திங்கள், 8 செப்டம்பர், 2014

பிரிவு!!

  


   பாவனா, பதினைந்து நாட்களாகப் பெறுக்காத வீட்டைப் பெறுக்கி விட்டு, சாரங்கள் போட்ட துணிகளைத் துவைத்துக் காயப்போட்டு, காய்ந்து போன பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு இருந்த போது....
   “அக்கா... இந்த கால் உனக்குத் தான். இந்தா பேசு“ என்று அலறிய போனை நீட்டினாள் அவளின் தங்கை வனிதா.
   “நீயே பேசேண்டி. எனக்கு எவ்வளவோ வேலை இருக்குது.....“ என்றாள் கோபத்துடன் பாவனா.
    “பேச வேண்டிய எல்லார்க்கிட்டேயும் பேசிட்டேன். இது மாமாவோட நம்பர்ன்னு நினைக்கிறேன். நீதான் பேசனும். அப்புறம்.... நான் வந்திருக்கிறதைச் சொல்லாதே. மாமாவுக்கு நான் வந்தது ஒரு சர்பிரைஸா இருக்கட்டும்...“ என்று சொல்லிவிட்டு போனைக் கொடுத்தாள்.
    கையில் வாங்கி “ஹலோ...“ என்று பாவனா சொன்னது தான் தாமதம்.
   “போன் வந்தா உடனே எடுக்க மாட்டியா.....? காலையிலேர்ந்து ரெண்டு மணி நேரமா டிரைப் பண்ணுறேன். வந்ததும் வராததுமா யார்கிட்ட தான் இவ்வளவு நேரமா பேசிக்கினு இருந்த.....?“ சாரங்கன் கத்தி கேட்டது அவளையும் தாண்டி வனிதாவிற்கும் கேட்டது.
   “அது வந்துங்க.... காலையில நாங்க வந்த பஸ் மரத்துல மோதி ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சிங்க. இந்த விசயம் தெரிஞ்சதும் என் அம்மா அண்ணன், சொந்தக் காரங்கன்னு நிறைய பேர் என்னாச்சி ஏதாச்சின்னு போன்பண்ணி நலம் விசாரிச்சாங்க. அதனால தான் எங்கேஜ்ஜா இருந்துச்சி.“ என்றாள்.
   “ஓ.... அப்படியா...? பசங்க நல்லா இருக்காங்களா....?“ கேட்டான்.
   “நாங்க பஸ்சுல நடுவுல உட்காந்துட்டோம். எங்களுக்கு ஒன்னும் ஆகலை. ஆனால் முன்னாடி இருந்தவங்க... டிரைவருக்கெல்லாம் நல்ல அடி. ஆம்புலன்சுல அழைச்சிக்கினு போனாங்க. நிறைய ரத்தம் போயிடுச்சி.... உயிருக்கு.....“
   அவள் சொல்லி முடிக்கவில்லை. “சரி சரி விடு. நான் வேலை முடிச்சிட்டு பிரெண்டோட ஒரு பார்ட்டிக்குப் போறேன். ராத்திரி எட்டு மணிக்கு மேல தான் வருவேன். இதை சொல்ல தான் போன் பண்ணினேன்“ என்றான்.
   “என்னங்க இன்னைக்குமா.....? நான் அம்மாவீட்டுக்குப் போன இந்த பதினைஞ்சி நாளும் தான் பார்ட்டி பார்ட்டின்னீங்க. இன்னைக்கு நாங்க வர்றோம்ன்னு தெரியுமில்லை. பிள்ளைங்களும் உங்களைப் பாக்கனும்ன்னு ஆசையா இருக்காங்க“ என்றாள் பாவனா.
   “என்ன என்னைப் புதுசாவா பாக்க போறாங்க. எல்லாம் நாளைக்கிப் பார்த்துக்கலாம். வச்சிடறேன்“ போனை வைக்கப் போனான். அதற்குள்...
   “இருங்க. இருங்க.“ என்றதும் “என்ன?“ என்று கேட்டான்.
   “கருணாவுக்கு ஸ்கூல் யூனிபார்ம் தைக்கச் சொல்லி டைலரிடம் துணி கொடுத்திருந்தேனே.... வாங்கிட்டீங்களா.....? எங்க வச்சிருக்கிறீங்க....? அவனுக்கு அளவு சரியா இருக்கான்னு போட்டுப் பார்க்கனும்“ என்றாள்.
   “ஓ அதுவா....? சாரி பாவனா. மறந்துட்டேன். நைட் வரும் போது மறக்காம வாங்கிக்கினு வந்திடுறேன். டைலர்க்கு லேட்டா வருவேன்னு போன் பண்ணி சொல்லிடு. பாய்....“ அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டான். பாவனா கவலையுடன் ரிசிவரை அதனிடத்தில் வைத்தாள்.

    இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கள் நுழைந்தவனிடமிருந்து மது வாடை அப்பட்டமாக வீசியது. வந்ததும் “பிள்ளைகள் எங்கே?“ என்று கேட்டான்.
   “நாளைக்கு ஸ்கூல் தொடங்குது இல்லையா? அதுதான் சீக்கிரமா சாப்பாடு கொடுத்துப் படுக்க வச்சிட்டேன்“ என்றவள், அவனின் வெறுங்கையைப் பார்த்துவிட்டு, “எங்கங்க கருணாவோட யூனிபார்ம்?“ கேட்டாள்.
   “ஐயோ..... மறந்துட்டேன் பாவனா. நாளைக்கு மறக்காம வங்கின்னு வர்றேன்“ என்றான் தலையைச் சொரிந்தபடி.
   “நாளைக்கு ஸ்கூல் பஸ்ட் டேங்க. முதல் நாளே பிள்ளை ஏமாற்றமாவா ஸ்கூல் போகனும்.....?“ பொறுக்காமல் கேட்டாள்.
   “என்ன பெரிய ஏமாற்றம்....? ஒரு நாள்ல எதுவும் ஏமாற்றம் வந்திடாது“ என்றான் அலட்சியமாக சாரங்கன்.
   “என்னங்க இப்படி சொல்லுறீங்க. நான் ஊரிலிருந்து ஒவ்வொரு முறை பேசும் போதும் சொல்லிக்கினே தானே இருந்தேன். அப்படியும் எப்படிங்க உங்களுக்கு மறக்கும்? பிள்ளைங்களைப் பத்தி கொஞ்சமாவது அக்கரை காட்டுறீங்களா....?“ என்றாள் சற்றுக் கோபமாக.
   “வந்ததும் தொடங்கிட்டியா....? கொஞ்ச நாளா உன் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தேன்.“ தலையில் கைவைத்தபடி சோபாவில் அமர்ந்தான்.
   பாவனா. முட்டிய வேதனையை விழுங்கிவிட்டு,
   “ஏங்க உட்காராதீங்க. நான் டைலர்கிட்ட பேசிட்டேன். ராத்திரி என்னேரமா இருந்தாலும் வாங்கன்னு சொன்னார். போய் கையோட வாங்கிக்கினு வந்திடுங்க“ என்றாள் சற்றுக் கெஞ்சளாக.
   “என்னால இப்போ வெளியில போக முடியாது. நாளைக்கு மறக்காம வாங்கினு வர்றேன்...“ என்றவன் தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்பித்தான்.
   “ஸ்கூட்டரில் போயிட்டு வர்ற பதினஞ்சு நிமிஷம் கூட ஆகாது. நானும் உங்க கூட வர்றேன். வாங்க போய் வாங்கினு வந்திடலாம்...“ என்று சொல்லியபடி தொலைக்காட்சியை நிறுத்தினாள்.
   “சே. நீ இருந்தா இந்த வீட்டுல கொஞ்ச நேரம் டீவிக் கூட நிம்மதியா பார்க்க முடியாது. ஏன்தான் திரும்பி வந்தியோ.... காலையில நடந்த ஆக்ஸிடெண்டுல நீயும் போய் சேர்ந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். என் உசிரை வாங்கவே திரும்பி வந்திருக்கிற“ என்று கத்தினான்.
   அவன் சொன்ன வார்த்தையின் வலியில் மனம் உடைய கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்தபடி, “சரி நானே போய் வாங்கிக்கினு வந்திடுறேன்.“ என்று கிளம்பினாள்.
   “போவறதுக்கு முன்னாடி எனக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டு போ“ என்றான்.
   “வனிதா.... மாமாவுக்கு சாப்பாடு போடு. நான் டைலர் வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்.....“ என்று சமையலறையை நோக்கிக் குரல் கொடுத்தபடி வெளியில் இறங்கி நடந்தாள் பாவனா.
   அப்போது தான் சமையலறையிலிருந்து வெளிபட்ட வனிதாவைச் பார்த்தான் சாரங்கள். மன நெருடலை உணர்ந்தான்.
   “வா வனிதா. எப்படி இருக்கிற? நீ வர்றதா பாவனா சொல்லவே இல்லையே“ என்றான் சிரிப்பை வரவழித்துக் கொண்டு.
   “அப்படி சொல்லி இருந்தா உங்களோட உண்மையான சுயரூபம் தெரிந்திருக்காதே. உங்களைப் பத்தி என் அக்கா ஊருல எவ்வளவு உயர்வா சொல்லி இருக்கிறா தெரியுமா? காலையில வந்த பஸ் ஆக்ஸிடெண்டாயிடுச்சி என்றதும் ஊருல தெரிஞ்சவங்க ஒருத்தர் விடாம போன் மேல போன் போட்டு என்னாச்சி? எப்படியாச்சி? ஏதாவது அடிபட்டதான்னு துடிச்சி போய் விசாரிச்சாங்க. ஆனால் உண்மையிலேயே துடிக்க வேண்டிய நீங்க, அவளைப் போய் ஆக்ஸிடெண்டுல போய் சேர்ந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ன்னு வாய் கூசாம சொல்லுறீங்களே.... அவளைச் சாக சொல்லுற அளவுக்கு அப்படி என்ன தப்பு செஞ்சிட்டா என் அக்கா?“ கோபத்துடன் கேட்டாள் வனிதா.
   அவளின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாத சாரங்கன், “தோ பாரு வனிதா.... இது எங்களுக்குள்ள நடக்கிற சண்டை. இதுல நீ தலையிடாத“ என்றான்.
   “நான் தலையிட கூடாது தான். ஆனால் இதை மட்டும் சொல்லிடுறேன்.. ஒரு மனைவியால்  கணவனுக்கு நிம்மதி இல்லை என்றால் அந்த பெண் செத்தால் தான் நிம்மதி கிடைக்கும் என்பதில்லை. அவளை விவாகரத்து செய்துவிட்டு கூட நீங்கள் நிம்மதியா இருக்கலாம். அதே சமயம் அவளும் நிம்மதியா இருப்பாள்.“ என்றாள். கோபமாக.
   “ம்.... அப்போ உன் அக்காவுக்கு விவாகரத்து வேண்டும்ன்னு சொல்லுறீயா....?“ என்றான் ஏளனமாக.
   “நான் இப்படி சொல்ல வரலை. அதே சமயம் உங்களுக்கு அது தான் நிம்மதி தரும் என்றால் தாராளமாக செய்யுங்கள். சின்னச் சின்னப் பிரிவுகள் சில நேரங்களில் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நிரந்தர பிரிவு வலியைத் தான் கொடுக்கும். உங்களுக்கு அவளுடைய உயிர் துச்சமாகத் தெரியலாம். ஆனால் அவளுடைய குழந்தைகளுக்கு அவள் தான் எல்லாம். அதன் பிறகு தான் நீங்கள். ஒரு பெண்ணைத் தன்னுடைய நிம்மதிக்காக வார்த்தையால் தினம்தினம் சுட்டு சாகடிக்கிறதை விட பிரிந்து வாழ்வது எவ்வளவோ மேல்....“ என்று கோபமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வனிதா.
   அவளின் வார்த்தைகளில் உள்ள வலிமை புரிந்து பேசாமல் அமர்ந்து விட்டான் சாரங்கன்.

அருணா செல்வம்

09.08.2014

23 கருத்துகள்:

  1. சிறுகதையானாலும் நெத்தியடி கதை
    அருமை சகோதரியாரே
    இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.....

      உண்மை தான் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. சாரங்கன் போன்ற ஜனங்கள் மேல் கோபம்தான் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கோபம் தான். ஆனால் பாவனா போன்ற வெகுளிகள் இருக்கும் வரையில் என்ன செய்ய முடியும்?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு

  3. ///சின்னச் சின்னப் பிரிவுகள் சில நேரங்களில் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நிரந்தர பிரிவு வலியைத் தான் கொடுக்கும்.//
    உண்மை உண்மை ...உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடா..... ஒத்துக்கினிங்களா.....?

      உங்களின் “தேவதை“ இடுகையைப் படித்தப்பிறகு எதிரொலியாக எழுதிய கதை தான் இது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு

  4. //ஒரு பெண்ணைத் தன்னுடைய நிம்மதிக்காக வார்த்தையால் தினம்தினம் சுட்டு சாகடிக்கிறதை விட பிரிந்து வாழ்வது எவ்வளவோ மேல்....“ /// இந்த வரிகள் சொல்வதும் உண்மை உண்மை ...உண்மை ஆனால் சில வீடுகளில் இங்கு பெண் என்பதற்கு பதிலாக ஆண் என்று போட்டு வாசித்தால் அதுவும் பொருத்தமாகவே இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு பெண்ணை என்று எழுதுவதற்கு பதில் “ஒருவரை“ என்று தான்ட எழுதி இருக்க வேண்டும்.

      ஆனால்.... இப்படிபட்டக் கடுமையாக வார்த்தையைக் கொட்டுபவர்கள் பொதுவாக ஆண்களாகத் தான் இருக்கிறார்கள். என்ன செய்வது?

      மீண்டும் நன்றி “உண்மைகள்“

      நீக்கு

  5. //ஒரு பெண்ணைத் தன்னுடைய நிம்மதிக்காக வார்த்தையால் தினம்தினம் சுட்டு சாகடிக்கிறதை விட பிரிந்து வாழ்வது எவ்வளவோ மேல்....“ /// இந்த வரிகள் சொல்வதும் உண்மை உண்மை ...உண்மை ஆனால் சில வீடுகளில் இங்கு பெண் என்பதற்கு பதிலாக ஆண் என்று போட்டு வாசித்தால் அதுவும் பொருத்தமாகவே இருக்கும்

    பதிலளிநீக்கு
  6. வலிதரும் வார்த்தைகள் .. குடிவெறியில் புரியுமா?/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடிவெறி என்றும் சொல்ல முடியாது......

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  7. இப்படியும் இருப்பதால் தான் பேச வேண்டியதாய்ப் போகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதை பாராட்டாது விட்டாலும் பரவாயில்லை.
      கெட்டதைச் சுட்டிக் காட்டியே ஆகவேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. கதையின் முடிவில் கொடுத்த தீர்ப்பு மிகச் சிறப்பானதே ! அருமையான
    படைப்பு வாழ்த்துக்கள் என் தோழியே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. நான் இப்படி சொல்ல வரலை. அதே சமயம் உங்களுக்கு அது தான் நிம்மதி தரும் என்றால் தாராளமாக செய்யுங்கள். சின்னச் சின்னப் பிரிவுகள் சில நேரங்களில் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நிரந்தர பிரிவு வலியைத் தான் கொடுக்கும். உங்களுக்கு அவளுடைய உயிர் துச்சமாகத் தெரியலாம். ஆனால் அவளுடைய குழந்தைகளுக்கு அவள் தான் எல்லாம். அதன் பிறகு தான் நீங்கள். ஒரு பெண்ணைத் தன்னுடைய நிம்மதிக்காக வார்த்தையால் தினம்தினம் சுட்டு சாகடிக்கிறதை விட பிரிந்து வாழ்வது எவ்வளவோ மேல்...//

    மிகச் சரியான வார்த்தைகள்! உண்மையான வார்த்தைகள்! அருமையான கதை! முடிவும் அருமை! சாரங்கனுக்குப் பொளேர்!

    பதிலளிநீக்கு
  10. *** “ஓ.... அப்படியா...? பசங்க நல்லா இருக்காங்களா....?“ கேட்டான்.

    “நாங்க பஸ்சுல நடுவுல உட்காந்துட்டோம். எங்களுக்கு ஒன்னும் ஆகலை. ஆனால் முன்னாடி இருந்தவங்க... டிரைவருக்கெல்லாம் நல்ல அடி. ஆம்புலன்சுல அழைச்சிக்கினு போனாங்க. நிறைய ரத்தம் போயிடுச்சி.... உயிருக்கு.....“
    அவள் சொல்லி முடிக்கவில்லை. “சரி சரி விடு. நான் வேலை முடிச்சிட்டு பிரெண்டோட ஒரு பார்ட்டிக்குப் போறேன். ராத்திரி எட்டு மணிக்கு மேல தான் வருவேன். இதை சொல்ல தான் போன் பண்ணினேன்“ என்றான்.****

    நம்ம ஹீரோ மஹா மட்டமான ஆம்பளையா இருப்பாரு போல இருக்கு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக்கதையில் வந்த ஹீரோ மஹா மட்டமான ஆம்பளை தான்.....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி வருண் சார்.

      நீக்கு
  11. ம்ம்ம்.... இப்படியும் சில மனிதர்கள்.... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கத்தான் செய்கிறார்கள்....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  12. விழிப்புணர்வைத் தரும் பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு