Sunday, 28 July 2013

மாற்றம்!! (நிமிடக் கதை)
   கொஞ்ச நாட்களாக தன் கணவனின் போக்கில் ஏதோ மாற்றம் தெரிவது போல் உணர்ந்தாள் சகுந்தலா. திருமணமாகி இந்த இருபத்தைந்து வருடத்தில் இப்பொழுது தான் இந்த மாற்றம்!!
   வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு டை அடித்துக் கொள்வதும், டீசர்ட் போட்டு கொள்வதும், ஏதோ தன்னை இளைஞனாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பது போல் நடையில் ஒரு மிடுக்கைக் கொண்டு வருவதும், அலுவலகம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பிவிடுவதும்.... இதெல்லாம் போன இரண்டு மாதத்திற்கு முன்பு கூட இல்லை.
    இந்த இரண்டு மாதமாகத் தான் இப்படி ஒரு மாற்றம். என்னவாக இருக்கும்? யோசித்தாள். யோசித்தவள் தொலை பேசியை எடுத்து அவன் வேலையின் எண்களை அழுத்தினாள். எதிர் முனையில் “ஹலோ...“ எப்பொழுதும் பேசும் கோபாலன் குரல் இல்லாமல், அந்தப் பெண்ணின் குரலிலேயே அழகு தெரிந்தது.
    போனை வைத்துவிட்டு கோபாலன் வீட்டிற்கு எண்களை அழுத்தினாள். எதிர் முனையில் கோபாலன் மனைவியிடம், “என்னம்மா உன் கணவர் வேலைக்குப் போகலையா...?“ கேட்டாள்.
    “இல்லைம்மா. அவருக்கு இங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே வேலை கிடைச்சிடுச்சி. அதனால அந்த வேலையை விட்டுட்டு இங்கத்தான் ரெண்டு மாசமா வேலைக்குப் போறார். சார் சொல்லலைங்களா...?“ அவள் கேட்க, கணவனை விட்டுக்கொடுக்க முடியாமல் “ம்... சொன்னாரு. நான் தான் மறந்துட்டேன்“ என்றபடி போனை வைத்தாள்.
    அலுவலகத்தில் நடக்கும் மாற்றங்களை ஒன்று விடாமல் உடனே தன்னிடம் சொல்லி விடும் கணவன் இதை ஏன் தன்னிடம் சொல்லவில்லை....? யோசித்து முடிவெடுத்தாள்.

   அவள், அவள் கணவனின் அலுவலகத்தில் நுழைந்த போது, அவன் ஓர் அழகான இளம்பெண்ணிடம் ஏதோ ஒரு தாளைக் காட்டிச் சிரித்துச் சிரித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் சற்று தயக்கத்துடனும், பயத்துடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
    அருகில் வந்து நின்ற இவளை அங்கே கண்டதும் அவனின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அவளைப் பார்த்தாள். அவள் கையிலிருந்த தாள்களில் கவனத்தைச் செலுத்தியபடி தன் வேலையில் கவனமாக இருந்தாள்.
   “நீ எங்க இங்க?“ குரலில் சற்று அதிர்ச்சி கலந்த கோபமும் தெரிந்தது.
   “இங்க பக்கத்தல தான் ஷாப்பிங் வந்தேன். என் கிரெடிட் கார்டை மறந்து வீட்டில வச்சிட்டு வந்துட்டேன். அதான் உங்ககிட்ட வாங்கிக்கலாம்ன்னு வந்தேன்.“ கூசாமல் பொய் சொன்னாள்..
   “வெளியே போறதுக்கு முன்னாடியே யோசிக்கிறது இல்ல. இப்ப பாரு. சரி. ஆபிஸ் ரூமுல தான் இருக்கு. வா. எடுத்துத் தர்றேன்.“
   அவன் பின்னாலே போய் கார்டை வாங்கிக் கொண்டவள், “ஏங்க யாரு அந்த பொண்ணு புதுசா...?“ கேட்டாள்.
   “அந்த பொண்ணா.... பேரு வசந்தா. கோபால் வேலையை விட்டு போயிட்டான். அந்த இடத்துல இந்த பொண்ணு தான் வேலை செய்யுது. பாவம் ஏழை பொண்ணு.“ குரலில் அனுதாபம்.
   “வேலையில எந்த மாற்றமானாலும் எங்கிட்ட சொல்லுவீங்க. ஆனால், கோபால் வேலையை விட்டுட்டு போனதையோ... இந்த பொண்ணு வேலைக்குச் சேர்ந்ததையோ எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லவே இல்லையே நீங்க. ஏன்...?“ அவள் கேட்டதும்....
   “ஏதாவது டென்ஷன்னுல மறந்துட்டு இருப்பேன். ஏன் எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லனுமா?“ கடுகடுப்பாக கேட்டான்.
   அவனின் கோபம் புரிந்தது.
   “அதுக்கில்லைங்க. அந்த பொண்ணைப் பார்த்தா... இருபது வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பெண் குழந்தை இறந்தே பிறந்துதே... அந்த குழந்தை ஞாபகம் வருதுங்க. அந்த குழந்தை இருந்திருந்தால் இந்த பொண்ணு வயசு தான் இருக்கும்.  ஏழை பொண்ணுன்னு சொன்னீங்க. அவளுக்குக் கல்யாணம் கூடினா... இவளை நம்ம பொண்ணா நினைச்சி இவளுக்கு வேண்டியதைச் செய்யலாங்க...“ என்றாள் குரல் தழுதழுக்க.
    அவள் பேச்சைக் கேட்டு சற்று நேரம் அசையாமல் நின்றிருந்த சுரேந்தர், தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான். அவளுக்கு இருந்த இந்த மனம் நமக்கில்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டு, “சரிமா... கவலைப்படாதே. நீ சொன்னது போலவே செஞ்சிடலாம்“ என்றான்.
    இப்பொழுது இருவருக்கும் மனம் இலேசாகியது.

அருணா செல்வம்.
29.07.2013

(நட்புறவுகளே.... கதையைக் கடகடவென்று ஒரு நிமிடத்திற்குள் வாசித்து விடுங்கள். இதை விட இக்கதையை என்னால் சுறுக்க முடியவில்லை. அதனால் தான். ஹி ஹி ஹி..)