வியாழன், 10 ஏப்ரல், 2014

இது யாருடைய தவறு? (அனுபவம்)






 இரண்டு மாதங்களுக்கு முன் என் தோழி, இந்தியாவிலிருந்து வந்திருந்த தன் அம்மாவை டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள். அவரை சோதித்த டாக்டர், இரத்தப் பரிசோதனை தாளைப் பார்த்து விட்டு அவருக்கு கொழுப்பும், சர்க்கரையும் குறைவான தைராய்டும் இருப்பதாகச் சொல்லி மருந்து எழுதி தந்தும் இருக்கிறார்.
    அந்த அம்மா நம் ஊரிலேயே கொழுப்பிற்கும் தைராய்டுக்கும் மருந்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறார். இங்கேயும் அதே மருந்தைத் தான் டாக்டர் மூன்று மாதத்திற்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதனால் அந்த அம்மா தொடர்ந்து அந்த மருந்துகளைச் சாப்பிட்டும் இருக்கிறார். இதன் நடுவில் கொழுப்பைக் குறைக்க உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சி என்று ஏதேதோ செய்தும் இருக்கிறார்.
   இப்படியே இருக்க...
   போன மாதம் ஒரு நாள் என்தோழி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “அருணா... அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை. டாக்டரிடம் அப்பாய்மெண்ட் வாங்கிவிட்டேன். ஆனால் அதே நேரத்தில் எனக்கு வேலை. நான் வேலைக்குப் போயே ஆகவேண்டும். அதனால நீ அவங்களை அழைத்துக்கொண்டு போக முடியுமா...?“ என்று கேட்டாள்.
  நானும் சரியென்று சொல்லிவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சென்றேன். அந்த அம்மாவிற்குப் பிரென்சு மொழி தெரியாததால் நானே அவர்களுக்கு என்ன என்ன செய்கிறது என்று கேட்டு அதை டாக்டரிடம் சொன்னேன்.
   அவர்கள், “இதயம் அடிக்கடி படப்படப்பாக இருக்கிறது. வாயிற்றுப் போக்கு இருக்கிறது, உடம்பெல்லாம் வலிக்கிறது“ என்று சொன்னதை நான் டாக்டரிடம் சொன்னேன்.
   டாக்டர் அவரைப் பரிசோதித்து விட்டு உடம்பு வலிக்கும் வயிற்று போக்கைக் கட்டுப்படுத்தவும் மாத்திரைகளை எழுதித் தந்தார். அதனுடன் இரத்தப் பரிசோதனைக் கான சீட்டையும் தந்து, தான் ஒரு மாதகால விடுமுறையில் செல்ல இருப்பதால் அவசியம் இரண்டு நாளில் இரத்தப் பரிசோனை ரிசல்ட்டுடன் வந்து தன்னைப் பார்க்கும் படி சொன்னார்.
   நானும் மருந்தை வாங்கிக் கொடுத்துவிட்டு விசயத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
   மூன்று நாள் கழித்து தோழி மீண்டும் அழைத்தாள். “இரத்தப் பரிசோதனையின் தாள் சற்றுத் தாமதமாகக் கிடைத்துவிட்டதால் அந்த டாக்டரைப் பார்க்க முடியவில்லை. அதனால் வேறு ஒரு டாக்டரிடம் அப்பாய்மெண்ட் வாங்கி விட்டேன். ஆனால் அதற்கும் என்னால் போக முடியாது. அதனால் நீ தான் போகவேண்டும்“  என்று என்னிடம்  கெ(கொ)ஞ்சினாள்.
   திரும்பவும் நானே அந்த அம்மாவை வேறு ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர், அம்மாவைப் பரிசோதித்து விட்டு, “தைராய்டுக்கு மாத்திரை எடுக்கிறீர்களா...?“ என்று கேட்டார். நான் அந்த அம்மாவிடம் கேட்டேன். அந்த அம்மாவும் தான் பல வருடங்களாக தைராய்டுக்கு மாத்திரை எடுப்பதாகவும், அந்த மாத்திரை இன்னும் இருப்பதாகவும் சொன்னதை டாக்டரிடம் சொன்னேன். “தொடர்ந்து தைராய்டு மருந்தை எடுங்கள். நல்ல சத்தான உணவாகச் சாப்பிடுங்கள்“ என்று சொல்லி வைட்டமின் டி, டானிக், மாத்திரை என்று எழுதிக் கொடுத்தார்.
    மருந்தை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு டாக்டர் சொன்னதையும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

