வெள்ளி, 4 மார்ச், 2016

இறைவன், அவன் எங்குள்ளான்?இறைவனவன் எங்குள்ளான் என்று தேடி
    இவ்வுலகில் கோவிலெல்லாம் சுற்றிப் போவார்!
மறைபொருளைக் கற்றவரும் அவனைத் தேடி
    மனமிறுக்கி உடல்வருத்தித் தவங்கள் செய்வார்!
குறைமனத்தைக் கொண்டவரும் வெளியில் பண்பாய்க்
    கும்பிட்டு வெளிவேசம் காட்டி நிற்பார்!
நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்தி ருக்கும்
    நிலையான தெய்வத்தை அறிதல் என்றோ!

யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
    எம்மதத்தில் உள்ளதென்று அறிய வேண்டாம்!
ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
    உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
பேரிடராய்ச் சுயநலமே இருக்கக் காண்பார்!
    பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்
காரிடத்தில் மறைந்திருக்கும் மழையைப் போல
    கருணையெனும் கடவுளையே தம்முள் காண்பார்!

அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
    அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன
பெருமையெனும் செயலெல்லாம் நிலத்தில் செய்ய
    பேறென்னும் பெருவருளை இறப்பில் நோக்க
ஒருமையெனும் இறைஉணர்வைத் தன்னுள் ஏற்றி
    உலகமெனும் உயிர்க்கெல்லாம் ஒளியைக் காட்டி
கருமையெனும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
    கருணையெனும் இறைதோன்றும் அவனுக் குள்ளே!!


அருணா செல்வம் 
04.03.2016

கருத்துகள் இல்லை: