செவ்வாய், 14 ஜனவரி, 2020

வருக வருக தைமகளே!

ஒவ்வோர் ஆண்டும் வருகின்றாய்
    உலகம் உருண்டு வாழ்வதற்கே!
எவ்வேற் மாற்றம் உன்னிடத்தில்?
    இன்றும் துளியும் குறைவில்லை!
அவ்வாற் மனிதர் இல்லாமல்
    ஆசை தன்னில் சுழலவிட்டு
வெவ்வேற் நிலையைக் கண்பதற்கே
    வேகத் துடனே கடக்கின்றாய்!

இன்பம் பொங்கும் உலகத்தில்
    இன்னல் பலவும் முளைத்துவிட
நன்மை என்றே தீமைதனை
    நாளும் மனங்கள் பெறுகிறது!
சின்னத் தன்மை ஆசைகளால்
   செய்யும் தவறு பெரிதாகி,
மின்னல் போன்ற வாழ்நாளில்
   மேன்மை மறைந்து மடிகிறது!

எந்த நாளில் இவையில்லை?
   என்றே அறிந்தே இருந்தாலும்,
இந்த உலகம் நலம்பெறவே
   நலமாய் நன்றாய் வருகின்றாய்!
அந்த நாட்கள் போகட்டும்
   அனைத்தும் நன்மை பெறுவதற்கே
வந்து பிறப்பாய் இவ்வாண்டும்
   வளமை கொஞ்சும் தைமகளே!
.
பாவலர் அருணா செல்வம்
14.01.2020

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...