செவ்வாய், 10 டிசம்பர், 2019

பாரதியைப் போற்றுவோம்!

பூட்டில்லா வீட்டில் நுழைவதுபோல்வந்து
புண்ணிய பூமியில் வாழ்ந்தவரை - வாலை
ஆட்டியே நம்மை அடிமைசெய்துவேற்று
நாட்டவர் எம்மை ஆளுவதோ?

காட்டுக்கே அரசன் சிங்கமன்றோஅதைக்
காப்பதே அதனின் திறனன்றோ - சின்னக்
கூட்டுப் புழுவாக இருந்தாலும்தம்மின்
கூண்டினில் வாழ்வதே நன்றாகும்!

வாட்டிய கொடுமை வஞ்சனைங்கள்கண்டு
வாடி வதங்கிய பாரதியேதீமை
ஓட்டிட வேண்டும் என்றெண்ணியேநாளும்
ஓதிய தெல்லாம் உயர்வாகும்!

நாட்டுக்கு நன்மையைச் செய்திடவேநல்ல
பாட்டினில் கருவைச் சேர்த்துவைத்தான் ! – கவி
தீட்டிய தெல்லாமே உயர்வாகும்வீரம்
ஊட்டிய சுவை உணர்வாகும்!

மூட்டிய வீரச் சொற்களாலேநெஞ்சை
மூடி நடுக்கிய பயமெல்லாம்தீயில்
காட்டிய பஞ்சாய் மறைந்ததுவேஉடன்
கடமை சூட்டை ஏற்றியதே!

ஏட்டினில் உள்ள இலக்கணத்தையாரும்
ஏற்றிடும் வண்ணம் எளிமையாக்கிப்புதுப்
பாட்டென்ற எண்ணம் ஏற்றிவைத்தஉயர்
பாரதியை நாம் போற்றிடுவோம்!
.
(கும்மி)
பாவலர் அருணா செல்வம்
11.12.2019

2 கருத்துகள்:

  1. பின்னூட்டமாக நான் முன்பு எழுதி இருந்த ஒரு பதிவின் சுட்டி தருகிறேன் பரதியின் கருத்துகளால் கோர்க்கப்பட்டது /https://gmbat1649.blogspot.com/2014/09/blog-post_10.html

    பதிலளிநீக்கு