வியாழன், 24 மார்ச், 2016

வண்ண மீன்கள்!!



கண்ணைக் கவரும் தொட்டிக்குள்
   கருத்தைக் கவரும் வண்ணமீன்கள்!
பொன்னை நிகர்த்த பளபளப்பு
   பூவில் இருக்கும் நிறக்கலப்பு!
மண்ணை மறந்து நான்பார்த்தேன்
   மருண்ட மீனோ எனைப்பார்க்க
என்னை எழுத தூண்டியதே
   என்னில் இருந்த எண்ணமீன்கள்!

காலம் சுற்றும் வலைதன்னில்
   கவலை கயிறு மனமிறுக்க
ஓலம் இடவோ முடியாமல்
   ஓய்ந்தோ அமரக் கூடாமல்
மூலம் ஏதென்(று) அறியாமல்
   மௌனம் மட்டும் மொழியென்றே
ஞாலம் தன்னில் வாழ்கின்ற
   நங்கை நிலையில் அதைக்கண்டேன்!

அன்பு மொழியில் தேனுற்றி
   ஆசை வார்த்தை பலபேசி
கன்னம் சிவக்கும் பெண்ணிடத்தில்
   காதல் விதையை விதைத்திடுவார்!
இன்பம் எதுவோ அதுமுடிய
   இவளோ இனியேன்? சென்றுவிட
மின்னும் கண்ணீர் தண்ணீரில்
   மீறி தெரியா நிலைக்கண்டேன்!

கள்ளம் கொண்ட காளையரோ
   கவலை யின்றிப் பிறபெண்ணைத்
தெள்ளத் தெளிந்த மொழிபேசி
    தின்று முடிக்கக் காத்திருப்பான்!
உள்ளம் திறந்து கேட்டாலோ
    உனக்கேன் பொறாமை எனக்கேட்பான்!
பள்ளம் தன்னில் விழுந்ததினால்
   பாவம் மீன்போல் பெண்வாழ்வாள்!

கண்கள் போன்ற மீன்களெல்லாம்
   கவிதை களாகத் தெரிகிறது!
பெண்ணின் உள்ளே பலகவிதை
   பின்னப் படாமல் இருக்கிறது!
விண்ணின் அளவு கற்பனைகள்
    வெளியில் கொட்டத் துடிக்கிறது!
வண்ண மீன்கள் சிறையிருக்க
   எண்ண மீன்கள் முடிக்கிறது!!


அருணா செல்வம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக