ஏற்படும் சோகங்களை, மையப்படுத்தி 'உங்களது தளத்தில்' பின்னூட்டமாக, இட்டது சரியில்லை என்று தோன்றுகிறது. அந்த தவறுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.
    ________________________________________

    உங்கள் கவிதைக்கு வருவோம். என்னை மிக மிக பாதித்த முதல் நாலு வரிகள்!

    காலை எழுந்ததும்
    கண்ட கனவெல்லாம்
    நெஞ்சத்தை நெருடி
    நினைவில் வர...

    இரவிலாவது, கனவில் சுகம் கண்ட பெண், பகலில் அத்தனையும் பொய் என்று அறியும் போது வரும் சோகம்; மேலும் அந்த சோகம் இரவு வரை நீடிக்கும் என்பது...
    ...தாகத்தினால் பாலைவனத்தில் தண்ணீரை தேடும் மனிதன், அது கானல் நீர் என்று அறியும் போது ஏற்படும் துன்பத்திற்கு ஒப்பானது...
    உங்கள் கவிதையின் முதல் நான்கு வரிகள்! பிரமாதம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நிச்சயம் மற்றவர்களுக்கும் புரிந்திருக்கும்.

      என்ன.. இந்தியாவில் வாழ்பவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கலாட்சார வேலியை மனத்திற்குள் தளர்த்தி இருந்தாலும் அதை வெளியில் காட்ட பயப்படுகிறார்கள்.

      நீங்கள் அமேரிக்க வாசி. நீங்கள் உங்களின் சிந்தனையைத் தைரியமாக வெளியிட்டதில் தவறே இல்லை.
      நானும் பிரான்சில் வாழ்பவள்.

      நீங்கள் சொன்ன கவிதை

      “மனமே...காத்திருக்காதே!
      வாழ்கை கிடைப்பது
      ஒரு முறை
      வாழ்க்கை வாழ்வதற்க்கே
      கனவு காண்பதற்கல்ல!“

      மனத்தில் நிற்கிறது. தைக்கிறது.

      ஆனால் “பண்பாடு“ என்ற கட்டுப்பாடு குறைந்துவிட்டால்
      பாரதத்திற்கு மதிப்பே இல்லாமல் போய் விடும்.

      அடுத்தது நான் எழுதுவதை எல்லாம் “சரி“ என்று தான்
      எடுத்தக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
      மாற்று கருத்து மற்றவர்களின் உணர்களை எனக்குப் புரிய வைக்கும்.

      தவிர தொடர்ந்து வருகை தந்து
      என் ஆக்கங்களுக்கு
      ஊக்கமளிக்க வேண்டி...
      நட்புடன் நன்றி கூறுகிறேன்.





      நீக்கு
  17. ஒரு முதிர்கன்னியின்மனத்தைப் படம் பிடிக்கும் கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  18. முதிர் கன்னியின் உணர்வுகளை முத்தான கவிதையினால்
    சித்தரித்துள்ளீர்கள் அருமை வாழ்த்துக்கள் இன்பக் கவிதையும்
    இனிதே தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துன்ப நிகழ்வுகளைத்
      துாசி தட்டிவிட்டு
      இன்பக் கவிதையும்
      இனிதே தொடருகிறேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  19. நான் அறிந்த திருமணம் ஆகாத சில பெண்கள் நினைவில் வந்து போனார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி அம்மா.

      நீக்கு