    ஆனால் அடிக்கடி போன் செய்து விசாரித்தேன். தோழியின் அம்மா எப்பொழுதுமே உடல்நிலை சரியில்லாமல் தான் இருக்கிறார்கள் என்ற பதில் வரும். கவலையாக இருக்கும். இருந்தாலும் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் நாளாக சரியாகிவிடும் என்று தோழிக்கு ஆறுதல் சொன்னேன்.

    ஒரு மாதம் கழித்து என் தொழி, நேற்று அவர்களின் டாக்டர் ஊரிலிருந்து வந்ததும் தன் அம்மாவை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வந்ததும் எனக்குப் போன் செய்தாள். எடுத்ததும்... “அருணா... போன மாதம் டாக்டரிடம் அம்மாவை அழைச்சிக்கினு போனியே... அப்போ இரத்த டெஸ்ட் தாளை டாக்டரிடம் காட்டினியா...?“ என்று கேட்டாள்.
   “ஓ... காட்டினேனே.... அவங்க கூட தைராய்டு இருப்பதாகவும் அதற்கு மருந்து தொடர்ந்து சாப்பிடவும் சொன்னார்கள்“ என்றேன்.
   “அவங்களே மருந்து எழுதித் தரலையா...?“
   “இல்லை. அம்மா தைராய்டு மாத்திரை வீட்டில் நிறைய இருக்கிறது என்றார்கள்“ என்றேன்.
   “அறிவிருக்கா....? அவங்க சொன்னா நீ கேட்டு எழுதி வாங்கறது இல்லையா...? அதனால இப்போ எவ்வளவு பிரட்சனைப் பார்“ என்றாள் கோபமாக.
   எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நடந்ததை ஒரு முறை அசைபோட்டுப் பார்த்தேன். என் மீது தவறு எதுவும் இருந்தது போல் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அவளின் அம்மா. அவர்கள் எனக்கும் அம்மா மாதிரி தான். அவர்களின் உடல் விசயத்தில் என்ன அலட்சியமாக நடந்துகொண்டேன் என்பது புரியாததால், “ஏன்... இப்போ என்னவாச்சி?“ என்று பயத்துடனே கேட்டேன்.
    என் குரலில் இருந்த பயத்தை அறிந்த அவள் தன் குரலைச் சற்று மென்மையாக்கி, “நீ மட்டும் என்ன செய்வ? தைராய்டு பத்தி உனக்கு என்ன தெரிந்திருக்கும்...? உன்னோட தப்பில்லை. என்னோட தப்பு தான். இருந்தாலும் நீ டாக்டரிடம் தைராய்டு மாத்திரையைக் கேட்டு எழுதி வாங்கி வந்திருக்கலாம்“ என்றாள்.
   திரும்பத் திரும்ப இதே பல்லவியா...? எனக்கு எரிச்சலாகியது. “ஏன் இப்போ என்னாச்சி? சொல்லித் தொலையேன்“ என்றேன் சற்று கோபமாக.
   அவள் சொன்னாள்...

