தலைமுறைகள் பற்பலவும் கடந்தா யிற்று!
தன்னிசையாய் முடிவெடுக்கும் உரிமை
இல்லை!
சிலமுறைகள் கொஞ்சமேனும் மாறி வந்தும்
சிலர்மட்டும் பெறமுடிந்த அளவே
உண்டு!
பலமுறைகள் முயன்றுபார்த்தும் தோல்வி கண்டே
பழங்கால பாழ்ங்கிணற்றில் நீந்து
கின்றோம்!
அலைமுறையில் வந்துபோகும் உரிமை யைநாம்
அடக்கிவைத்தல் என்பதுதான் புதுமை
அன்றோ!
போராட்டம் என்பதுதான் வாழ்க்கை என்றால்
புதுமுறையில் போராடி வெற்றி
காண்போம்!
சீரோடும் சிறப்போடும் வாழ்வ தற்கு
சிரிப்பொன்றை ஆயுதமாய் முகத்தில்
கொள்வோம்!
நீரோடும் இடத்தில்வேர் ஓடும்! அன்பு
நீங்காத இடத்தினிலே பகைமை ஓடும்!
கூரான வாள்கொண்டால் பயனோ இல்லை!
குளிர்தமிழில் இவ்வாராய்ச் சொல்தல்
நன்றே!
இதுதானே பண்பாடு என்று நம்பி
இருந்திருந்தே பெண்களெல்லாம் அடிமை
யானார்!
அதுவல்ல பெண்ணினத்தில் உரிமை காக்க
ஆண்களிதைக் கையாண்டே அடக்கி
விட்டார்!
முதுகவிகள் மூதாதை சொன்ன தெல்லாம்
முதல்தெய்வம் என்றுபெண்ணை நினைத்த
தாலே!
மதுகவியில் சொன்னதெல்லாம் உண்மை! உண்மை!
மாறிவிட்ட நிலையிலது நன்மை இல்லை!
கற்களிலே உள்ளிருக்கும் சிலையைப் பார்க்கக்
காலமெல்லாம் காத்திருக்கும் மூடன்
போல
முற்களின்மேல் வாழ்க்கையென்றே கவலைப் பட்டு
முயற்சியின்றிப் பயந்துநின்றே
வீணாய்ப் போனோம்!
சொற்களிலே அன்புபூச மயங்கும்
வார்த்தை!
சூடேற்றி அச்சொல்லை உரக்கக் கூறு!
தற்காலப் பெண்ணென்போர் தாழ்வாய் இல்லை
தரணிபோற்ற பிறந்ததைநீ சொல்வாய்ப் பெண்ணே!
பெண்ணென்றால் பூப்போன்ற உள்ளம் என்று
பொதுப்படையாய் பெரியோர்கள் சொல்லி
வைத்தார்!
மண்ணென்ற பூமிதனில் பிறந்த பூவோ
மல்லிகையாய்ப் பிறந்துவிட்டால் ஒருநாள் வாழ்வே!
உண்ணென்று உவந்தளிக்கும் கனிகள் எல்லாம்
ஒருபூவில் பூத்துவந்த உயர்வைக்
கண்டால்
கண்காணும் அழகையவர் சொல்ல வில்லை!
கனிக்குள்ளே விதைக்கண்ட கருவைச் சொன்னார்!
சூழ்ச்சிகளில் நமைவீழ்த்தும் சதியை எல்லாம்
சுயமாகச் சிந்தித்தே அதனை வெல்வோம்!
வீழ்ச்சிஎன வீழ்ந்தாலும் அருவி நீராய்
வீறுகொண்டே எழுந்தோடி நன்மை செய்வோம்!
தாழ்த்திநம்மை பேசுகின்ற கயவர் கண்டால்
தடைகள்ளாய் அதைநினைத்துத் தாண்டிச்
செல்வோம்!
ஆழ்த்துகின்ற மனக்கவலை யாருக் கில்லை?
அதைக்கூட அடிமையாக்கி புதுமைக்
காண்போம்!
புதிதாகப் பூப்பதுதான் புதுமை என்றும்
பொதுப்படையாய் யார்சொல்லும் நம்பி
டாதே!
உதித்தெழுந்த சூரியனும் உதிப்பான் மீண்டும்!
உனக்குள்ளே இருப்பவனோ உறங்கு
கின்றான்!
மதிதிறந்து அவனைநீ விழிக்கச் செய்தால்
மனப்பேயின் பயமெல்லாம் ஓடிப்
போகும்!
பொதியல்ல நாம்வாழும் வாழ்க்கை! பெண்ணே
புதியாகச் சிந்தித்தால் போதும் கண்ணே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக