வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

இன்று காதலர் தினமாம்...!ஒற்றை ரோசா மலர்கொண்டே
   உன்னை எண்ணிக் காத்திருந்தேன்!
பற்றை விட்ட முனிபோலப்
   பட்டும் படாமல் பேசுகின்றாய்!
வற்றாக் காதல் வளத்துடனே
   வாங்கி வந்த மலரை...நீ
கற்றைக் குழலில் சூடிட்டால்
   காற்றாய் மனமும் பறக்காதோ

சிவப்பு ரோசா இதழினிலே
   சிந்தும் தேனின் சுவைபோல
உவப்புக் கொண்ட கன்னத்தில்
   ஒத்தி ஒன்று கொடுத்திட்டால்
தவத்தின் பயனை அடைந்திட்ட
   தன்மை தெரியும் இன்றெனக்கு!
தவறே என்று நினைக்காமல்
   தாவி வந்து கொடுத்துவிடு!

என்ன சொல்வேன் என்னவளே!
   எழுதும் எழுத்தில் எதைக்கோர்ப்பேன்?
உன்னை மனத்தில் சுமந்ததாலே
   உறக்கம் இன்றித் தவிக்கின்றேன்!
பொன்னில் புரண்ட மனத்தவளே!
   பொய்யைச் சொல்ல விருப்பமில்லை!
என்னில் இருக்கும் உன்னைநான்
   என்றும் மனத்தால் அணைக்கின்றேன்!

இன்று காதல் திருநாளாம்!
   இருந்தால் என்ன என்னவளே!
என்றும் நமக்குத் திருநாளே!
   இனிய காதல் வளர்நாளே!
அன்று வாழ்ந்த காதலர்கள்
   அன்பைக் காட்ட நாள்வகுத்தார்!
அன்றும் இன்றும் என்றென்றும்
   அழியாக் காதல் நமதன்றோ?!!அருணா செல்வம்.

11 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

////அன்று வாழ்ந்த காதலர்கள்
அன்பைக் காட்ட நாள்வகுத்தார்!///
ஆனால் இன்று...
தம +1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இனிமை இனிமை
"சூடிக்கொண்டால்" ஓசை இடிக்கிறதே!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இனிமை இனிமை
"சூடிக் கொண்டால்" ஓசை அதிகமானது போல் இருக்கிறதே

அம்பாளடியாள் சொன்னது…

ஆஹா ...அருமையான உணர்வைத் தாங்கி வந்த காதலர் தினக்
கவிதை !!!! இனிய காதலர் தின வாழ்த்துக்கள் தோழி .வாழ்க வளமுடன் .

Unknown சொன்னது…

அமரத்துவ காதல் வாழ்க !
த ம 5

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரி...

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் மூங்கில் காற்று.

ஆமாம். நீங்கள் சுட்டிக்காட்டியது சரிதான். இப்போது மாற்றி விட்டேன்.
நன்றி மூங்கில் காற்று.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை அக்கா...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காதலர் தின சிறப்புக் கவிதை நன்று.

பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

காதலர் தின சிறப்புக் கவிதை அருமை! சகோதரி! உணர்வுகள் நிரம்பிய வரிகள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அதுவும் சரிதானே என்றுமே காதல்....அழியாத காதலுக்கு எதற்கு காதலர் தினம்?!!!