   தன் அம்மாவிற்கு பல வருடங்களாக கொலஸ்டிரால், தைராய்டு குறைவாக இருப்பதால் அதை அதிகப் படுத்தும் மாத்திரையையும் சாப்பிட்டு வருகிறார்கள்.
   பிரான்சுக்கு வந்த துவக்கத்தில் டாக்டர் அதே மருந்துக்களையே எழுதித் தந்தார். கூடவே உணவு கட்டுப்பாடு நடைபயிற்சி என்று மூன்று மாதம் முழு மூச்சாய் செய்து இருக்கிறார்கள். அதனால் கொழுப்பும் குறைந்து விட்டது. கூடவே தைராய்டும் சாதாரண நிலையை விட மிக அதிகமாகி விட்டிருக்கிறது.
   மிக அதிமாகி விட்ட தைராய்டுக்கு மேலும் மேலும் தொடர்ந்து அதை அதிகப்படுத்தும் மாத்திரையையே சாப்பிட்டு இருக்கிறார்கள்.  இதனால் இதயத் துடிப்பு அதிகமாகவும், வயிற்று போக்கு, எடைக்குறைவு, எலும்பும் தசையும் சுறுங்கியதால் உடல்வலி என்று பல துன்பங்கள் வந்திருக்கிறது.
   இதற்கு நடுவில் நான் அவர்களை இரத்தப் பரிசோதனை தாளுடன் அழைத்துச் சென்ற போது டாக்டர் தைராய்டுக்கு மாத்திரைச சாப்பிடுவதைப் பற்றி கேட்டார். ஆனால் அது அதிக தைராய்டுக்கான மருந்தா? குறைவான தைராய்டுக்கான மருந்தா? என்று நாங்கள் அறியவில்லை. தைராய்டு என்பது மட்டும் தான் எங்களுக்குத் தெரியும்.
     மருந்து தொடர்ந்து சாப்பிடுகிறார் என்றதும் அவரும் தைராய்டு அதிகமாக உள்ளதற்குத் தான் சாப்பிடுகிறார் என்று விட்டுவிட்டார். அதை அறியாமல் அந்த அம்மாவும் தொடர்ந்து அதே மருந்தைச் சாப்பிட்டு விட்டு மேலும் மேலும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
  
    நான் டாக்டரிடம் தைராய்டுக்கான மாத்திரையைக் கேட்டிருக்க வேண்டும். அல்லது அந்த அம்மாள் சாப்பிட்ட மருந்தையாவது அல்லது டாக்டர் ரசிதையாவது கொண்டு சென்றிருக்க வேண்டும். அல்லது... அம்மாவின் இரத்தப் பரிசோதனை தாளையாவது ஒரு முறை சரியாகப் பார்த்திருக்க வேண்டும். இதையெல்லாம் நினைத்தபோது நான் செய்தது தான் தவறு என்பது புரிந்தது.
   அந்த அம்மாவிடம் உடனே மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் அது தன்னடைய தவறு என்றார்கள். தோழியோ அது தன்னுடைய தவறு என்றாள்.
   உண்மையில் இது யார் தவறு? சொல்லுங்கள் நட்புறவுகளே.

அருணா செல்வம்
10.04.2014







   

30 கருத்துகள்:

  1. ஒருத்தரை ஒருத்தர் மனதளவில் கூட காயப்படுத்த விரும்பவில்லை என்று மட்டும் தெரிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ... எல்லோருமே தவறு செய்தவர்கள் என்கிறீர்களா...?

      இருக்கலாம். இதுவும் ஓரளவில் உண்மை தான்.

      பதிலுக்கு நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. அறியாமைதான் காரணம். இப்போது என் தைராய்டைச் செக் செய்து கொள்ளத்தோன்றுகிறது..பாவம் நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் செக்கப் செய்தக் கொள்ளங்கள். முக்கியமாக அது குறைவாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

      தவிர தைராய்டு குறைவாகக் காட்டினால் அதிகமாம்.
      அதிகமாகக் காட்டினால் குறைவாக உள்ளதாம்.... சற்று குழப்பமானது தான் தைராய்டு பிரட்சனை.

      இது ஒரு விழிப்புணர்வு பதிவு தான் வல்லிசிம்ஹன் அம்மா.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. டாக்டரிடம் அழைத்து கொண்டுதான் போக முடியவில்லை உங்கள் தோழியால் ...போயிட்டு வந்தபின் மருந்துகளைப் பற்றி விவரமாக அவர்தான் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் !
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பகவான் ஜி.

      என்னை நம்பி தானே அனுப்பினாள்?
      நான் தானே பொருப்புடன் நடந்துக் கொண்டிருக்க வேண்டும். இது என்ன காய் கறி வாங்கும் விசயமா...? சொத்தை என்றால் துாக்கிப்போட...?
      அதனால் என் தவறு தான் பகவான் ஜி.
      நன்றி.

      நீக்கு
  4. தவறு உங்கள் மீது கொஞ்சமும் இல்லை. டாக்டரிடம் அழைத்துப் போவது மட்டுமே நீங்கள் செய்தது. அதன் பின் உங்கள் தோழி தான் மருந்து விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்காக பேசுகிறீர்கள்.
      நீங்கள் ரொம்ப நல்லவர்.
      நன்றி பாண்டு ஐயா.

      நீக்கு
  5. இதில் யாரைத் தவறு சொல்வது? எப்பவும் பழைய மாத்திரைகள் குறித்த விபரங்களைக் கொண்டு செல்வதே நலம் பயக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் குமார்.

      கொஞ்சம் முன் யோசனை இல்லாம் நடந்து கொண்டேன்.
      சரியான பதிலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  6. சகோ அருணா..!
    உங்கள் மேல் தவறுள்ளதாக எனக்கு தெரியவில்லை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் மீது தான் தவறு என்று சொன்னாலும் நான் கோபித்துக் கொள்ள மாட்டேன் சீனி அண்ணா.

      பதிலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு

  7. வணக்கம்!

    நடந்த நிகழ்வை நயமுறத் தந்தீா்
    படா்ந்த தமிழைப் பணிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் சொல்லவில்லையே......

      தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  8. உங்கள் மேல் தவறில்லை சகோதரியாரே.
    பொதுவாக ஒருவருக்கு சுகர் இருக்கிறதென்று கூறினால்,
    அதிக அளவிலான சுகர் என்றுதான் எடுத்துக் கொள்வோமே தவிற,சுகர் குறைவு நோய் என்று யாருமே எண்ண மாட்டார்கள்.
    சம்பந்தப் பட்டவர்கள்தான் சுகர் குறைவுப் பிரச்சினையா, சுகர் அதிகமானதால் பிரச்சினையா என்று விளக்கி இருக்க வேண்டும்.
    தவறு தங்களின் நண்பியினுடையதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பெரியய்யா.

      சுகரில் வேண்டுமானால் இந்தப் பிரட்சனை தெரியலாம். ஆனால் தைராய்டில் இரத்தப் பரிசொதனைத் தாளில் சாதாரண நிலையை விட அதிகமாக் காட்டினால் குறைவான தைராய்டு என்றும் குறைவாகக் காட்டினால் அதிகமான தைராய்டு என்றும் மருத்தவர்கள் சொல்லகிறார்கள். அந்த அம்மா மொழி தெரியாதவர்.
      தோழி தாளை என்னிடம் கொடுத்தாள். நான் பார்த்திருக்க வேண்டும். அல்லது டாக்டரிடம் இது குறித்து கேள்விகள் கேட்டாவது இருக்க வேண்டும். என் தவறு தான்.

      நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. தவறு மருத்துவரிடம் தான் உள்ளது.. அவர் தான் என்ன மாத்திரை சாப்பிடுகிறோம் என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு அதைத் தொடர்ந்து சாப்பிட சொல்லியிருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் உண்மை தான் ஆவி.
      இவர் புது பேஷன்ட். ஆனால்.... டாக்டர் தைராய்டுக்கு மருந்து சாப்பிடுகிறீர்களா... என்று கேட்டார் தான். ஆனால் அது குறைவானதற்கா அதிகமானதற்கா என்பதை நாங்கள் அறியவில்லை.

