செவ்வாய், 23 ஜனவரி, 2018

நேற்று - இன்று – நாளை !
நேற்று !
-
நேற்று முடிந்த நிகழ்வே பழமையெனச்
சாற்றிடும் காலத்தின் சால்பு!
.
பழமைகள் என்றுமே பாழாவ தில்லை
பழத்தின் விதையாகும்! பற்று!
.
நல்வினை செய்திருந்தால் நாளெல்லாம் தேடிவரும்
பல்புகழ் மேலோங்கும் பார்!
.
கடந்துவிட்ட நாளின் கவலைகள் நேற்றே
கடந்ததெனப் பாடு கவி!
.
முடிந்ததாய் நம்பும் முடிந்திடாத் தோல்வி
கொடிதாகும் நெஞ்சுள் கொழித்து!
.
ஒருநாள் பயணம் ஒழுங்காய் முடிந்தால்
திரும்ப நினைக்காது ! தீர்ப்பு!
.
கற்றநற் கல்வி கலையாய் வளர்ந்திடும்
மற்றதெல்லாம் போகும் மறந்து!
.
நினைத்ததும் ஏங்கும் நிகழ்வோ இருந்தால்
அனைத்துலகின் மேலாம் அது!
.
கொடிய செயல்கள் கொடுத்திடும் தீர்வு
நெடிதாய் நெருக்கிடும்நன் னெஞ்சு!
.
காலத்தின் கோலத்தைக் கண்டுவிட்டோம் வாழ்விலே
ஞாலத்தின் ஓட்டம் நயம்!
.

இன்று!
.
இன்று நடக்கின்ற இன்ப நிகழ்வுகள்
என்றும் கிடைக்காதாம் எண்ணு!
.
நல்லதோ அல்லதோ நன்றாய் நடத்திடும்
வல்லமைக் காலமே வாழ்வு!
.
இன்றும் இருக்கின்றோம் என்று மகிழ்ந்தாலே
நன்றே நடக்கும் நமக்கு!
.
இன்றுநாம் செய்யும் இனிமையிடும் நன்மைகள்
என்றும் நிலைக்கும் இருந்து!
.
அன்பான வார்த்தை அகிலத்தை ஈர்த்திடும்
அன்னைபோல் என்றும் இயம்பு!
.
கற்றதை இன்றேநீ கற்பித்தால் என்றென்றும்
பெற்றிடுவாய் நல்லுயர்ந்த பேறு!
.
கருணைமிகு உள்ளங்கள் காலம் கடந்தும்
இருந்திடும் என்றும் இசைத்து!
.
கவலைகள் வந்தால் கலக்கட்டும் காற்றில்
தவணைமுறை வேண்டாம் தவிர்!
.
பொன்நகை வேண்டாமே! புன்னகை போதுமென்று
நன்மனம் கொள்வீர் நகைத்து!
.
இன்றே கொடுத்துதவ என்றும்நம் வாழ்விலே
நன்றே நடக்குமென நம்பு!
.
நாளை !

-
வரும்நாட்கள் நன்மைத் தருமென நெஞ்சே
திருநாளாய் எண்ணி இரு!
-
உனக்காய் வருவதே ஒவ்வொரு நாளும்
மனமகிழ்ந்து துன்பம் மற!
-
நினைத்ததைச் செய்ய நிலைவருங் காலம்
உனக்கென உண்டே! உணர்!
-
எண்ணிய தெல்லாம் எதிர்வரும் நாட்களிலே
உண்மை நிகழ்வாய் உறும்!
-
நல்லதை எண்ணிட நாளை வளர்ந்திடும்
வல்லமை கொண்டநல் வாழ்வு!
-
எதிர்காலம் உண்டெ னயிருந்தால் நம்மின்
புதிர்வாழ்வைக் கண்போம் புரிந்து!
-
காலம் மருந்தெனக் காத்திருந்தால்  துன்பத்தின்
கோலமும் மாறும் குளிர்ந்து!
-
எதிர்நோக்குப் பார்வை எழுத்தில் அமைந்தால்
நதிபோன்று நன்மைதரும் நாள்!
-
நல்வினைச் செய்தாலே நாளை யெனும்நாளில்
தொல்லை வருமோ தொடர்ந்து!
-
செந்தமிழைப் பாடிச் சிறப்பாய் எழுதிடும்
எந்நாளும் பொன்னாள் எனக்கு!
-
பாவலர் அருணா செல்வம்

20.01.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக