வெள்ளி, 7 ஜூன், 2019

உயர்ச்சி வேற்றுமை அணி! – குறிப்புவேற்றுமை அணி!

     பாடலில் இரண்டு பொருளுக்கு உள்ள ஒப்புமைகளைக் கூறிப் பின்பு அதனில் ஒன்றுக்கு மட்டும் அதன் உயர்வைக் குறிப்பால் கூறுவது உயர்ச்சி வேற்றுமைஆகும்.

. ம்
எண்ணில் அடங்காத எண்ணங்கள் ஓடிடும்
விண்ணில் தவழும் வியன்மேகம்! – கண்காண
காற்றடிக்க மேகம் கலைந்தோடும்! எண்ணங்கள்
ஈற்றுவரை வாழும் இணைந்து!
.
பொருள் எண்ணில் அடக்க முடியாத அளவு எண்ணங்கள் (கற்பனைகள்) ஓடிடும். வானத்தில் அழகிய மேகமும் எண்ணில் அடங்காத அளவு ஓடிடும். எனினும், கண்கள் மேகத்தைக் கண்டுகொண்டு இருக்கும் பொழுதே காற்று வீசுவதினால் கலைந்து ஓடும், ஆனால் எண்ணத்தில் தோன்றியவைகள் வாழும் வரையில் நம் மனத்துடன் இணைந்தே வரும்.
    பாடலில் உள்ள இரண்டு பொருள்கள் ஒன்று மனத்தில் தோன்றும் எண்ணங்கள். மற்றொன்று வானில் தோன்றும் மேகம். முதல் இரண்டு அடிகளில் இரண்டிற்கும் உள்ள ஒப்புமையைக் கூறிப், பின்பு எண்ணத்தை மட்டும் குறிப்பால் உயர்த்திக் கூறியுள்ளதால் இது உயர்ச்சி வேற்றுமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2019