      பதிலுக்கு மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  10. வணக்கம் தோழி !
    இதில் தவறு உங்கள் மூவரிலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை பொதுவாக இதை அவதானித்து முறைப்படி வைத்தியர்கள் தான் தங்கள் கடமையினைச் செய்திருக்க வேண்டும் .மருந்து எடுத்தும் தொடர்ந்தும் உபாதைகள் இருப்பதனால் தானே மருத்துவரை அணுகியுள்ளீர்கள் அப்படி இருக்கும் போது வாய் பேசாத ஜீவன்களுக்கே மருத்துவர்கள் வைத்தியம் செய்யக் கற்றுக்கொண்டு தானே இத் தொழிலுக்கே வருகின்றார்கள் எதையும் நீங்கள் எடுத்துரைத்துத் தான் வைத்தியர்கள் தங்கள் கடமையினைச் செய்தல் வேண்டுமா ?...வெளி நாட்டைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு விசயத்திலும் உன்னிப்பாகக் கேள்வியைக் கேட்டே தங்களுக்குத் தேவையான விபரத்தை மருத்துவர்கள் சேகரித்துக் கொள்வார்கள் அது கூடஇங்கு நிகழாமல் போனது அந்த அம்மாவின் துரதிஸ்ட பலனே .நடந்த நிகழ்வை மறந்து இனியேனும் அவதானமாக நடந்து கொள்வதே இதற்கொரு சரியான தீர்வு .பொதுவாக வைத்தியரிடம் மருந்து வாங்கித் தொடர்ந்தும் அந்த மருந்தினை நாங்கள் சாப்பிடும் நிலை இருந்தால் மருந்தின் பெயர் அதன் கிராம் இன்னும் எவ்வளவு மீதம் உள்ளது என்ற தகவல்களை எழுதிக் கையோடு கொண்டு போவதும் எமது கடமைகளில் ஒன்று தான் இதைத் தங்கள் தோழியே கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .எனது தந்தையாரை இதுவரை நான் இப்படித்தான் கவனித்து வந்தேன் அந்த அனுபவம் எனக்கும் இந்த விசயத்தில் பொறுப்புணர்ச்சியை அதிகப் படுத்தவும் வாய்ப்பளிதுச் சென்றுள்ளது .கவலை வேண்டாம் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவு நான் செய்த தவற்றை சமாதானம் செய்வதற்காக இல்லை தோழி.

      உண்மையில் இது ஒரு விழிப்புணர்வு பதிவு தான்.
      இதைப் படித்தவர்கள் இனி சற்று கவனமாக இரப்பார்கள் இல்லையா...?

      அதற்காகத் தான் இதைப் பதிவாக இட்டேன்.
      உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. இதில் டாக்டரின் தவறுதான் இருப்பதாக தோன்றுகிறது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் பதிலும் ஓரளவு உண்மை தான் தளிர் சுரேஷ்.

      மிக்க நன்றி.

      நீக்கு
  12. அது உங்கள் தவறு அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் பதிலால் கொஞ்சம் சமாதானம் அடைகிறேன்.

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி .

      நீக்கு
  13. பொதுவாக மருத்துவர் என்ன மருந்து என்பதை கேட்டு இருக்க வேண்டும். மருந்து சாப்பிடும் பலருக்கு எதற்காக அந்த மருந்து சாப்பிடுகிறோம் - அதிகப் படுத்தவா, இல்லை குறைக்கவா என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....

    இப்போது நன்றாக இருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் உண்மை தான்.
      அந்த அம்மா இப்பொழுது நன்றாக இருக்கிறார்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  14. மருத்துவர் தான் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். காரணம், தமிழில் பேசியுமே மருந்துகள் மாறும் அபாயம் இங்கு உண்டு. மேலும் நோயாளியாக தங்கள் உடன் வந்தவரும் தனது நோயைப்பற்றி தெளிவாகத் தெரிந்திருக்கவேண்டும் தான் உட்கொள்ளும் மருந்து தைராய்டை குறைப்பதற்கா அல்லது அதிகரிப்பதற்கா என்று...

    பதிலளிநீக்கு
  15. எல்லாரயும் விட அந்த டாக்டர் தான் தப்புன்னு நான் நினைக்றேன்....

    பதிலளிநீக்கு
  16. உங்கள் தோழியிடம்தான் தவறு இருக்கிறது. பெற்ற தாயின் உடல்நிலை குறித்து முழுவிவரமும் தெரிந்திருந்த அவர்தான் அவர் தாயை டாக்டரிடம் அழைத்து சென்று இருக்க வேண்டும்.
    அதைக் காட்டிலும் அப்படி என்ன பொல்லாத வேலை?

    பதிலளிநீக்கு
  17. இது வைத்தியர் தவறு.இப்போ வைத்தியர்களில் அசட்டை அதிகம்.

    பதிலளிநீக்கு