Tuesday, 22 April 2014

தண்ணி அடிக்க வா புள்ள!!

    “மாப்பள... என்னமோ பேசனுன்னு அவசரமா வரச்சொன்னீங்களாம்... என்ன விசயம்....?“ சோமு மெதுவாக விசயத்திற்கு வந்தான்.
    இந்த நேரத்திற்காகவே காத்திருந்தது போல சுரேந்தர் தொடங்கினான்.  
   “உங்க தங்கச்சி செய்யறது சரியில்ல மாமா. சாய்ந்தரம் ஆனதும் அந்த கன்னியம்மா கிழவி வந்திடுது. கெழவிக்கு காலையில அடிச்சது பத்தாதுன்னு சாய்ந்தரம் வேற வந்து இவளைக் கூப்பிடும். இவளும் உடனே போயிடுறா. கிழவி கையிலேயே நொறுக்கு தீனி வேற கொண்டுவந்திடுது. இவங்க கூட இன்னும் ரெண்டு மூனு பொம்பளைங்க. எல்லாம் சேர்ந்து பண்ணையார் வீட்டு தோட்டத்துக்கும் போயி தண்ணி அடிச்சிட்டு வருதுங்க.“
   சுரேந்தர் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்க்க... அவன்,
   “இவளுக்கோ லோ பிரசர். வரும் போதே தள்ளாடிக்கினே வந்து எனக்கு தலைய சுத்துதுன்னு படுத்திடுறா. புருஷன் புள்ளைங்களுக்கு சோறு போட முடியல. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்திட்டேன். கேக்கற மாதிரி தெரியலை. நீங்களாவது நல்லதா நாலு புத்திமதி சொல்லிட்டு போவீங்ன்னு தான் உங்கள வரச்சொன்னேன்.“ என்று சொல்லிக்கொண்டே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியில் கிளம்பி விட்டான் சோமு.
   சுரேந்தர் அதிர்ச்சி மாறாமல் அமர்ந்திருந்தான். தன் தங்கையா அப்படி.... அவனால் நம்பவே முடியவில்லை. சற்று நேரம் யோசித்தான். இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. கேட்டு புத்திமதி சொல்லனும் என்று நினைத்து எழும்போதே கன்னியம்மாள் என்ற அந்தக் கிழவி வீட்டு வாசப்படிக்கு வந்து நின்று “கோமதி...“ என்று அழைத்தாள்.
   அவசரமாக வெளியில் வந்த கோமதி, “ஆத்தா... இன்னைக்கி நா வரலை. அண்ணன் வந்திருக்கு. பக்கத்துல யாரையாவது கூட்டிக்கினு போ.“ கிசுகிசுப்பாகச் சொன்னாள் கோமதி.
   “எவளும் வரலையாம். நீ சித்த வந்துட்டு போ. எனக்கு இப்பவே கை எப்புடி நடுங்குது பாருபுள்ள...“ கெஞ்சளாகக் கேட்டாள் கிழவி.
   “சரி வா. இன்னைக்கி ஒரு தபா போதும். என்னால அதுக்கு மேல முடியாது. சொல்லிபுட்டேன்.“
   “ரொம்ப தான் காட்டிக்கிற. ஒன்னோட வயசுல நா எத்தன ரவுண்டு அடிப்பேன் தெரியுமா....? என்னமோ பெரிசா காட்டிக்கிறியே....“ கோமதி முறைக்கவும்... “சரி சரி ஒரு தபா போதும். வா. அங்க போனா வேற யாராவது கெடைக்காமலா போவாங்க....“ என்று சொல்லிக் கொண்டே கிழவி முன்னே நடக்க கோமதி பின்தொடர்ந்தாள்.

   இதையெல்லாம் மறைவில் கேட்டுக்கொண்டிருந்த சுரேந்தருக்குக் கோபம் உச்சத்தில் ஏறியது. நேராகப் பண்ணையார் வீட்டுத் தோட்டத்தை நோக்கி நடந்தான்.  

   தோட்டத்தில்...
   “தோ பாரு ஆத்தா.... என்னால இனிமே சாய்ந்தரத்துல வரமுடியாது. காலையிலேயே ரெண்டு ரவுண்டு வேனா கூட வர்றேன். இதனால வீட்டுல எப்பப்பாரு சண்டதான் வருது.“ என்றாள் கோமதி.
    “இந்த கெழவனுக்கு கைகால் விழலைன்னா அந்தாளே எவ்வளவு தண்ணிய வேணும்ன்னாலும் அடிச்சி கொண்டாந்துடும். இப்போ முடியலை. வூட்டுல இருகறதே ரெண்டு கொடம் தான். காலையில கொண்டுவர்ற அந்த ரெண்டு கொடம் தண்ணீ சாய்ந்தரத்துக்குள்ள காலியாயிடுது. அப்பால ராவிக்கி.... அதுக்குத் தான்புள்ள உன்ன இந்த கெஞ்சி கெஞ்ச வேண்டி இருக்குது. இந்தா புள்ள கடலை. சாப்பிடு. நீயும் எனக்காக எம்புட்டு தான் உழைப்பே...“ கிழவி முந்தானையில் முடிந்திருந்த கடலையை எடுத்துக் கோமதியிடம் நீட்டினாள்.
   பண்ணையார் வீட்டு அடிக்கிற பம்பில் தண்ணியை அடித்து முடித்த கோமதி கிழவி கொடுத்த கடலையை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் நிரம்பிய குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ளவும்... சுரேந்தர் அவளெதிரில் போய் நின்றான்.
   “எண்ணன்னா இங்க....“ கோமதி ஆச்சர்யமாகக் கேட்க, சுரேந்தர் தன் தங்கையைப் பெருமையாய்ப் பார்த்தபடி, தன் பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தான்.
   “கோமதி... இந்த பணத்தல ரெண்டு பிளாஸ்டிக் கொடம் வாங்கி அவங்ககிட்ட குடு. நீயே இன்னும் ரெண்டு ரவுண்டு போயி காலையிலேயே தண்ணி ரொப்பி குடுத்திடு. நல்லது செய்யக்கூட நேரங்காலம் இருக்குதும்மா. நா கிளம்புறேன். மாப்பிளையிடம் சொல்லிடு“ சொல்லிக்கொண்டே நிம்மதியாய் நடந்தான் சுரேந்தர். 
  


அருணா செல்வம்
23.04.2014