வியாழன், 16 டிசம்பர், 2021

வஞ்சி என்செய்வாள் ?

 

.
அன்பு நிறைந்த அன்னை உருவாக
      அன்று கண்டாள் அருமை மனத்தினிலே !
இன்பச் சொற்கள் இணைந்து குழைவாக
       என்றும் கேட்கும் என்றே நினைத்திருந்தாள்!
துன்பம் துயரம் எனுஞ்சொல் அவரிடையே
       துளியும் தொடுமா  என்றும் இறுமாந்தாள் !
வன்மைக் காலம் வந்தத் தடமில்லை !
       வகையாய் பிரிந்தார் ! வஞ்சி என்செய்வாள் ?
.
ஏக்கம் கொண்ட மனத்தை உள்மறைத்தே
       ஏதும் அறியா தவளாய் சிரித்திருப்பாள் !
தூக்கங் கெட்டுத் துவளும் உடல்வெளுத்தும்
       துணிவைப் போர்த்தி துள்ளி வலம்வருவாள் !
ஆக்கம் பொழியும் பண்ணில் பொருள்சேர்த்தே
      அமைதி யாகப் பாடி விழித்திருப்பாள் !
நோக்க மில்லாக் குருட்டு நெஞ்சுடையான்
       நூலில்  புழுவாய் புதைந்து மகிழ்ந்திருப்பான் !
.
தூது சொல்ல தோழி இல்லையென்று
       துணையாய்ப் பண்ணைத் தொடுத்துப் பறக்கவைப்பாள் !
ஏது மறியா தவன்போல் படித்தாலும்
       எழுத்த றிவற்ற மூடன் போலிருப்பான் !
ஓதும் பாடம் வேத மெனஒலிப்பான் !
       உய்யும் வாழ்வில் பேதம் காட்டிடுவான் !
மாது மயங்கி மாலை நினைத்தழுவாள்
      மயக்கும் கவியுள் அவனைப் பதிக்கவைத்தே !
.
(அரையடிக்கு மா + மா + மா + காய் என்ற சீரமைந்த எண்சீர் விருத்தம்)
.
பாவலர் அருணா செல்வம்
17.12.2021

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எழுத்தின் வண்ணத்தை மாற்றினால் ரசிப்பதற்கு எளிது...

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் தனபாலன் அண்ணா. வண்ணத்தை மாற்ற முடியவில்லை. அதனால் இப்பதிவை நீக்கலாம் என்று நினைக்கின்றேன்.
அனைத்தப் பதிவுகளையும் படித்தி நீங்கள் கருத்திடுவது எனக்கு உர்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி,