சனி, 26 ஏப்ரல், 2014

காவியத் தாயின் இளையமகன்!!





படித்தவனும் வியக்கின்றான்! படிப்பே அற்ற
   பாமரனும் வியக்கின்றான்! பணத்திற் காக
நடித்தவனும் வியக்கின்றான்! பணமே இன்றி
   நலிந்தவனும் வியக்கின்றான்! நிமிர்ந்து நில்லாக்
குடித்தவனும் வியக்கின்றான்! குடும்பப் பெண்ணாய்க்
   குனிந்தவளும் வியக்கின்றாள்! தமிழில் பாக்கள்
வடிப்பவனும் வியக்கின்றான்! இவன்எ ழுத்தை
   வளர்உலகைப் படைத்தவனும் வியக்கின் றானோ!!

கல்லுக்குள் தேரைபோன்று கவிதைக் குள்ளே
   கருத்தாழ உயிரைவைத்தான்! காதல் பொங்கும்
இல்லுக்குள் இனிமைபோன்றே உயிருக் குள்ளே
   இன்னிசையாய் உருகவைத்தான்! தமிழில் உள்ள
சொல்லுக்குள் சுவைபோல நினைத்துப் பார்க்கச்
   சொக்குகின்ற நிலைவைத்தான்! நிலைத்தி ருக்கும்
நல்லுலகம் உள்ளவரை அவனின் பாக்கள்
   நாளெல்லாம் புகழ்பெற்று வளர்ந்தே ஓங்கும்!

கண்ணனுக்குத் தாசனானான்! கவிதைத் தாயின்
   கனிநெஞ்சில் இளையனானான்! இசையின் மன்னன்
பண்ணுக்குப் பொருளானான்! டி.எம். எஸ்சின்
   பாட்டிற்குக் குரலானான்! வினியோ கர்தம்
எண்ணத்தில் பணமானான்! காதல் செய்யும்
   இளையவர்க்கோ இதயமானான்! கவிகள் நெஞ்சில்
வண்ணமிடும் பாவலனின் புகழைச் சொல்ல
   வார்த்தையினைத் தேடுகிறேன் தமிழில் நானே!


அருணா செல்வம்
11.04.2014

(இன்று பிரான்ஸ் கண்ணதாசன் கழக விழாவிற்காக எழுதிய பாடல்.)

18 கருத்துகள்:

  1. வணக்கம்
    அவர் எப்போதும் கவிதையோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. வணக்கம்!

    தமிழ்மணம் 2

    உயா்கண்ண தாசனை ஓதும் கவிதை
    வயல்வண்ணம் காட்டும் வாிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  3. அருமை. கண்ணதாசனை மறக்க முடியுமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியாதுதாங்க.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  4. ///நல்லுலகம் உள்ளவரை அவனின் பாக்கள்
    நாளெல்லாம் புகழ்பெற்று வளர்ந்தே ஓங்கும்!///
    உண்மை சகோதரியாரே
    கண்ணதாசன் நிரந்தரமானவர், எந்தநிலையிலும் மரணமில்லை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. /// நல்லுலகம் உள்ளவரை அவனின் பாக்கள்...
    நாளெல்லாம் புகழ்பெற்று வளர்ந்தே ஓங்கும்! ///

    உண்மை சகோதரி...

    பதிலளிநீக்கு
  6. கண்ணதாசனை நினைவுகூர்ந்த கவிதை அருமை அருணா. தொடரட்டும் உங்கள் பணி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  8. ஒவ்வொரு வரியும் உயிர்துடிப்புள்ள வரிகள்! அருமை! அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  9. ஒரு கவிதையேனும் இப்படி
    எழுதவேண்டும் எனும் உத்வேகம்
    தந்து போகும் அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. கண்ணதாசனின் கவிதைப்போலவே இதுவும் மிக அருமை.

    பதிலளிநீக்கு