செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

ஆணின் காதல் தவிப்பு! (கவிதை)




கொள்ளைப் புறத்து மரங்களிலே
     கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
     முத்துப் பல்லை ஒத்திருக்க  
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
     காற்றில் இராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
     சொக்கிப் போனேன் இவைகண்டு!!

காற்றில் வந்த நறுமணத்தில
     காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
     சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
     இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டீ என்மேலே
     சின்னக் கிளியே செங்கனியே!

வீட்டில் பாயில் படுத்தாலும்
     விடியக் கண்கள் மூடவில்லை!
காட்டிக் கொடுக்கும் கண்ணிரண்டும்
     காதல் தவிப்பைத் தாயிடத்தில்!
கூட்டிக் கேட்டால் என்சொல்வேன்?
     கொடுத்த ஏக்கத் தவிப்பைநான்!  
வாட்டி வதைக்கும் வடிவழகே
     வாடி என்தன் பக்கத்தில்!

சொட்டும் தேனை இதழினிலே
     சொக்க எனக்குத் தந்தவளே!
கட்டும் குழலைப் பாயாக்கிக்
     காதல் களிப்பைத் தந்தவளே!
திட்டும் போதும் பல்காட்டித்
     திகட்டா இன்பம் தந்தவளே!
தொட்டுப் பேச அழைக்கின்றேன்
     தொடுத்த சரமே அருகேவா!!

வட்ட நிலவு வானத்திலே
     வந்த உடனே உன்நினைப்பே!
சிட்டு போலப் பறப்பவளே
     சிந்தை முழுதும் உன்நினைப்பே!
சட்டம் போட்டுச் சண்டையிட்டுத்
     தனியே தாயின் வீட்டிற்குத்
திட்டம் போட்டுப் போனவளே
     திட்ட மாட்டேன் வந்துவிடு!

முன்னே தெரியும் முகமெல்லாம்
     முத்துப் பெண்ணே உன்முகமாய்
என்னே அழகாயத் தெரியுதடி!
     ஏங்கிக் கிடக்கும் என்னைப்பார்!
கண்ணே! மணியே! கற்கண்டே!
     கட்டி அணைக்க வந்துவிடு!
சொன்னேன் கவியில் இனிப்பாக
     சுவைக்க இதழைத் தந்துவிடு!!

(அறுசீர் விருத்தம்)

6 கருத்துகள்:

  1. அனைத்து கவிதைகளும் மிக மிக அருமை
    அனைத்தையும் படிக்கவும் பின்னூட்டமிடவும் ஆசை
    வேர்ட் வெரிஃபிகேஷன் கொஞ்சம் இடைஞ்சலாக உள்ளது
    முடிந்தால் நீக்கினால் பின்னூட்டமிடுவோருக்கு
    மிகவும் வசதியாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
    உங்கள் இடைஞ்சல்களைக் கூடிய விரைவில்
    போக்க முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்ங்க!
    இப்பொழுது உங்கள் இடஞ்சல்கள் நீங்கி விட்டனவா? நான் இருக்கும் இடத்தில் தமிழர்களோ அல்லது இந்த பிரட்சனையை நீக்குபவர்களோ யாரும் இல்லை. நானே முயற்சித்து செய்கிறேன். இந்தப் பிரட்சனை சரியாகிவிட்டதா என்றும் அறிய முடியவில்லை.நீங்கள் பினனோட்டம் இட மேலும் பிரட்சனை இருந்தால் அவசியம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமையாக இருக்கின்றது.ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  5. அன்பின் அருணா செலவ்ம் - கொள்ளைப் புறமா - கொலலைப் புறமா ? எந்தனா என் தனா - . கவிதை கவிதை அருமை - மிக மிக இரசித்தேன் - திரும்பத் திருமப படித்து மகிழ்ந்தேன் - தமிழ் புகுந்து விளையாடுகிறது. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. இயறகைக் கவிதை இனிமை சொட்டச் சொட்ட இன்பம் அள்ளித் தருகிறது. இந்தக் காதல் இப்போது எங்கே? எங்கே? என்று தேடல் வேண்டும். இன்பமென்பது உணர்வின் வெளிப்பாடு - இதைத் தந்த இலக்கணக் கவிதை அருமை அருமை - அன்பாய்க் காதல் அள்ளித் தந்த தலைவி - ஏனோ திட்டமிட்டு தாய் வீடு சென்றாள் என்று ஏங்கியது எழுத்தைப் படித்த மனம் - நல்ல நடை நல்ல கருத்து -கவிதை அருமை அருமை .

    இக்கருத்து என் துணைவி இக்ககவிதையைப் படித்து மகிழ்ந்து எழுதிய மறுமொழி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு