வெள்ளி, 16 நவம்பர், 2012

பாட முடியாமல் போனப் பாட்டு!!





நட்புறவுகளுக்கு வணக்கம்.
   கடந்த 11.11.2012 அன்று பிரான்சு கம்பன் கழகத்தில் நடந்த கவியரங்கத்தில் நான் வாசிக்க வேண்டிய பாடல் இது. ஆனால் அன்று மாலை 6.30-க்குத்தான் இந்தியாவிலிருந்து விமான நிலையத்திற்கு வந்திறங்கினேன்.
    அவசரமாக விழாவிற்கு வருவதற்குள் கவியரங்கம் முடிந்துவிட்டது. அதனால் அங்கே என் கவிதையை வாசிக்க முடியாமல் போய்விட்டது. சற்று வருத்தம் தான். இருப்பினும் அக்கவிதையை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன்.
நன்றி.

 கம்பன் அணிந்த அணி
    கருணை!!

அன்பு பொங்க பெற்றெடுத்த
    அன்னை அன்பை அளந்துவந்து
இன்பம் பொங்கும் இவ்வுலகில்
    இதுதான் என்றே இயம்பிவிட்டால்
நன்..பண் படைத்தக் கம்பனிடம்
    நானும் கருணை அளவென்றே
என்..பண் மூலம் எடுத்துரைத்தே
    இந்த அவையில் முழங்கிடுவேன்!

கருணைக் கடலாய் உள்ளவிடம்
    கம்பன் கவியில் எதையெடுப்பேன்?
ஒருமை மனத்தால் ஆராய்ந்தே
    ஒருநற் கருத்தை எடுத்ததனைப்
பெருமை பொங்கும் இவ்வவையில்
    பேசும் மொழியால் தருகின்றேன்!
அருமை கவியில் குறையிருந்தால்
    அவையோர் என்னைப் பொறுத்திடுக!

கருணை உள்ளம் காண்கின்ற
    கண்கள் வழியே உரைத்துவிடும்!
கரு..மை உள்ளம் பழகியப்பின்
    காலம் ஒருநாள் காட்டிவிடும்!
திருவை ஒத்த உள்ளத்தைத்
    தீய வழியில் மாற்றியதால்
இரும்பாய் இதயம் இருந்திருந்தும்
    இராவ ணன்வீழ் வையறிவோம்!

நிகராய் அவனுக்(கு) இயம்பிவிட
    நிலத்தில் யாரும் பிறக்கவில்லை!
சிகரம் போன்றே உயர்ந்திருந்தும்
    சிறுநற் கருணை கொண்டிருந்தால்
நகரம் நாட்டை இழக்காமல்
    நலமாய் அவனும் வாழ்ந்திருப்பான்!
அகத்தில் கருணை அற்றதினால்
    அரிய போரில் தனிமையுற்றான்!

அன்று அவனின் நிலையறிந்தே
    அயோத்தி இராமன் சொல்கின்றான்.
“இன்று போய்நா ளைவாராய்!“
    இங்கே கொஞ்சம் ஆராய்ந்தால்
கம்பன் கருணைச் சிறப்பதனின்
    கருத்து மனத்துள் நின்றுவிடும்!
அன்பின் ஆழம் சிலநேரம்
    ஆய்ந்து பார்க்கப் புரிந்துவிடும்!

எதிரி வீழ்வே போரிட்டே
    எதையும் இழந்து நின்றபின்னே
உதிரி எதற்கோ என்றெண்ணி
    உடனே அவனை அழித்திடலாம்!
கதிரைப் போன்ற கருணையினால்
    கம்பன் அவனை அழிக்காமல்
மதியால் சொன்ன வார்த்தையிங்கு
    மாண்பாய்க் கருணைப் புரிகிறதே!

கருணைக் கொண்ட உள்ளங்கள்
    கடவுள் வாழும் இல்லங்கள்!
அருமை பெருமை என்பதெல்லாம்
    அன்பிற்(கு) உள்ளே அடக்கங்கள்!
இருமை வாழ்வை ஆராய்ந்தே
    இயல்பாய்ச் சொன்னக் கருத்துள்ளே
கருணை உணர்வைக் கட்டியதும்
    கம்பன் அணிந்த அணியாகும்!

அருணா செல்வம்
11.11.2012

28 கருத்துகள்:

  1. //கருணைக் கொண்ட உள்ளங்கள்
    கடவுள் வாழும் இல்லங்கள்!
    அருமை பெருமை என்பதெல்லாம்
    அன்பிற்(கு) உள்ளே அடக்கங்கள்!//

    அழகான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தாங்கள் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கே வருத்த்மாகத்தான் உள்ளது.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ஆதங்கத்திற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  2. கவிதையில் கலக்கும் கவிதாயினி வாழ்க

    பதிலளிநீக்கு
  3. அருமை... வரிகள் சிறப்பு... எங்களுக்காக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  6. அருமையான கவிதை... கவியரங்கம் உங்கள் அருமையான கவிதையை தவறிவிட்டது... எங்களுக்காக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆயிஷா.

      நீக்கு
  7. கவிச்சக்கரவர்த்திக்கு
    ஓர் அற்புத பாமாலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  8. கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது .தவறிய சந்தர்ப்பம்
    மீண்டும் கிட்ட வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வருடம் வேறு கவிதை படிக்க வேண்டியது தான்....

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. பதில்கள்

    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தமிழன்.

      நீக்கு
  10. மிக மிக அருமையான கவிதை
    கவி அரங்கில் பாடப்பட்டிருந்தால்
    நிச்சயம் கூடுதல் சிறப்புப் பெற்றிருக்கும்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்

    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  12. கருணைக் கொண்ட உள்ளங்கள்
    கடவுள் வாழும் இல்லங்கள்!
    >>
    எல்லா மனிதருக்குள்ளும் கருணை வந்துட்டா போர், சண்டை, குழப்பம் இல்லாம தெளிந்த நீரோடையா போகும் வாழ்க்கை எல்லாருக்கும்...,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்து உண்மைதான் தோழி.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு

  13. அழகிய கவிதையை நீங்கள் படிக்கக் கேட்கும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  14. ஆயிரம் விதமாக புரட்டிப்போட்டாலும் அன்புக்கு மாற்றமேயில்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் உண்மை தான் என் இனிய தோழி ஹேமா.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  15. ஆசிரியர் எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்,
    அதில் தங்கள் பெயர் கண்டேன்.
    இங்கு கவிதையை எதிர்பார்த்தேன். கவிதை சிறப்பு.
    இனிய நல்வாழ்த்து.

    பதிலளிநீக்கு